Type Here to Get Search Results !

மதுரையில் முழு ஊரடங்கு நீட்டிப்பு? வாலிபருக்கு கொரோனா தொற்று எதிரொலி: தனி வார்டில் பணியில் இருந்த டாக்டர்கள் உள்பட 56 பேருக்கு பரிசோதனை

மதுரையில் முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? என்பது குறித்து புதிய தகவல் வெளியாகி உள்ளது.
கொரோனா பரவுதலை கட்டுப்படுத்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கடந்த 26-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை சென்னை, கோவை மற்றும் மதுரை மாநகராட்சி பகுதிகளில் முழு ஊரடங்கை அறிவித்தார்.

இந்த முழு ஊரடங்கின் போது அனைத்து கடைகளும், சந்தைகளும் அடைத்திருக்கும். பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று அறிவிப்பு செய்யப்பட்டது.

மதுரையில் இதன் காரணமாக சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன. 3-ம் நாளான நேற்றும் மதுரையில் முழு அமைதி நிலவியது. அத்தியாவசிய பணியில் ஈடுபடும் ஊழியர்களை தவிர சாலைகளில் யாரையும் காண முடியவில்லை. பால் விற்பனை நிலையங்கள் மற்றும் மருந்தகங்கள் மட்டுமே செயல்பட்டன. காய்கறிகள் மாநகராட்சி வாகனங்களில் கொண்டு வந்து விற்பனை செய்யப்பட்டன. முதல்-அமைச்சரின் அறிவிப்புப்படி இந்த ஊரடங்கு இன்றுடன் (புதன்கிழமை) முடிவடைகிறது.

ஆனால் இதனை நீட்டிக்க வாய்ப்பு இருப்பதாகவே தெரிகிறது. அதுகுறித்து அதிகாரிகள் நேற்று ஆலோசனை நடத்தினர். மதுரையில் இதுவரை மொத்தம் 79 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். 40 பேர் குணமாகி வீடு திரும்பினர். 37 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கண்காணிப்பில் இருக்கின்றனர். மேலும் கொரோனா தொற்று ஏற்பட்ட 12 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு, அங்கும் தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நேற்றைய பரிசோதனை முடிவின்படி மதுரையில் யாருக்கும் புதிதாக கொரோனா தொற்று ஏற்படவில்லை. இது அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலை நீடிக்க வேண்டுமென்றால் மதுரையில் மேலும் முழு ஊரடங்கினை நீட்டிக்க வேண்டும் என்று சுகாதார துறையினர் வலியுறுத்தி வருகின்றனர்.

இதற்கிடையில் முதல்-அமைச்சர், மாவட்ட கலெக்டர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் இன்று காலை 10 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார். அப்போது முழு ஊரடங்கு குறித்து விவாதிக்கப்படும் என தெரிகிறது. அதன்பின் மதுரையில் முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா அல்லது தளர்த்தப் படுமா என்பது குறித்த முக்கிய அறிவிப்பு வெளியிடப்படும். ஆனால் தற்போதைய சூழ்நிலையில் மதுரையில் முழு ஊரடங்கு நீட்டிக்கவே அதிகம் வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

ஒருவேளை முழு ஊரடங்கு மதுரையில் நீட்டிக்கப்பட்டால், மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும். ஏனென்றால் 4 நாட்கள் முழு ஊரடங்கு என்ற அறிவிப்பின்படி பொதுமக்கள் அந்த நாட்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை மட்டுமே வாங்கி கையிருப்பு வைத்திருப்பர். மேலும் காய்கறி விற்பனை மாநகராட்சி மூலம் தான் செய்யப்படுகிறது. ஆனால் இவை அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைக்க வாய்ப்பில்லை. மளிகை பொருட்களும், காய்கறியும் கிடைக்காதபட்சத்தில் மக்களுக்கு அது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

புதுக்கோட்டை வாலிபருக்கு கொரோனா தொற்று எதிரொலி: தனி வார்டில் பணியில் இருந்த டாக்டர்கள் உள்பட 56 பேருக்கு பரிசோதனை
மிரட்டுநிலை வாலிபருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் தனி வார்டில் பணியில் இருந்த டாக்டர்கள் உள்பட 56 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

தொற்று உறுதி

புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடக்கத்தில் கொரோனா வைரஸ் தொற்று இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் மிரட்டுநிலை கிராமத்தில் டெல்லி சென்று வந்த ஒருவரின் மகனுக்கு கொரோனா தொற்று உறுதியானது. அவருக்கு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கொரோனா தொற்று உறுதியாவதற்கு முன்பு அந்த வாலிபர் புதுக்கோட்டை ராணியார் மருத்துவமனையில் தனி வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது பணியில் இருந்த டாக்டர்கள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு கொரோனா பரிசோதனை நடத்த மருத்துவமனை அதிகாரிகள் திட்டமிட்டனர்.

பரிசோதனை

இதைத்தொடர்ந்து புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வெளிநோயாளிகள் பிரிவில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு பரிசோதனை அறையில் நேற்று இந்த பரிசோதனை நடந்தது. ஊழியர்கள் பாதுகாப்பு கவச உடையுடன் இந்த பரிசோதனையை மேற்கொண்டனர். இதுகுறித்து மருத்துவமனை முதல்வர் டாக்டர் மீனாட்சி சுந்தரம் கூறியதாவது:-

புதுக்கோட்டை ராணியார் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் கடந்த 18, 19-ந் தேதிகளில் மிரட்டுநிலை கிராமத்தை சேர்ந்த வாலிபர் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அந்த இரு தினங்களும் பணியிலிருந்த நபர்களுக்கு நோய் தொற்று பரிசோதனையை 5 தினங்களில் இருந்து 14 தினங்களுக்குள் செய்ய வேண்டும் என்ற நடைமுறை உள்ளது. அதன்படி சிறப்பு பரிசோதனை அறையில் 14 டாக்டர்கள், 14 செவிலியர்கள், 19 தூய்மை பணியாளர்கள் மற்றும் பாதுகாவலர்கள் ஆகிய 47 நபர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் 10 நாட்களுக்குள் பிரசவிக்க கூடிய 9 கர்ப்பிணி தாய்மார்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டது.

யோகா பயிற்சி

இதில், 56 பேரின் ரத்த மாதிரிகள் மருத்துவக்கல்லூரி வளாகத்திலேயே புதிதாக தொடங்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு முக கவசம் வெளிநோயாளிகள் பிரிவில் வழங்கப்படுகிறது.

டாக்டர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் விதமாக யோகா செய்முறை பயிற்சிகளும் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த பரிசோதனையின் போது நிலைய மருத்துவ அதிகாரி இந்திராணி, உதவி நிலைய மருத்துவ அதிகாரி ரவிநாதன், காது, மூக்கு, தொண்டை நிபுணர் டாக்டர் ராயப்பன் குமார், தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க தலைவர் சலீம் அப்துல் குத்தூஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.

56 பேருக்கும் தொற்று இல்லை

இந்த நிலையில் டாக்டர்கள் உள்பட 56 பேருக்கும் பரிசோதனை முடிவு அறிக்கை நேற்று மாலை வெளியானது. இதில் 56 பேருக்கும் கொரோனா தொற்று இல்லை என முதல்வர் மீனாட்சிசுந்தரம் தெரிவித்தார்.

ஆத்தூர் வங்கி அதிகாரியின் கர்ப்பிணி மனைவிக்கு கொரோனா: வங்கியை பூட்டிய சுகாதாரத்துறை அதிகாரிகள்
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தை சேர்ந்த 38 வயதுடைய ஒருவர் ஆத்தூரில் உள்ள ஒரு வங்கியில் உதவி மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சேலம் சூரமங்கலத்தில் உள்ள ஒரு வங்கியில் கிளார்க்காக பணி புரிந்து வருகிறார். இவர்கள் சேலம் சூரமங்கலத்தில் தங்கி இருந்து பணிக்கு சென்று வந்தனர்.

இந்த நிலையில் ஆத்தூர் வங்கி அதிகாரியின் மனைவி கர்ப்பம் அடைந்தார். இதைத்தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் அவர் கோட்டயம் பகுதியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். தற்போது அவர் 6 மாத கர்ப்பமாக உள்ளார். இதனிடையே அவரை பார்க்க வங்கி அதிகாரி கடந்த 14-ந் தேதி மோட்டார் சைக்கிளில் கேரளா சென்று உள்ளார். அங்கு 2 நாட்கள் தங்கி இருந்து விட்டு ஆத்தூருக்கு திரும்பி வந்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே கேரளாவில் வசித்து வந்த வங்கி அதிகாரியின் கர்ப்பிணி மனைவிக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. தனது மனைவிக்கு தொற்று இருப்பதை அறிந்து அவர் தாமாக முன்வந்து கொரோனா பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார். அவருக்கு சளி, ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு கூடத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இது குறித்த தகவல் ஆத்தூர் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று சுகாதாரத்துறை அதிகாரிகள், சம்பந்தப்பட்ட அதிகாரி பணியாற்றிய வங்கிக்கு சென்றனர். அங்கு பணியாற்றிய அலுவலர்கள் 11 பேரையும் வங்கியில் இருந்து வெளியேறக்கூறினர். பின்னர் வங்கி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. தொடர்ந்து சுகாதாரத்துறை அதிகாரிகள் வங்கியை பூட்டினார்கள்.

மேலும் வங்கி அலுவலர்கள் 11 பேருக்கும் கொரோனா தொற்று உள்ளதா? என்று சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்யப்பட உள்ளது என்றும், எனவே வங்கி அலுவலர்கள் அனைவருக்கும் விடுமுறை அளிக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

வங்கி அதிகாரியின் மனைவிக்கு கொரோனா தொற்று இருந்ததால் வங்கியை அதிகாரிகள் பூட்டிய சம்பவம் ஆத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனாவில் இருந்து குணமடைந்த மேலும் 5 பேர் வீடு திரும்பினர்ஆசாரிபள்ளத்தில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 6 ஆக குறைந்தது
ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் கொரோனா பாதிப்பில் இருந்து விடுபட்ட மேலும் 5 பேர் வீடு திரும்பினர். இதனால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 6 ஆக குறைந்தது.

குமரி மாவட்டத்தில் 16 பேர் கொரோனாவால் பாதிக் கப்பட்டு இருந்தனர். அவர்களில் ஒன்றிரண்டு பேராக நேற்று முன்தினம் வரை 7 பேர் குணமடைந்திருந்தனர். இதில் 5 பேர் வீடு திரும்பி இருந்தனர். நாகர்கோவில் வெள்ளாடிச்சிவிளையைச் சேர்ந்தவரும், அவருடைய 4 வயது மகனும் குணமடைந்தபிறகும் ஆஸ்பத்திரியிலேயே இருந்தனர். ஏனென்றால் இவர்களது குடும்பத்தினர் தொடர் சிகிச்சையில் இருந்தனர். இதனால் 9 பேர் தொடர் சிகிச்சையில் இருந்து வந்தார்கள்.

இந்தநிலையில் வெள்ளாடிச்சிவிளையைச் சேர்ந்தவரின் மனைவி, மற்றொரு மகன், தாயார், 88 வயது பாட்டி ஆகிய 4 பேருக்கு நேற்று முன்தினம் மீண்டும் பரிசோதனை செய்யப்பட்டது. அடுத்த 24 மணி நேரத்தில் செய்ய வேண்டிய 2-வது பரிசோதனை நேற்று மாலை நடந்தது. இதில் வெள்ளாடிச்சிவிளையை சேர்ந்தவரின் தாயாரை தவிர மற்ற 3 பேருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என பரிசோதனை முடிவில் தெரிய வந்தது. ஏற்கனவே குணமாகி இருந்த 2 பேருடன் சேர்த்து 5 பேருமாக நேற்று இரவு வீடு திரும்பினர். அவர்களை வழியனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நேற்று இரவு ஆஸ்பத்திரி வளாகத்தில் நடந்தது.

அப்போது ஆஸ்பத்திரி டீன் சுகந்தி ராஜகுமாரி அனைவருக்கும் பழங்கள் வழங்கி, வாழ்த்தி வழியனுப்பி வைத்தார். அப்போது டாக்டர்கள், நர்சுகள், மருத்துவ பணியாளர்கள் அனைவரும் கரவொலி எழுப்பியும், வாழ்த்தியும் அனுப்பி வைத்தனர். அவர்கள் 5 பேரும் டாக்டர்களுக்கும், நர்சுகளுக்கும் நன்றி தெரிவித்து புறப்பட்டுச் சென்றனர். நிகழ்ச்சியில் முன்னாள் டீன் ராதாகிருஷ்ணன், உறைவிட மருத்துவ அதிகாரி ஆறுமுகவேலன், டாக்டர் பிரின்ஸ்பயஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அவர்கள் 5 பேரும் வீட்டுக்கு சென்றபிறகும் 14 நாட்கள் தங்களை தாங்களே தனிமை படுத்தி கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனால் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 6 ஆக குறைந்துள்ளது. நேற்றும் 50-க் கும் மேற்பட்டோருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டன. ஆனால் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை. இதற்கிடையே குமரி மாவட்டத்தைச் சேர்ந்த ரெயில்வே ஊழியருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது. அவரது குடும்பத்தினர் 8 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அவர்கள் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியானது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad