Type Here to Get Search Results !

சூர்யா, ஜோதிகா - திரையரங்கு உரிமையாளர்கள் பிரச்னையை பேசித் தீர்க்க அரசு முடிவு; பாரதிராஜா உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்கள் OTTக்கு ஆதரவு

சூர்யா, ஜோதிகா - திரையரங்கு உரிமையாளர்கள் பிரச்னையை பேசித் தீர்க்க அரசு முடிவு - அமைச்சர் கடம்பூர் ராஜு
நடிகை ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள் திரைப்படம் OTT  மூலமாக நேரடியாக ஆன்லைனில் வெளியிடுவதற்கு திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து சூர்யா மற்றும் ஜோதிகா நடிக்கும் திரைப்படங்கள், அவர்கள் சார்ந்த தயாரிப்பாளர்கள் தயாரிக்கும் திரைப்படங்களை இனி வெளியிட மாட்டோம் என்று திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினர்  தெரிவித்திருந்தனர்

இதுகுறித்து தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளர்கள் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூவிடம் கேட்டபோது “பாதிக்கப்படுகின்றவர்கள் (திரையரங்கு உரிமையாளர்கள்) அவர்கள் கருத்தினை கூறியுள்ளனர். இது திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் திரையரங்கு உரிமையாளர்களுக்கான பிரச்னை.  இது தொடர்பாக திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினை தொலைபேசியில் அழைத்து பேசியுள்ளேன்.

இரு தரப்பினரும் அமர்ந்து பேச வேண்டிய பிரச்னை என்பதால் இரு தரப்பும் பேசி தீர்க்க அரசு உதவி செய்யும். இந்த விஷயத்தில் முதல்வரின் ஆலோசனை பெற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், “திரைப்பட நல வாரியத்தை சேர்ந்த 7,459 பேருக்கு தலா ரூ.1000 வழங்கியுள்ளோம். இதில் விடுபட்டவர்களுக்கு பத்திரிகையின் வாயிலாக தகவல் தெரிவித்துள்ளோம். திரைப்பட நலவாரியத்தில் பதிவு பெற்றவர்கள், தங்களது பதிவு எண்ணையும், தங்களது வங்கிக் கணக்கு எண்ணையும் திரைப்பட நிலவரத்தை நேரடியாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமோ தெரிவித்தால் விடுபட்ட அனைவருக்கும் வழங்கப்படும்” .என்றார்.

பாரதிராஜா உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்கள் ஆதரவு
இனி வரவிருக்கும் சூழ்நிலையில் ரிலீஸ் செய்ய சிரமப்பட உள்ள பல சிறிய மற்றும் மீடியம் பட்ஜெட் படங்களை OTT நிறுவனங்கள் பிரீமியர் செய்வதற்கும் வாங்க கோர வேண்டும்.

ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் திரைப்படத்தை OTT தளத்தில் வெளியிடுவதற்கு திரையரங்க உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், பாரதிராஜா உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்கள் ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, “திரைப்பட தயாரிப்பு அதிகம் ரிஸ்க் உள்ள ஒரு துறை. அதில் ஆர்வத்துடனும் நம்பிக்கையுடனும் இன்று நிறைய தயாரிப்பாளர்கள் திரைப்படம் எடுத்து வருகிறார்கள். அவர்களில் சிறிய மற்றும் மீடியம் பட்ஜெட் பட தயாரிப்பாளர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் ஏராளம். அவர்கள் ஒரு படத்தை எடுத்து முடித்தாலும் அப்படத்தை வெளியிட யாரும் முன் வருவதில்லை.

அப்படியே வெளியிட்டாலும் அப்படங்களுக்கு திரையரங்கு மற்றும் ஷோ கிடைக்காமல் பல தயாரிப்பாளர்கள் பாதிக்கப்பட்டு வந்துள்ளார்கள். இத்தகைய பிரச்சனைகள் பெரிய நடிகர்கள்-இயக்குனர்கள் படங்களுக்கு அதிகம் இல்லை.

இன்றைய சூழ்நிலையில் தொழில்நுட்பம் வளர்ந்து OTT (OVER THE TOP) மூலம் புதிய படங்கள் நேரடியாக வெளிவரும் முறை உலகெங்கும் உள்ள நிலையில், தற்போது பிரபல OTT நிறுவனங்கள் சிறு மற்றும் மீடியம் பட்ஜெட் படங்களை வாங்கி, நேரடியாக வெளியிட முன் வந்திருப்பதை நாம் அனைவரும் வரவேற்க வேண்டும்.

இந்தி, தெலுங்கு மற்றும் பல மொழி திரைப்படங்களை இந்த கொரோனா லாக் டவுன் சூழ்நிலையில் அங்குள்ள தயாரிப்பாளர்கள் அவர்களின் முதலீட்டை எப்படியாவது எடுத்துவிட OTT நிறுவனங்கள் மூலம் முயற்சி செய்து வருகிறார்கள். இவ்வாறு படங்கள் நேரடியாக வெளியிடுவதன் மூலம் திரையரங்கில் வெளியாக காத்திருக்கும் படங்களின் எண்ணிக்கையும் குறையும். அவைகள் சரியான முறையில் வெளியாகவும் முடியும்.

இவ்வாறு பல நன்மைகள் விளையக்கூடிய இந்த OTT ப்ரீமியரை தமிழ் சினிமாவில் உள்ள நாம் அனைவரும் வரவேற்று, மேலும் இனி வரவிருக்கும் சூழ்நிலையில் ரிலீஸ் செய்ய சிரமப்பட உள்ள பல சிறிய மற்றும் மீடியம் பட்ஜெட் படங்களை OTT நிறுவனங்கள் பிரீமியர் செய்வதற்கும் வாங்க கோர வேண்டும்.மேலும் முதலீடு செய்யும் ஒரு தயாரிப்பாளருக்கு அப்படத்தை எல்லா விதங்களிலும் வியாபாரம் செய்ய அனைத்து உரிமையும் உள்ளது என்று தற்போது திரைப்படங்கள் எடுத்துவரும் தயாரிப்பாளர்களாகிய நாங்கள் தெரிவித்து கொள்கிறோம். திரைப்பட துறை வளமாக இயங்க அனைத்து தரப்பினரும் (தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள்) ஒருங்கிணைத்து பணியாற்ற வேண்டும், முடிவுகளை எடுக்க வேண்டும்.

தனிப்பட்ட எந்த சங்கமும் தன்னிச்சையாக எந்த ஒரு தயாரிப்பாளரையும் பாதிக்கும் முடிவுகளை எடுத்து அறிவிக்க வேண்டாம் என்று இந்த நேரத்தில் கேட்டு கொள்கிறோம். இந்த கொரோனா லாக் டவுன் முடிந்தவுடன் அனைத்து சங்கத்தை சேர்ந்தவர்களும் கலந்தாலோசித்து, விவாதித்து, இதற்கான (OTT படங்கள்) வரைமுறைகளை வகுத்து, தமிழ் சினிமா வளமாக செயல்பட, சரியான முடிவுகளை எடுக்க வேண்டும் என்று அனைவரையும் கேட்டு கொள்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad