Type Here to Get Search Results !

வடமாநில தொழிலாளர்களுக்கு 2-ம் கட்ட மருத்துவ பரிசோதனை - மாவட்ட கலெக்டர் பொன்னையா ஆய்வு

வாலாஜாபாத் அருகே 2-ம் கட்ட மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்று வருகிறது. மருத்துவ பரிசோதனையை மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரசால் 8 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததில் 6 பேர் வீடு திரும்பினர். தற்போது 2 பேர் மட்டுமே ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தநிலையில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகளில் வடமாநிலத்தவர்கள் 37 ஆயிரத்து 500 பேர் பணிபுரிந்து வரும் நிலையில், அவர்களுக்கு மார்ச் முதல் வாரத்தில் முதல் கட்ட மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இது மட்டுமில்லாமல் எழிச்சூர் பகுதியில் உள்ள தொழிலாளர் நல வாரிய தங்கும் விடுதியில் 300-க்கும் மேற்பட்டோர் தங்கி உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் 7 மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டு 140 இடங்களில் தங்கியுள்ளவர்களுக்கு 2-ம் கட்ட மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்றது வருகிறது.

வாலாஜாபாத் அடுத்த ஊத்துக்காடு பகுதியில் உள்ள தொழிற்சாலை விடுதியில் தங்கியுள்ள வட மாநில தொழிலாளர்களுக்கு செய்யப்படும் 2-ம் கட்ட மருத்துவ பரிசோதனையை மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதன்பின்னர் அவர் செய்தியாளரிடம் பேசுகையில், காஞ்சீபுரம் மாவட்டத்திற்கு கொரோனா வைரஸ் பாதிப்புள்ளதா என்பதை எளிதில் கண்டறிய உதவும் 300 ரேபிட் டெஸ்ட் கருவிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதிக பாதிப்பு உள்ள பகுதிகளான நான்கு மண்டலங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இக்கருவி மூலம் பரிசோதனை மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது வாலாஜாபாத் துணை ஆர்.டி.ஓ. ஜெயக்குமார், வருவாய் ஆய்வாளர் சங்கீதா, டாக்டர் தனசேகரன் உடன் இருந்தனர்.

மாவட்டத்தில், ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படாது - கலெக்டர் அறிக்கை
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படாது என்று கலெக்டர் கிரண்குராலா அறிவித்துள்ளார். இது தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் கிரண்குராலா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய அரசு பிறப்பித்த ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவு இன்று(திங்கட்கிழமை) முதல் தளர்த்தப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்தி பகிரப்பட்டு வருகிறது.

ஆனால் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை பொறுத்தவரையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக தடை உத்தரவு தளர்வு தொடர்பாக முறையான அறிவிப்பு வெளியிடப்படும் வரை அடுத்த மாதம்(மே) 3-ந்தேதி வரை ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் அனைத்தும் எவ்வித மாற்றமும் இன்றி அமலில் இருக்கும்.

நெல்லையில் நவீன முறையில் கொரோனாவை கண்டறியும் பரிசோதனை - கலெக்டர் ஷில்பா தொடங்கி வைத்தார்
நெல்லையில் நவீன முறையில் கொரோனா தொற்றை கண்டறியும் பரிசோதனையை கலெக்டர் ஷில்பா தொடங்கி வைத்தார். இதற்காக 1,000 நவீன கருவிகள் நெல்லைக்கு வந்துள்ளன.

நெல்லை மாவட்டத்தில் கொரோனா வைரசால் 60 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் நெல்லை ரெட் அலார்ட் மாவட்டமாக அடையாளப்படுத்தப்பட்டு உள்ளது. எனவே, நெல்லை மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருக்கிறதா? என்பதை கண்டறிய, அவரை நெல்லை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று அங்கு மட்டுமே பரிசோதனை செய்து முடிவு தெரிவிக்கப்படுகிறது. ரத்த, சளி மாதிரியை பரிசோதனை செய்ய 3 மணி நேரம் ஆகிறது.

இதை விரைவுபடுத்தவும், அவரவர் பகுதிக்கு நேரடியாக சென்று அங்கேயே ரத்த மாதிரி எடுத்து பரிசோதனை செய்யவும் ‘ரேபிட் டெஸ்ட் கிட்‘ எனப்படும் நவீன கருவி சீனாவில் இருந்து தமிழகத்துக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. இதில் நெல்லை மாவட்டத்துக்கு 1,000 நவீன கருவிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன. அந்த கருவிகள் நேற்று முன்தினம் இரவு நெல்லைக்கு வந்து சேர்ந்தன.

இந்த கருவிகள் மூலம் கொரோனா பரிசோதனை செய்யும் பணி நேற்று தொடங்கியது. நெல்லை மேலப்பாளையம் மாநகராட்சி மண்டல அலுவலக வளாகத்தில் இதற்காக முகாம் அமைக்கப்பட்டிருந்தது. அதில் கலெக்டர் ஷில்பா கலந்து கொண்டு நவீன கருவி மூலம் பரிசோதனையை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் கண்ணன், அரசு ஆஸ்பத்திரி முன்னாள் டீன் கண்ணன், மாநகர நல அலுவலர் சதீஷ்குமார், சுகாதார பணிகள் துணை இயக்குனர் வரதராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து போலீசாருக்கும், கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் தெருக்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கும் நவீன கருவி மூலம் பரிசோதனை செய்யப்பட்டது.

பின்னர் கலெக்டர் ஷில்பா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கிறதா? என்று ரேபிட் டெஸ்ட் கிட் மூலம் பரிசோதனை செய்யும் பணி தொடங்கப்பட்டு உள்ளது. நடமாடும் மாதிரி சேகரிப்பு வாகனம் மூலம் அவரவர் இருக்கும் இடத்துக்கே சென்று மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்படும்.

அப்போது வைரஸ் இருக்கிறதா? என்று தெரியவரும். இதில் பாசிட்டிவ் இருந்தாலும் கொரோனா இருக்கிறது என்று உறுதியாக சொல்லிவிட முடியாது. சம்பந்தப்பட்ட நபரை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்று அடுத்தகட்ட ‘பி.சி.ஆர்.‘ பரிசோதனை மேற்கொள்ளப்படும். நடமாடும் பரிசோதனை வேன்கள் உள்ளன. இந்த வேன் களில் குழுவினர் சென்று பரிசோதனை மேற்கொள்வார்கள்.

நெல்லை மாவட்டத்தில் இதுவரை 60 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதில், ஏற்கனவே 23 பேர் குணமடைந்து வீட்டுக்கு சென்று, அங்கு தங்களை தனிமைப்படுத்தி இருக்கிறார்கள். அவர்களுக்கு 14 நாட்கள் கழித்து மறுபடியும் பரிசோதனை செய்யப்படும். அதில் கொரோனா இல்லை என்பது உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் பூரண குணமடைந்து விட்டனர் என்று முடிவு செய்யப்படும்.

இதுதவிர வெளியூர்களில் இருந்து வந்த 3,500 பேர் 28 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளனர். தற்போது மருத்துவ அவசரத்துக்காக பிற பகுதிகளில் இருந்து பலர் வருகின்றனர். சோதனைச்சாவடிகளில் அவர்களது விவரங்களை சேகரித்து, அவர்களுக்கும் பரிசோதனை செய்யப்படுகிறது.

நெல்லை மாவட்டத்தில் பத்தமடை, களக்காடு, வள்ளியூர், மேலப்பாளையம், கிருஷ்ணாபுரம், கோடீசுவரன் நகர், கே.டி.சி. நகர், பேட்டை, டார்லிங் நகர் ஆகிய 9 பகுதி கட்டுப்படுத்துதல் பகுதியாக உள்ளது.

9 கட்டுப்பாட்டு பகுதியில் யாரும் வெளியே வரக்கூடாது. 1,000 ரேபிட் கிட் மூலம் 1,000 பேருக்கு மட்டுமே சோதனை செய்ய முடியும். இவை தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கும் பரிசோதனைக்கு பயன்படுத்தப்படும். மேலும் புதிய ரேபிட் கருவிகள் அடுத்தடுத்து வரும். கடந்த 2 வாரத்தில் மட்டும் 1,200 பேருக்கு ‘பி.சி.ஆர்.‘ பரிசோதனை செய்து உள்ளோம். மற்ற பகுதிகளில் இந்த அளவுக்கு பரிசோதனை செய்தது கிடையாது. ஆஸ்பத்திரிக்கு வரக்கூடிய அறிகுறி இருப்பதாக வரும் நோயாளிகள் மற்றும் மூச்சுத்திணறல் உள்ள அனைவருக்கும் பி.சி.ஆர். சோதனை செய்யப்பட்டு உள்ளது. நெல்லையில் கர்ப்பிணிகள், நீரிழிவு நோயாளிகள், காய்ச்சல் உள்ளவர்களின் விவரங்களை சேகரித்தது போல் மாவட்டம் முழுவதும் அனைத்து வீடுகளிலும் ஆய்வு நடத்த திட்டமிட்டு உள்ளோம்.

இந்த கருவி மூலம் பரிசோதனை செய்வது எளிமையாக உள்ளது. ஒருவருடைய கை விரலில் ஊசியால் குத்தி ரத்த மாதிரியை சேகரிக்கிறார்கள்.

பின்னர் ரேபிட் கிட் எனப்படும் கருவியில் ரத்த மாதிரியை செலுத்தப்படுகிறது. அதில் காணப்படும் வேறுபாடுகளை கொண்டு கொரோனா அறிகுறி உள்ளதா? இல் லையா என்பது கண்டுபிடிக்கப்படுகிறது. ஒரு கருவி ஒருவருக்கு மட்டுமே பரிசோதனை செய்ய பயன்படுத்தப் படுகிறது.

கொரோனா தடுப்பு நடவடிக்கை: புளியங்குடியில் கலெக்டர் ஆய்வு - 20 பேரை தனிமைப்படுத்திய போலீசார்
புளியங்குடியில் நடைபெற்று வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை, மாவட்ட கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் நேற்று ஆய்வு செய்தார். வெளியே சுற்றிய 20 பேரை போலீசார் பிடித்து தனிமைப்படுத்தினர்.

தென்காசி மாவட்டம் புளியங்குடியில் ஏற்கனவே 15 பேர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் புளியங்குடியில் கொரோனா பாதிக்கப்பட்டுள்ளவர்கள் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது.

இதைத்தொடர்ந்து போலீசார் கடும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

தடையை மீறி வீட்டை விட்டு வெளியே சுற்றிய 20 பேரை நேற்று போலீசார் பிடித்து தனிமைப்படுத்தியுள்ளனர். புளியங்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு சக்திவேல், இன்ஸ்பெக்டர்கள் அலெக்ஸ் ராஜ், ஆடிவேல் ஆகியோர் கூறியதாவது:-

புளியங்குடி பகுதி 9 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் கள் அப்பகுதிக்கு தேவைப்படும் எல்லா பொருட்களும் கிடைக்கின்றனவா என்பதையும், வீட்டை விட்டு யாரும் வெளியே வராமல் இருப்பதை உறுதி செய்யும் பணியிலும் ஈடுபடுவர்.

அத்தியாவசிய அவசர உதவி தேவைப்பட்டால் அந்த சப்-இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார், தன்னார்வலர்கள் உதவி செய்வார்கள். இதற்கென 50 தன்னார்வ தொண்டர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் எனவும், அப்படி வெளிவந்தால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்வதுடன் அவரை தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளனர்.

இப்பணிகள் அனைத்தும் முறையாக நடைபெறுகிறதா? யாரும் வெளியே வராமல் உள்ளனரா? என்பதை கண்காணிப்பதற்காகவும், மேலும் நோய் பரவாமல் தடுக்கும் வகையிலும் போலீசார் மூலம் குழு அமைக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தொடர்பு கொள்வதற்கு வசதியாக புளியங்குடி பஸ்நிலையத்தில் போலீசார் சார்பில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. 7708453108, 7708906108, 7395898108 ஆகிய செல்போன் எண்களில் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு மக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய உதவிகள், மருத்துவ உதவிகளை கேட்டு பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புளியங்குடி நகரசபை அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை, மேலும் அப்பகுதிகளில் நடைபெற்றுவரும் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் நேற்று ஆய்வு செய்தார்.

தென்காசி உதவி கலெக்டர் பழனிகுமார், தாசில்தார் அழகப்பாராஜா, நகரசபை ஆணை யாளர் குமார் சிங், பொறியாளர் சுரேஷ், சுகாதார அலுவலர் ஜெயபால்மூர்த்தி, சுகாதார ஆய்வாளர்கள் வெங்கட்ராமன், ஈஸ்வரன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

கீழக்கரை முதியவர் இறுதி சடங்கில் பங்கேற்ற 252 பேருக்கு கொரோனா தொற்று இல்லை - ராமநாதபுரம் கலெக்டர் தகவல்
கீழக்கரையில் கொரோனாவினால் இறந்த முதியவரின் இறுதிச் சடங்கில் பங்கேற்ற 252 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக ராமநாதபுரம் கலெக்டர் தெரிவித்தார். இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் கூறியதாவது:-

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த 71 வயது முதியவர் ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை அரசு மருத்துவமனையில் உயிரிழந்ததை தொடர்ந்து, அவரது உடல் சொந்த ஊரான கீழக்கரைக்கு கொண்டு வந்து அடக்கம் செய்யப்பட்டது. அதன் பின்புதான் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதனால் இறுதிச்சடங்கில் பங்கேற்ற அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர்.


இந்த நிலையில் இறந்த முதியவரின் குடும்பத்தினர் இருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. பின்பு அவர்கள் சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் இறந்தவரின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற 252 பேருக்கு ரத்தம், சளி மாதிரி எடுத்து பரிசோதனை செய்ததில் அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட மண்டபம், ஆனந்தூர் பகுதிகளில் கலெக்டர் ஆய்வு
கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட மண்டபம், ஆனந்தூர் பகுதிகளில் கலெக்டர் வீரராகவ ராவ் நேரில் ஆய்வு செய்தார்.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் மற்றும் ஆனந்தூர் பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து அப்பகுதியில் கூடுதலாக ஏற்படுத்தப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கலெக்டர் வீரராகவ ராவ் நேரில் ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:- முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வெளிநாடுகளில் இருந்து இதுவரை ராமநாதபுரம் மாவட்டத்திற்கு 4 ஆயிரத்து 777 பேர் திரும்பியுள்ளனர். இவர்களில் 4 ஆயிரத்து 681 பேர் தனிமைப்படுத்தும் காலம் நிறைவடைந்து கொரோனா தொற்று அறிகுறி இல்லாமல் நலமுடன் உள்ளனர். தற்போதைய நிலவரப்படி 96 பேர் அவரவர் குடும்பத்தாருடன் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 737 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் 10 நபர்களுக்கு கொரோனா தொற்று உள்ளது எனவும், 301 நபர்களுக்கு தொற்று இல்லை எனவும் உறுதி செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 426 நபர்களுக்கான பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள பரமக்குடி, கமுதி, மண்டபம், ஆனந்தூர் ஆகிய பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளை சுற்றி சுமார் 7 கிலோ மீட்டர் சுற்றுவட்டாரத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சுகாதாரத்துறை அலுவலர்கள் களப்பணியில் ஈடுபடுத்தப்பட்டு பொதுமக்களுக்கு நோய் அறிகுறி குறித்து தொடர்ந்து 14 நாட்களுக்கு களஆய்வுப்பணி மேற்கொள்ளப்படுகிறது.

கொரோனா வைரஸ் குறித்து வதந்தி பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின்போது ராமநாதபுரம் சப்-கலெக்டர் சுகபுத்ரா, சுகாதாரத்துறை துணை இயக்குனர் அஜித் பிரபுகுமார், மண்டபம் பேரூராட்சி செயல் அலுவலர் ஜெகநாதன், ஆர்.எஸ்.மங்கலம் தாசில்தார் சாந்தி, உதவி செயற்பொறியாளர்கள் மாடசாமி, சுந்தர்ராஜன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

நாகை மாவட்டத்தில்நடமாடும் வேளாண் விரிவாக்க மையங்கள்கலெக்டர் தகவல்
நாகை மாவட்டத்தில் விவசாயிகளுக்கு தேவையான வேளாண்மை இடுபொருட்கள் கிடைக்கும் வகையில் நடமாடும் வேளாண் விரிவாக்க மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

நாகை மாவட்டத்தில் விவசாயிகளுக்கு தேவையான வேளாண்மை இடுபொருட்கள் கிடைக்கும் வகையில் நடமாடும் வேளாண் விரிவாக்க மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என கலெக்டர் பிரவீன்நாயர் கூறினார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாகை மாவட்டத்தில் தற்போது குறுவை நெல் சாகுபடி பணி நடைபெற்று வருகிறது. குறுவை மற்றும் சித்திரைப்பட்டத்திற்கு தேவையான நெல், உளுந்து, எண்ணெய்வித்து விதைகள் அரசு வேளாண் விரிவாக்க மையங்களில் தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில் வேளாண்மை பணிகள் அத்தியாவசிய பணிகளாக கருதப்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு வேளாண்மை துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதன்படி ஊரடங்கு காலத்தில், விவசாயிகளுக்கு தேவையான வேளாண் இடுபொருட்கள் அவர்களின் கிராமங்களிலேயே கிடைக்க வாகனங்கள் மூலம் நடமாடும் வேளாண் விரிவாக்க மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் விவசாயிகள் உரக்கடைகளை நாடி செல்வதில் உள்ள சிரமங்களை கருத்தில் கொண்டு சில இடங்களில் விவசாயிகளின் இருப்பிடங்களுக்கே சென்று நேரடியாக உரங்கள் விற்பனை செய்யப்படுகிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad