Type Here to Get Search Results !

பணம் வைத்து சூதாடிய 26 பேர் கைது; தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் 7¼ பவுன் நகை பறிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணம் வைத்து சூதாடிய 26 பேர் கைது
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் டவுன் போலீசார் தொரப்பள்ளி - கொல்லப்பள்ளி சாலையில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய கொத்தூரைச் சேர்ந்த ரமேஷ் (வயது 36), மணி (23), தொரப்பள்ளி சர்தார் (34) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2,050 பறிமுதல் செய்யப்பட்டது.

ஓசூர் அட்கோ போலீசார் கதிரேப்பள்ளி கிருஷ்ணசாமி கோவில் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய அதே பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் (39), வெங்கடேசன் (35), கிருஷ்ணமூர்த்தி (23), ரமேஷ் (40), மூர்த்தி (32), மஞ்சுநாத் (20) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.5,050 பறிமுதல் செய்யப்பட்டது.

மத்திகிரி போலீசார் பூனப்பள்ளி ஏரி பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடியதாக அதேபகுதியை சேர்ந்த வினய் (29), கிருஷ்ணன் (36), சந்தோஷ் (30), அசோக் (39), விஸ்வநாத் (33), ராமண்ணா (32), பிரசாத் (29), ரவி (40), வெங்கடேஷ் (36) ஆகிய 9 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2,200 பறிமுதல் செய்யப்பட்டது.

கந்திகுப்பம் போலீசார் தாண்டவன்பள்ளம் அருகே நக்கல்குட்டை பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய வரட்டனப்பள்ளி மேல் தெருவை சேர்ந்த சிவக்குமார் (29), கணேசன் (40), சங்கர் (45), சக்தி (36) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.240 பறிமுதல் செய்யப்பட்டது.

அஞ்செட்டி போலீசார் தக்கட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடியதாக பி.ராசிபுரத்தைச் சேர்ந்த மாதேவா (38), முனிராஜ் (45), மணி (28), முனியப்பா (35) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.750 பறிமுதல் செய்யப்பட்டது.

திட்டக்குடி அருகே, தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் 7¼ பவுன் நகை பறிப்பு - மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள நிதிநத்தம் மேலத்தெருவை சேர்ந்தவர் சக்தி குமார். விவசாயி. இவருடைய மனைவி சுகந்தி (வயது 26). இவர் தனது குடும்பத்தினருடன் நேற்று முன்தினம் இரவு தனது மாடி வீட்டின் முன்பகுதியில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தார்.

அப்போது நள்ளிரவு 12 மணியளவில் முகமூடி அணிந்து வந்த மர்மநபர்கள் 2 பேர், சுகந்தியின் கழுத்தில் கிடந்த நகையை பறிக்க முயன்றனர். இதில் திடுக்கிட்டு எழுந்த சுகந்தி திருடன்... திருடன்... என சத்தம் போட்டார். இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு விரைந்தனர். அதற்குள் மர்மநபர்கள் சுகந்தியின் கழுத்தில் கிடந்த 7¼ பவுன் நகையை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றனர். பறிபோன நகையின் மதிப்பு ரூ.2¼ லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதேபோல் அதே பகுதியில் வசிக்கும் விவசாயி சுப்பிரமணியன் (48) என்பவருடைய வீட்டின் பின்பக்க கதவை திறந்து உள்ளே புகுந்த மர்மநபர்கள் வீட்டில் இருந்த பீரோவை உடைத்து ரூ.15 ஆயிரம் மற்றும் அங்கிருந்த தகர பெட்டியில் வைத்திருந்த ரூ.5 ஆயிரம், வெள்ளி ஆகியவற்றையும் மர்மநபர்கள் திருடிச்சென்றுள்ளனர்.

இதுகுறித்து ஆவினங்குடி போலீசாருக்கு தனித்தனி புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் திட்டக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன் மற்றும் போலீசார் சம்பவ இடங்களுக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை-பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

ஒரே நாளில் அடுத்தடுத்து நகை-பணம் திருட்டு நடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகிரி அருகே, திருமண ஆசை வார்த்தை கூறி இளம்பெண்ணை ஏமாற்றியவர் கைது
தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள வடுகப்பட்டியை சேர்ந்தவர் கணேசன் (வயது 30). விவசாய கூலிதொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், சிவகிரி பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுக்கும் இடையே 8 வருடங்களாக நட்பு இருந்ததாக கூறப்படுகிறது. இது காதலாக மாறி இருவரும் கணவன்-மனைவி போன்று பல இடங்களுக்கு சென்று வந்துள்ளனர்.

இந்தநிலையில் சம்பவத்தன்று கணேசன், அந்த இளம்பெண்ணின் வீட்டுக்கு சென்று தங்கி இருந்து உள்ளார். இதை பார்த்த அந்த பகுதி மக்கள் நள்ளிரவில் வீட்டின் கதவை திறந்து அவர்கள் சேர்ந்து இருந்ததை பார்த்து பிடித்தனர். பின்னர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே சங்கரன்கோவில் மகளிர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து அவர்கள் 2 பேரையும் அழைத்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையின் போது, எனக்கு இவள் யாரென்றே தெரியாது. இவளுக்கும். எனக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது என்று கணேசன் கூறியுள்ளார். அதற்கு அந்த பெண், என்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி என்னுடன் பழகினார். தற்போது என்னை திருமணம் செய்ய மறுக்கிறார் என்றார்.

இதுகுறித்து அந்த பெண், சிவகிரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கணேசனை கைது செய்து, சிவகிரி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

மதுரை கருப்பாயூரணியில் தூக்க மாத்திரை கலந்த பானத்தை கள் என ஏமாற்றி விற்பனை; 4 பேர் சிக்கினர்
ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதால் திருட்டுத்தனமான சாராய விற்பனை தமிழகம் முழுவதும் தலையெடுத்துள்ளது. மேலும் கள் விற்பனையும் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது.

இதனை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் மதுரை கருப்பாயூரணி வீரவாஞ்சன், ஓடைப்பட்டி பகுதிகளில் பிளாஸ்டிக் பாட்டில்களில் நிரப்பி கள் விற்பதாக கருப்பாயூரணி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

உடனே இன்ஸ்பெக்டர் மாடசாமி மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஓடைப்பட்டி கோமதிபுரம் பகுதியில் ராம்குமார், சேகர், மணிகண்டன், ஈஸ்வரன் ஆகியோரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில் அவர்கள், பதநீரில் போதை மாத்திரை கலந்து புதிய பானம் தயாரித்து, அதனை ‘கள்’ என்று ஏமாற்றி விற்று வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். தூக்க மாத்திரை கலந்த 130 லிட்டர் பானத்தை பறிமுதல் செய்தனர்.

இதே போல் கூடல்புதூர் பகுதியில் கள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்ற போது அந்த பகுதியில் சந்தேகப்படும் படியாக நின்றிருந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் ஆனையூர் பகுதியை சேர்ந்த சிவராஜ், லட்சுமிகாந்தன், ஜெகன் என்பதும், அவர்கள் கள் இறக்கி விற்பனை செய்ததும் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad