Type Here to Get Search Results !

மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை; வெளிமாநிலங்களிலிருந்து தர்மபுரிக்கு திரும்பிய 1,803 பேருக்கு கொரோனா பரிசோதனை: கலெக்டர்

மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும்  மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு முடிவுக்கு வர இன்னும் சில தினங்களே எஞ்சியுள்ள சூழலில், கொரோனா வைரஸ் பரவல் இன்னும் கட்டுக்குள் வந்தபாடில்லை.


தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்த நிலையில்,  தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி 19 பேர் கொண்ட மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். மருத்துவக் குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் ஊரடங்கு நீட்டிப்பது குறித்து முதல்வர் முடிவு செய்வார் என்று கூறப்படுகிறது.

கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக முதல்வர் பழனிசாமி மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார். மே 3-ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் முதல்வர் ஆலோசனை நடத்தி வருகிறார்.

வெளிமாநிலங்கள், மாவட்டங்களிலிருந்து தர்மபுரிக்கு திரும்பிய 1,803 பேருக்கு கொரோனா பரிசோதனை
வெளிமாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து தர்மபுரி மாவட்டத்திற்கு திரும்பிய 1,803 பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது என்று கலெக்டர் மலர்விழி தெரிவித்து உள்ளார்.

தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தமிழக அரசின் வழிகாட்டுதல்படி சுகாதார துறை, காவல்துறை, வருவாய் துறை, ஊரக வளர்ச்சி துறை உள்ளிட்ட அனைத்து துறைகளும் இணைந்து தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. தர்மபுரி செட்டிக்கரையில் உள்ள அரசு பொறியியல் கல்லூரி தற்காலிக மருத்துவமனையாக மாற்றப்பட்டு 24 மணிநேரமும் செயல்பட்டு வருகிறது. இந்த தற்காலிக மருத்துவமனையை கலெக்டர் மலர்விழி பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

தர்மபுரி மாவட்ட எல்லைகளில் 10 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள சோதனை சாவடிகள் வழியாக வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் மற்றும் காய்ச்சல், இருமல் பாதிப்பு உள்ளவர்கள் செட்டிக்கரை அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் உள்ள தற்காலிக மருத்துவமனையில் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்படுகிறார்கள். இங்கு அவர்களுக்கு தனி அறை, மூன்று வேளையும் சத்தான உணவு, முக கவசம் வழங்கப்பட்டுள்ளது. அங்கு தங்கியிருப்பவர்களுக்கு கொரோனா நோய் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்ட பின் உரிய மருத்துவ ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகளை வழங்கி அவர்கள் வசிக்கும் இடங்களுக்கு அனுப்பப்படுகிறார்கள்.

இந்த தற்காலிக மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டவர்களில் யாருக்காவது கொரோனா அறிகுறிகள் ஏதேனும் தென்பட்டால் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கொரோனா சிறப்பு சிகிச்சை பிரிவில் 1,450 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு தயார் நிலையில் உள்ளன.

வெளிநாடுகள், வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து தர்மபுரி மாவட்டத்திற்கு திரும்பிய 1,803 பேரை தனிமைப்படுத்தி கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இவர்களில் 1,415 பேர் ஆண்கள், 388 பேர் பெண்கள். வெளி மாநிலங்களிலிருந்து வந்த 505 பேரில் 237 பேர் வாகன டிரைவர்கள் ஆவார்கள். இவர்களில் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை.

இவ்வாறு கலெக்டர் மலர்விழி கூறினார்.

அப்போது சுகாதார பணிகள் துணை இயக்குனர் ஜெமினி, தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் பூவதி, நலப்பணிகள் இணை இயக்குனர் ஸ்டீபன்ராஜ் மற்றும் அரசு டாக்டர்கள் உடனிருந்தனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad