Type Here to Get Search Results !

விழுப்புரம் மாவட்டத்தில் அரசு டாக்டர் உள்பட 2 பேருக்கு கொரோனா; டெல்டா மாவட்டங்கள் சிவப்பில் இருந்து ஆரஞ்சு மண்டலத்தை நோக்கி நகருமா?

விழுப்புரம் மாவட்டத்தில் அரசு டாக்டர் உள்பட 2 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்தது
விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்றினால் நேற்று முன்தினம் வரை 48 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். இவர்களில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர், அரிசி ஆலை அதிபர் என 2 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.

23 பேர் பூரண குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மற்ற 23 பேர் விழுப்புரம் முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

2 பேர் பாதிப்பு

இந்நிலையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களில் நேற்று 142 பேரின் மருத்துவ பரிசோதனை அறிக்கைகள் கிடைக்கப்பெற்றது. இவர்களில் 140 பேருக்கு நோய் தொற்று இல்லாத நிலையில் 29 வயதுடைய அரசு மருத்துவமனை டாக்டர் ஒருவருக்கும், 45 வயதுடைய காய்கறி வியாபாரி ஒருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்களில் அந்த டாக்டர் விழுப்புரம் நகர பகுதியை சேர்ந்தவர் ஆவார். இவர் விழுப்புரத்தில் உள்ள மாற்றியமைக்கப்பட்ட அரசு கொரோனா சிறப்பு மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். காய்கறி வியாபாரிக்கு சொந்த ஊர் விழுப்புரம் அருகே உள்ள வடகுச்சிப்பாளையம் கிராமமாகும்.

50 ஆக உயர்ந்தது

இதையடுத்து அவர்கள் இருவரும் முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களை டாக்டர்கள் தீவிரமாக கண்காணித்து உரிய சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இவர்கள் இருவருக்கும் எவ்வாறு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டது? என்றும், சமூக பரவலால் ஏற்பட்டதா? என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இவர்களோடு சேர்த்து தற்போது விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை கொரோனா நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது.

தடுப்புகள் அமைப்பு

கொரோனாவால் பாதிக்கப்பட்ட அரசு டாக்டர், காய்கறி வியாபாரி ஆகியோர் வசிக்கும் இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டு போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

திருவாரூரில், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 5 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்
திருவாரூரில், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 5 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட 128-ல் 85 பேர் வீடு திரும்பினர்:டெல்டா மாவட்டங்கள் சிவப்பில் இருந்து ஆரஞ்சு மண்டலத்தை நோக்கி நகருமா?
கொரோனாவால் பாதிக்கப்பட்ட 128 பேரில் 85 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். மேலும் கொரோனா தொற்று ஏற்படாததால் சிவப்பு மண்டலத்தில் இருந்து ஆரஞ்சு மண்டலத்தை நோக்கி டெல்டா மாவட்டங்கள் நகருமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

‘ஹாட்ஸ்பாட்’ மாவட்டங்கள்

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக அடுத்த மாதம்(மே) 3-ந் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஒரே மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 15-க்கும் மேற்பட்டவர்களுக்கு இருந்தால் அந்த மாவட்டங்கள் அதிகம் பாதிப்புக்குள்ளான ‘ஹாட்ஸ்பாட்’ மாவட்டங்களாக மத்திய அரசு வகைப்படுத்துகிறது. அந்த வகையில் தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய காவிரி டெல்டா மாவட்டங்களில் 15-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை தஞ்சை மாவட்டத்தில் 55 பேரும், நாகை மாவட்டத்தில் 44 பேரும், திரூவாரூர் மாவட்டத்தில் 29 பேரும் என மொத்தம் 128 பேர் பாதிக்கப்பட்டனர்.

சிவப்பு மண்டலம்

இதன் மூலம் 3 மாவட்டங்களும் சிவப்பு மண்டலத்துக்குள் வந்தது. ஆரம்ப காலகட்டத்தில் தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை.

நாளடைவில் வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள் மற்றும் டெல்லி சென்று வந்தவர்களிடம் நடத்திய பரிசோதனையில் கொரோனா தொற்று ஏற்பட்டது.

85 பேர் வீடு திரும்பினர்

இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் விவரம் தெரிந்தவுடன் அவர்கள் வசித்த பகுதிகள் ‘சீல்’ வைக்கப்படுவதுடன், சம்பந்தப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவக்குழுவினர் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

தஞ்சை மாவட்டத்தில் 55 பேரில் நேற்று வரை 35 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இன்னும் 20 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். திருவாரூர் மாவட்டத்தில் 29 பேரில் 16 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 13 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். நாகை மாவட்டத்தில் 44 பேரில் 34 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 10 பேரில் 8 பேர் திருவாரூர் மருத்துவமனையிலும், 2 பேர் வெளி மாவட்டங்களிலும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 3 மாவட்டங்களிலும் 85 பேர் வீடு திரும்பினர். தற்போது 43 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

14 நாட்கள்

தஞ்சை மாவட்டத்தில் கடந்த 6 நாட்களில் யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை. நாகை மாவட்டத்தில் கடந்த 8 நாட்களாக யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை. திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 7 நாட்களாக யாருக்கும் தொற்று ஏற்படவில்லை.

ஒரு மாவட்டத்தில் 14 நாட்கள் தொடர்ச்சியாக புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை என்றால் சிவப்பு மண்டலத்தில் இருந்து ஆரஞ்சு மண்டலமாக அந்த மாவட்டம் மாறும். அதன்படி டெல்டா மாவட்டங்களில் கடந்த 6 முதல் 8 நாட்களாக யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை. இது மக்களிடையே சற்று நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது.

ஆரஞ்சு மண்டலமாக மாறுமா?

மேலும் கொரோனா தொற்று பரவுவதை தடுக்க தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்ட கலெக்டர்களும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். கிருமிநாசினியும் தொடர்ந்து தெளிக்கப்பட்டு வருகிறது. இதனால் டெல்டா மாவட்டம் சிவப்பில் இருந்து ஆரஞ்சு மண்டலத்தை நோக்கி நகருமா? என்ற எதிர்பார்ப்பு டெல்டா மக்களிடையே ஏற்பட்டுள்ளது.

கொரோனாவுக்கு சிகிச்சை

திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த 14 பேர், நாகை மாவட்டத்தை சேர்ந்த 12 பேரும் என மொத்தம் 26 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இதில் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர், நாகை மாவட்டத்தை சேர்ந்த 4 பேர் என 5 பேர் முழுவதுமாக நோய் தொற்றில் இருந்து குணமடைந்தனர்.

இதனையடுத்து 5 பேரும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். முன்னதாக 5 பேரும் மருத்துவமனையின் வெளி நோயாளிகள் பிரிவு முன்பாக தனி, தனியாக அமர வைக்கப்பட்டு இருந்தனர். இதையடுத்து மருத்துவக்கல்லூரி முதல்வர் முத்துக்குமரன் தலைமையில் டாக்டர்கள், செவிலியர்கள் உற்சாகமாக கைத்தட்டி அவரவர் வீடுகளுக்கு தனி ஆம்புலன்ஸ் மூலமாக வழியனுப்பி வைத்தனர். குணம் அடைந்து வீட்டிற்கு திரும்புபவர்கள் அடுத்த 14 நாட்களுக்கு தனிமையில் இருக்கும்படி டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

வீடு திரும்பினர்

கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த 29 பேர், நாகை மாவட்டத்தை சேர்ந்த 42 பேர் என மொத்தம் 71 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் இதுவரை திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த 16 பேர், நாகை மாவட்டத்தை சேர்ந்த 34 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

இதனால் தற்போது திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த 13 பேர், நாகை மாவட்டத்தை சேர்ந்த 8 பேர் என 21 பேர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad