Type Here to Get Search Results !

சிவப்பு மண்டல பகுதிகளில் ஊரடங்கு தொடரும்; பிரதமர் மோடி; 150 சதவீத லாபத்தில் ரேபிட் டெஸ்ட் கிட் விற்பனை: ராகுல் காந்தி

சிவப்பு மண்டல பகுதிகளில் ஊரடங்கு தொடரும் என்று முதல்வர்களுடனான ஆலோசனையின் போது பிரதமர் மோடி கூறியதாக கூறப்படுகிறது.
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த இந்தியாவில் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு முடிய இன்னும் சில தினங்களே எஞ்சியுள்ள நிலையிலும் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலின் வேகம் கட்டுக்குள் வந்த பாடில்லை.


இந்த நிலையில்,  கொரோனா வைரஸ் விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி, இன்று  மாநில முதல்வர்களுடன் கலந்துரையாடினார். அப்போது, நாட்டில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மே 3 ஆம் தேதிக்குப் பிறகும் ஊரடங்கு உத்தரவு தொடர வாய்ப்புள்ளதாக  பிரதமர் கூறியதாக தகவல்கள் கூறுகின்றன. மேலும், நமது பொருளாதாரம் சிறப்பாக உள்ளதாகவும், அது பற்றிய கவலைத்தேவையில்லை என்றும் பிரதமர் கூறியதாக தகவல்கள் கூறுகின்றன.


ஊரடங்கிலிருந்து ஒவ்வொரு மாநிலமும் எப்படி வெளியே வர வேண்டும் என்பது குறித்து இப்போதே திட்டமிட வேண்டும் என்று பிரதமர் மோடி, முதல்வர்களை வலியுறுத்தியதாக தகவல் சொல்லப்படுகிறது. இன்று பிகார், ஒடிசா, குஜராத், ஹரியானா, உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம் மற்றும் புதுச்சேரி மாநில முதல்வர்கள் பிரதமர் மோடியுடன் பேசினார்கள்.

அதேபோல வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா மற்றும் மிசோரம் மாநில முதல்வர்கள், தங்களுடைய கருத்துகளை பிரதமரிடம் எடுத்து வைத்துள்ளனர்.  கேரள முதல்வர் பினராயி விஜயன், இந்த ஆலோசனைக் கூட்டத்தைத் தவிர்த்துவிட்டு, தனது மாநில தலைமைச் செயலாளரை பங்கேற்க வைத்துள்ளார்.

மே 3 ஆம் தேதிக்கு பிறகு, கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள ஆரஞ்சு, பச்சை மண்டல பகுதிகளில், பொருளாதார நடவடிக்கைகள் தொடர அனுமதி அளிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

சீனாவிடம் இருந்து வாங்கிய ரேபிட் டெஸ்ட் கிட் கருவிகளை பயன்படுத்த வேண்டாம்- ஐசிஎம்ஆர்
ரேபிட் டெஸ்ட் கிட் கருவிகளை பயன்படுத்த வேண்டாம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வலியுறுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பின் முதல் நிலையைக் கண்டறிய ரேபிட் டெஸ்ட் கிட் கருவிகள் பயன்படுத்தப்பட்டன. இதற்காக, சீனாவில் உள்ள வோன்ஃபோ பையோடெக், லிவ்ஸன் டயக்னாஸ்டிக் ஆகிய இரு நிறுவனங்களிடம் இருந்து மாநில அரசுகள் ரேபிட் டெஸ்ட் கிட் கருவிகளை கொள்முதல் செய்தன.

ஆனால், இந்த ரேபிட் டெஸ்ட் கிட் கருவிகளின் தரம் குறித்து மாநில அரசுகள் சந்தேகங்கள் எழுப்பின. மாறுபட்ட தரவுகளை காட்டுவதாக மாநில அரசுகள் கூறியது. இதையடுத்து, ரேபிட் டெஸ்ட் கிட் கருவிகளை பயன்படுத்த வேண்டாம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவுறுத்தியது.

 இந்த நிலையில், ரேபிட் டெஸ்ட் கிட் கருவிகளை மேலும் கொள்முதல் செய்ய வேண்டாம் எனவும்,  மேற்கூறிய இரு நிறுவனங்களிடம் வாங்கிய ரேபிட் டெஸ்ட் கிட் கருவிகளை திருப்பி அனுப்புமாறும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவுறுத்தியுள்ளது.  கொரோனா பரிசோதனைக்கு, ஆர்டி பிசிஆர் டெஸ்ட் மட்டும்  மிக சிறந்தது எனவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் தெரிவித்துள்ளது.

2 சீன நிறுவனங்களிடமிருந்தும் 5.5 லட்சம் ரேபிட் டெஸ்ட் கருவிகள் வாங்கப்பட்டுள்ளது.

150 சதவீத லாபத்தில் ரேபிட் டெஸ்ட் கிட் விற்பனை, பிரதமர் மோடி தலையிட வேண்டும்: ராகுல் காந்தி
ரேபிட் டெஸ்ட் கிட் கருவிகளை அரசுக்கு விற்றதில் சிலர் இலாபம் ஈட்டியுள்ளதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிப்பின் முதல் நிலையை கண்டறிய, ரேபிட் டெஸ்ட் கிட் கருவிகள் சீனாவிடம் இருந்து இந்தியா கொள்முதல் செய்தன. இந்த ரேபிட் டெஸ்ட் கிட் கருவிகள்,  ரூ.225-க்கு சீன நிறுவனங்களிடம் இருந்து வாங்கி, ரூ.600க்கு விற்கப்பட்டுள்ளதாக  இன்று செய்திகள் வெளிவந்தன.

இந்த நிலையில், இது குறித்து காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:- கொரோனா வைரஸ் பெருந்தொற்று பேரிடருக்கு எதிராக தேசமே போராடி வருகிறது. ஆனால், இன்னும் சிலர் இந்த நேரத்தில் கூட லாபம் சம்பாதிக்கிறார்கள்.

இதுபோன்ற ஊழல் மிக்கவர்களின் மனநிலையைப் பார்த்து வெட்கப்படுகிறேன். சிலர் 150 சதவீத லாபத்தில் கருவிகளை விற்றுள்ளனர். பிரதமர் மோடி இதில் தலையிட்டு கொள்ளை லாபம் சம்பாதித்தவர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற செயலை தேசம் ஒருபோதும் சகித்துக்கொள்ளாது”  என்று கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad