Type Here to Get Search Results !

கொரோனா அதிகம் பரவ காரணம் என்ன? சென்னையில் துப்பரவு பணியாளர்கள் 14 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

கொரோனா அதிகம் பரவ காரணம் என்ன? சென்னையில் மத்திய குழுவினர் நேரில் ஆய்வு - அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை
சென்னை வந்த மத்திய குழுவினர் ஆஸ்பத்திரி, வெளிமாநில தொழிலாளர் கள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம் களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். நகரில் கொரோனா அதிகம் பரவ காரணம் என்ன? என்பது குறித்தும், அதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் பற்றியும் அதிகாரிகளுடன் அவர்கள் முக்கிய ஆலோசனை நடத்தினார்கள்.

நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள போதிலும் கொரோனா தொற்று பரவுவதை கட்டுப்படுத்த முடியவில்லை.

கொரோனா பாதிப்பு அதிகமாக (‘ஹாட்ஸ்பாட்’) உள்ள இடங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. மராட்டியம், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் சில மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்ததால், அதற்கான காரணங்கள் பற்றி ஆய்வு செய்யவும், அந்த மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஒழுங்காக கடைப்பிடிக்கப்படுகிறதா? என்பதை அறிவதற்காகவும் அமைச்சகங்களுக்கு இடையேயான உயர்மட்ட குழுக்களை மத்திய அரசு அங்கு அனுப்பி வைத்தது.


இதேபோல் கொரோனாவின் தாக்கம் தீவிரமாக உள்ள சென்னை நகருக்கும் மற்றும் ஐதராபாத் (தெலுங்கானா), தானே (மராட்டியம்), ஆமதாபாத், சூரத் (குஜராத்) நகரங்களுக்கும் உயர்மட்ட குழுக்களை அனுப்பி வைக்க மத்திய அரசு முடிவு செய்தது.

அதன்படி, தேசிய பேரிடர் மேலாண்மை கூடுதல் செயலாளர் வி.திருப்புகழ் தலைமையிலான மத்திய குழு நேற்றுமுன்தினம் இரவு சென்னை வந்தது.

இந்த குழுவில் சப்தர்ஜங் ஆஸ்பத்திரி மற்றும் வி.எம்.எம்.சி. பேராசிரியர் டாக்டர் அனிதா கோகர், என்.ஐ.டி.எம். பேராசிரியர் டாக்டர் சூரியபிரகாஷ், இந்திய உணவுக்கழகத்தின் தலைமைப் பொது மேலாளர் லோகேந்தர் சிங், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறையின் முதன்மைச் செயல் அலுவலர் (ஐ.வி.சி.) டாக்டர் வி.விஜயன் ஆகியோர் இடம் பெற்று உள்ளனர்.

மத்திய குழுவினர் நேற்று காலை தலைமைச் செயலாளர் கே.சண்முகத்துடன் முக்கிய ஆலோசனை நடத்தினார்கள். தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தமிழக அரசின் வருவாய்த்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, வருவாய் நிர்வாக ஆணையர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்தவும், ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தவும் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன? என்பது பற்றிய தகவல்களை தமிழக அதிகாரிகளிடம் மத்திய குழுவினர் கேட்டு அறிந்தனர். சென்னையில் கொரோனாவின் தாக்கம் அதிகம் இருப்பது பற்றியும் கேட்டு அறிந்தனர்

தமிழகத்தில் கொரோனா சமூக பரவலாக மாறாமல் எப்படி கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது? என்பது பற்றி மத்திய குழுவினரிடம் தலைமைச் செயலாளர் கே.சண்முகம் விளக்கிக் கூறினார். இதற்காக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் பற்றியும், முதல்- அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்புகள் குறித்தும் அவர் எடுத்துரைத்தார்.

அதன்பிறகு மத்திய குழுவினர் சென்னை மாநகராட்சிக்கு சென்று ஆணையர் பிரகாசுடன், சென்னையில் கொரோனா பரவுவதை தடுப்பதற்காக என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன? என்பது பற்றி ஆலோசனை மேற்கொண்டனர்.

அதைத் தொடர்ந்து தண்டையார்பேட்டையில் உள்ள தொற்றுநோய் மருத்துவமனை, வெளிமாநில தொழிலாளர்கள் தங்க வைக்கப்பட்டு இருக்கும் கண்ணப்பர் திடல், ஆழ்வார்பேட்டை சி.பி.ராமசாமி தெருவில் உள்ள சமுதாய கூடம், கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள புதுப்பேட்டை ஆகிய இடங்களுக்குச் சென்று அங்குள்ள நிலைமையை நேரில் ஆய்வு செய்தனர். முகாம்களில் உள்ளவர்களிடம் உணவு, தங்குமிடம், கழிவறை வசதிகள் எப்படி உள்ளன? என்று மத்திய குழுவினர் கேட்டு அறிந்தனர்.

கூட்டுறவு ரேஷன் கடையில், அரிசி வினியோகம் மற்றும் ரூ.500-க்கான 19 தொகுப்புப் பொருட்கள் கொண்ட பொட்டலம் ஆகியவற்றையும் சோதனையிட்டனர்.

புதுப்பேட்டையில் ஆய்வு மேற்கொண்டபோது அங்கு எத்தனை பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்? அவர்களுக்கு எப்போதெல்லாம் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது? அவர்களில் காய்ச்சல் எத்தனை பேருக்கு வந்தது? பரிசோதனையின் முடிவு என்ன? என்பன போன்ற விவரங்களை அதிகாரிகளிடம் மத்திய குழுவினர் கேட்டு அறிந்தனர்.

தற்காலிகமாக சுகாதார பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள தினக்கூலிகள், துப்புரவுப் பணியாளர்களின் பாதுகாப்புக்கு என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன? சுத்திகரிப்பு பணிக்கு பயன்படுத்தப்படும் எந்திரங்கள் எவை? போன்றவை பற்றியும் விசாரித்து அறிந்தனர்.

தண்டையார்பேட்டையில் உள்ள தொற்றுநோய் மருத்துவமனையில் உள்ள படுக்கை வசதிகளை பார்வையிட்ட மத்திய குழுவினர் அங்குள்ள டாக்டர்களிடம், தொற்று ஏற்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் பற்றி கேட்டு அறிந்தனர்.

மத்திய குழுவினர் நடத்திய ஆலோசனை பற்றி தலைமைச் செயலாளர் கே.சண்முகம் கூறியதாவது:-

சென்னையில் மத்திய குழுவினர் 4 நாட்கள் தங்கி இருப்பார்கள். நாம் என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொண்டு உள்ளோம்? அதன் மூலம் எந்த அளவுக்கு கொரோனா கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது? என்பதை அவர்கள்ஆய்வு செய்வார்கள். தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் பற்றி மத்திய குழுவினரிடம் விரிவாக விளக்கிக் கூறினேன்.

கொரோனாவை எதிர்கொள்ள 3 அம்சங்களின் அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுக்கிறது. முதலாவது, கட்டுப்பாட்டுப் பகுதிகளில் கட்டுப்பாடுகளை மேலும் தீவிரப்படுத்துவது; இரண்டாவது, கொரோனா பரிசோதனைகளை ஒழுங்குபடுத்தி முடிவை விரைந்து பெறுவது (முன்பு முடிவைப் பெற 2 நாட்கள் ஆனதை, 24 மணிநேரத்தில் பெற நடவடிக்கை எடுத்தது); மூன்றாவதாக, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பு வைத்திருந்தவர்களை கண்டறிந்து அவர்களையும் பரிசோதனைக்கு உட்படுத்துவது ஆகிய இந்த மூன்று வகையான நடவடிக்கைகள் பற்றி விவரித்து கூறினேன்.

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு வெளியேயும் பாதிப்புகள் இருக்கிறதா? என்பதை கண்டறிய தீவிர நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அந்த வகையில் மூச்சுக்கோளாறு, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் உள்ளவர்களை உடனடியாக மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்துகிறோம். இதுபோன்ற நடவடிக்கைகளை விவரித்துக் கூறினேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

முதல்-அமைச்சரை சந்தித்து பேசுவார்கள்

மத்திய குழுவினர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) சென்னையில் பல அரசு மருத்துவமனைகளுக்கு சென்று பார்வையிடுவார்கள் என்று கூறப்படுகிறது.

4 நாட்கள் ஆய்வு மேற்கொண்ட பிறகு, முதல்-அமைச்சரை மத்திய குழுவினர் சந்தித்து பேசுவார்கள் என்று தெரிகிறது. அப்போது மத்திய அரசுக்கு தமிழக அரசு முன்வைக்கும் கோரிக்கைகளை கேட்டறிவார்கள்.

பின்னர் சென்னையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் மத்திய அரசிடம் மத்திய குழுவினர் அறிக்கை தாக்கல் செய்வார்கள்.

சென்னை பேசின் பிரிட்ஜ் பகுதியில் துப்பரவு பணியாளர்கள் 14 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
சென்னை பேசின் பிரிட்ஜ் பகுதியில் துப்பரவு பணியாளர்கள் 14 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட  14 பேரும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad