Type Here to Get Search Results !

கொரோனா நிவாரண பணிகளை யூனியன் தலைவரிடம் வீடியோ கால் மூலம் கேட்டறிந்த மு.க.ஸ்டாலின்

கொரோனா நிவாரண பணிகள் குறித்து மண்டபம் யூனியன் தலைவரிடம் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வீடியோ காலில் தொடர்பு கொண்டு கேட்டறிந்தார்.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் உள்ள தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள், முக்கிய நிர்வாகிகளிடம் கொரோனா பரவலை தடுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், ஊரடங்கு உத்தரவால் வேலையிழந்து வருமானமின்றி தவிக்கும் ஏழை எளிய மக்கள், கூலி தொழிலாளர்கள் போன்றோருக்கு அரிசி, மளிகை பொருட்களை வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். அதனை தொடர்ந்து தி.மு.க.வினர் கிராமம் கிராமமாக சென்று உதவிகளை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மண்டபம் யூனியன் தலைவர் அழகன்குளத்தை சேர்ந்த சுப்புலட்சுமி ஜீவானந்தத்தை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் செல்போனில் வீடியோ கால் மூலம் தொடர்பு கொண்டு கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக கேட்டறிந்தார். அதனை தொடர்ந்து மாவட்டம் மற்றும் ஊராட்சி பகுதிகளில் உள்ள மக்கள் நலமாக உள்ளனரா, உங்கள் பகுதியில் கொரோனா பாதிப்பு யாருக்கேனும் உள்ளதா, தடுப்பு பணிகள் எவ்வாறு நடைபெற்று வருகிறது, மக்களை சந்தித்து உதவிகளை செய்து வருகிறீர்களா, தி.மு.க. சார்பில் நலத்திட்ட உதவிகள், நிவாரணப் பணிகள் நடக்கிறதா என்பது குறித்து கேட்டறிந்தார்.


இதற்கு பதில் அளித்த யூனியன் தலைவர் சுப்புலட்சுமி ஜீவானந்தம், மண்டபம் யூனியன் பகுதியில் கொரோனா நோய் பாதிப்பு யாருக்கும் இதுவரை இல்லை. வெளிநாடுகளில் இருந்து வந்துள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். யூனியனுக்கு உட்பட்ட அனைத்து கிராமங்களிலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மண்டபம் மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் நலிந்த குடும்பங்களுக்கு உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அனைத்து பகுதிகளிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த தி.மு.க. நிர்வாகிகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்து உதவிகள் செய்து வருகின்றனர் என்று தெரிவித்தார். அதனை தொடர்ந்து பாதுகாப்பாக இருக்கும்படியும், கட்சி நிர்வாகிகள் தொடர்ந்து மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்யவும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.

தெருவோர வியாபாரிகளுக்கு ரூ.1000 நிவாரண தொகை; வங்கி கணக்கு விவரங்களை உடனடியாக வழங்க வேண்டும்;  - மாநகராட்சி அறிவிப்பு
தெருவோர வியாபாரிகள் ரூ.1000 நிவாரண தொகை பெற, தங்கள் வங்கி கணக்கு விவரங்களை உடனடியாக மாநகராட்சிக்கு வழங்க வேண்டும் என கமிஷனர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவால், தினக்கூலிகள், சிறு, குறு தொழிலாளர்கள், ஆட்டோ தொழிலாளர்கள், நடைபாதை வியாபாரிகள் பாதிப்படைந்துள்ளனர்.

இந்த நிலையில் தமிழக முதல்-அமைச்சர் கொரோனா நிவாரண நிதியாக ரேஷன் அட்டை தாரர்களுக்கு ரூ.1000 வழங்கப்படும் என அறிவித்து, அவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள தெருவோர வியாபாரிகளுக்கும் ரூ.1000 வழங்க உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

சென்னை மாநகராட்சியில் 27 ஆயிரத்து 195 பதிவு செய்யப்பட்ட தெருவோர வியாபாரிகள் உள்ளனர். அவர்களுக்கு முதல்-அமைச்சர் நிவாரண நிதி வழங்க உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, இதுவரை வங்கி கணக்கு விவரங்களை வழங்காத, பதிவு செய்யப்பட்ட தெருவோர வியாபாரிகள் தங்கள் வங்கியின் பெயர் மற்றும் கிளை முகவரி, சேமிப்பு கணக்கு எண், கிளை குறியீட்டு எண், ஐ.எப்.எஸ்.சி குறியீட்டு எண் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சியால் வழங்கப்பட்ட தெருவோர வியாபாரிகளுக்கான அடையாள அட்டை எண், வியாபாரியின் தொலைபேசி எண் ஆகியவற்றின் நகல்களை கீழ்க்கண்ட ஏதேனும் ஒரு வழிமுறைகளில் தகவல்களை வழங்க வேண்டும்.

அதன்விவரம் வருமாறு:-

1. சம்பந்தப்பட்ட மண்டல நகர விற்பனைக் குழு, மண்டல அலுவலகத்துக்கு நேரடியாக சென்று வழங்கலாம்.

2. ar-o-h-q-p-r-op1@gm-a-il.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாக அனுப்பலாம்.

3. ‘9499932899’ என்ற தொலைபேசி எண்ணுக்கு ‘வாட்ஸ்-அப்’ மூலமாக அனுப்பலாம்.

4. www.ch-e-n-n-a-i-c-o-r-p-o-r-at-i-on.gov.in என்ற இணையதள முகவரி மூலமாகவும் அனுப்பலாம்.

மேலும் சம்பந்தப்பட்ட மண்டல நகர விற்பனைக்குழு அலுவலகத்தில் விவரங்களை வழங்க மண்டல அலுவலகத்துக்கு வரும்போது கொரோனா தொற்று தடுப்புக்கான முன்னெச்சரிக்கை வழிமுறைகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும்.

இந்த தகவல்களை வியாபாரிகள் வழங்கும் பட்சத்தில் நிவாரண தொகை உடனடியாக சம்பந்தப்பட்டவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

திருநங்கைகளுக்கு நிவாரண உதவிப்பொருட்கள் - தோப்பு என்.டி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. வழங்கினார்
பெருந்துறையில் உள்ள திருநங்கைகளுக்கு நிவாரண உதவிப்பொருட்களை தோப்பு என்.டி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. வழங்கினார்.

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்று அறிகுறி உறுதி செய்யப்பட்டு 60 பேர் சிகிச்சையில் உள்ளனர். மருத்துவமனைகளில் தனிமைப்படுத்துதல், வீடுகளில் தனிமைப்படுத்துதல் என்று ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். பல்வேறு பகுதிகளும் சுமார் 33 ஆயிரம் குடும்பங்களை சேர்ந்த 1 லட்சத்து 70 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள மக்கள் பிரதிநிதிகளும் அவரவர் பகுதிகளில் கொரோனா தொற்று ஏற்படாமல் தவிர்க்க பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

பெருந்துறை தொகுதி எம்.எல்.ஏ.வும், தமிழ்நாடு சட்டமன்ற மதிப்பீட்டுக்குழு தலைவருமான தோப்பு என்.டி.வெங்கடாசலம், தினசரி அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார். அதன்படி நேற்று தோப்பு என்.டி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. தலைமையில் பெருந்துறை ஒன்றியக்குழு அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

சுகாதாரத்துறை, காவல்துறை, உள்ளாட்சித்துறை, சமூக நலத்துறை உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது பெருந்துறை தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பேசினார். மேலும், அரசின் மூலம் பெற வேண்டிய உதவிகளை முறையாக பெற்று பொதுமக்கள் எந்த சிரமமும் இல்லாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

அதைத்தொடர்ந்து பெருந்துறை பகுதியை சேர்ந்த திருநங்கைகள் 10 பேருக்கு கொரோனா நிவாரண உதவியை தோப்பு என்.டி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. வழங்கினார்.

இந்த நிகழ்ச்சிகளில் பெருந்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜகுமார், அ.தி.மு.க. பேரூர் செயலாளர் கே.எம்.பழனிச்சாமி, முன்னாள் செயலாளர் கைலங்கிரி குப்புசாமி, இலக்கிய அணி தலைவர் அருள்ஜோதி செல்வராஜ், மாவட்ட கவுன்சிலர் பாலகிருஷ்ணன், முன்னாள் கவுன்சிலர்கள் மணி, சுப்பிரமணி, மோகன், சங்கர், பழனிசாமி உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.
full-width

காஞ்சீபுரம் வையாவூரில் தற்காலிக காய்கறி சந்தையில் கிருமிநாசினி தெளிப்பு பாதை - அமைச்சர் பென்ஜமின் திறந்து வைத்தார்
காஞ்சீபுரம் வையாவூரில் தற்காலிக காய்கறி சந்தையில் கிருமிநாசினி தெளிப்பு பாதையை அமைச்சர் பென்ஜமின் திறந்து வைத்தார்.

காஞ்சீபுரம் வையாவூரில் செயல்பட்டு வரும் தற்காலிக காய்கறி சந்தை, ஜவகர்லால் காய்கறி சந்தை மற்றும் குருஷேத்திரா பள்ளியில் செயல்பட்டு வரும் மளிகை பொருட்களின் பல்பொருள் அங்காடி ஆகிய 3 இடங்களில் நுழைவு வாயிலில் அமைக்கப்பட்டு உள்ள கிருமிநாசினி தெளிப்பு பாதைகளை காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா தலைமையில், அமைச்சர் பென்ஜமின் திறந்து வைத்தார்.

அத்துடன் வாலாஜாபாத் பேரூராட்சி மற்றும் காஞ்சீபுரம் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு கொரோனா வைரஸ் நிவாரண உதவி பொருட்களையும் அவர் வழங்கினார். இதில் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி என்.சுந்தரமூர்த்தி, காஞ்சீபுரம் நகராட்சி கமிஷனர் ஆர்.மகேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அதேபோல் ஒரகடம் அடுத்த வாரணவாசி ஊராட்சியில் வசிக்கும் ஏழை, எளிய மக்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் உள்பட 300 பேருக்கு தேவையான அரிசி மற்றும் மளிகை பொருட்கள் தொகுப்பை அமைச்சர் பென்ஜமின் வழங்கினார். இதில் காஞ்சீபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் வாலாஜாபாத் கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அதேபோல் திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் அதிகத்தூர் பகுதியிலுள்ள ஏழை, எளிய மக்களுக்கு அ.தி.மு.க. சார்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் பென்ஜமின் வழங்கினார். இதில் முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா, கடம்பத்தூர் ஒன்றியக்குழு தலைவர் சுஜாதா சுதாகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad