ஊழல் அரசியல் பிணியைத் தீர்க்கும் மருந்து லோக் ஆயுக்தா - கமல் ட்வீட்

சென்னை: லோக் ஆயுக்தா அமைப்பதில் இந்த அரசு, உச்ச நீதி மன்ற ஆணையை ஏற்று செயல்பட மக்கள் வலியுறுத்த வேண்டும் என்று நடிகர் கமல் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். லோக் ஆயுக்தா, ஊழல் அரசியல் பிணியைத் தீர்க்கும் மருந்து என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். தமிழகத்தில் லோக் ஆயுக்தா உடனடியாக அமைக்கப்படவேண்டும் என்று உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.


தமிழகம், புதுவை, ஜம்மு காஷ்மீர், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகலாந்து, தெலங்கானா, திரிபுரா, அருணாச்சலப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 12 மாநிலங்களில் லோக் ஆயுக்தா இன்னும் அமைக்கப்படவில்லை. இந்த மாநிலங்களில் லோக் ஆயுக்தாவை அமைக்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் வழக்குகள் தொடரப்பட்டது. இந்த வழக்கில் லோக் ஆயுக்தா விசாரணை நீதிமன்றங்களை அமைக்காதது ஏன்? அவை எப்போது அமைக்கப்படும் என்பது குறித்து 2 வாரத்துக்குள் எழுத்துப்பூர்வ பிரமாண பத்திரங்களை 12 மாநிலங்களின் தலைமை செயலாளர்கள் தாக்கல் செய்ய வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து தமிழக செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் 9 பக்கங்கள் கொண்ட பதிலை எழுத்துப்பூர்வமாக இன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, ரஞ்சன் கோகோய் நீதிபதிகள் அமர்வு , தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்த பதிலை ஏற்க மறுப்பு தெரிவித்தனர்.

தற்போது வரை லோக் ஆயுக்தா அமைக்கப்படாமல் இருப்பதற்கு தமிழக அரசு முன் வைத்த காரணங்கள் ஏற்கும்படியாக இல்லை என்று கூறிய உச்சநீதிமன்ற நீதிபதிகள், லோக் ஆயுக்தா அமைக்கும் பணியை தமிழக அரசு உடனடியாக தொடங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். மேலும் லோக் ஆயுக்தா அமைக்கும் நடவடிக்கை குறித்து ஜூலை 10ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசின் தலைமை செயலாளருக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். லோக்பால், லோக் ஆயுக்தா தொடர்பாக தமிழக அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்கவும் நீதிபதிகள் ஆணையிட்டுள்ளனர்.

உச்சநீதிமன்றத்தின் இந்த ஆணைக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் வரவேற்றுள்ளார். லோக் ஆயுக்தா அமைப்பதில் இந்த அரசு, உச்ச நீதி மன்ற ஆணையை ஏற்று செயல்பட மக்கள் வலியுறுத்த வேண்டும் என்று நடிகர் கமல் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். உச்ச நீதி மன்றத்திற்குத் தமிழ்நாட்டில் உள்ள நேர்மையாளர்களின் மனமார்ந்த நன்றி என்று கூறியுள்ள கமல், லோக் ஆயுக்தா, ஊழல் அரசியல் பிணியைத் தீர்க்கும் மருந்து என்று பதிவிட்டுள்ளார்.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url