Type Here to Get Search Results !

நான்-வெஜ் பிரியர்கள் கவனத்துக்கு...






‘மழையில நனையாத வாழ்க்கை என்ன வாழ்க்கை’ என்று பவர் பாண்டி தனுஷ் சொல்வதைப் போல, அசைவம் இல்லாத வாழ்க்கையை பலரால் நினைத்துக் கூட பார்க்க முடியாது. அசைவம் இல்லாவிட்டால் சாப்பாடு இறங்காது என்கிறவர்கள் எல்லாம் உண்டு.

ஊட்டச்சத்து நிபுணர்களும், மருத்துவர்களும் அசைவ உணவில் இருக்கும் சத்துக்கள் பற்றி எப்போதுமே குறிப்பிடத் தவறுவதில்லை. ருசி, சத்து என்று இரண்டு வகையிலும் பலரின் மனம் கவர்ந்த அசைவ உணவு உட்கொள்வோர் கவனத்துக்காக சில முக்கிய குறிப்புகளை மருத்துவர்கள் இங்கே பரிந்துரைக்கிறார்கள்.

‘‘மாமிச உணவில் தாவர உணவைவிட வைட்டமின் பி 12, வைட்டமின் டி, இரும்புச்சத்து ஆகியன அதிகளவு நிறைந்துள்ளது. இது தவிர்த்து பால், முட்டையிலும் இந்த வைட்டமின்கள் காணப்படுகின்றன. மனித உடலுக்குத் தேவையான பல ஊட்டச்சத்துக்கள் மாமிச உணவில் தாராளமாகக் கிடைக்கிறது. அதேபோல நோயாளிகளுக்கான அவசர ஊட்டச்சத்துக்கும் அசைவ உணவே சிறந்ததாக இருக்கிறது. அசைவ உணவைத் தவிர்ப்பவர்கள் அதிக அளவில் பால் எடுத்துக்கொள்வது. தேவையான ஊட்டச்சத்தை நிவர்த்தி செய்யும்.

சைவ உணவாக இருந்தாலும், அசைவ உணவாக இருந்தாலும் உடல் உழைப்புக்குத் தகுந்தாற்போல் எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும், அசைவ உணவை வாரம் இருமுறை எடுத்துக் கொள்வது நல்லது.தரம் இல்லாத அசைவ துரித உணவுகள், ரெடிமேட் சிக்கன், ஜங்க் ஃபுட் போன்றவைகளை சாப்பிடுவது உடல்நலனைக் கெடுக்கும். தற்போது அதிகரித்து வரும் இரைப்பை கோளாறுகளுக்கு தரமில்லாத அசைவ உணவுகளே முக்கியக் காரணமாக இருக்கிறது.

அதனால், முடிந்தவரை அசைவ உணவுகளை வீட்டிலேயே சுத்தமான முறையில் சமைத்து சாப்பிடுவதே நல்லது. உணவகங்களில் தயாராகும் அசைவ உணவில் என்ன வகை எண்ணெய், மசாலா சேர்ப்பார்கள் என்பது நமக்குத் தெரியாது’’
வெளியிடங்களில் அசைவ உணவுகளை சாப்பிடும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்

‘‘ஓட்டல்களில் பரிமாறப்படும் அசைவ உணவுகள் சுத்தமானதா, ஆரோக்கியமானதா என்பது பல நேரங்களில் நமக்குத் தெரிவதில்லை. தூய்மையான முறையில்தான் உணவு தயாராகிறது என்பதை ஓட்டல்களும் பொதுமக்களுக்குத் தெரியப்படுத்துவதில்லை.



மேலும், ஓட்டல்களில் இறைச்சியைப் பதப்படுத்திவைக்கும் முறை, சுத்தம் செய்யும் முறை, உணவு தயாரிக்கும் முறை என்பது நாம் தெரிந்துகொள்ள முடியாத ஒன்றாகவே இருக்கிறது. குறிப்பாக, பெரிய ஓட்டல்களில் முன்கூட்டியே இறைச்சியை வாங்கி ஃப்ரோஸன்(Frozen) முறையில் வைத்து பதப்படுத்துகிறார்கள்.

அதாவது, இறைச்சி கெட்டுப்போகாமல் இருப்பதற்காக மைனஸ் டிகிரி குளிர்ந்த அளவில் பராமரித்து வைக்கும் முறை இது. இந்த ஃப்ரோஸன் முறை மாமிசத்தின் இயல்பான தன்மையை மாற்றக் கூடிய ஒன்று.இதேபோல, ஓட்டல்களில் அதிக எண்ணிக்கையில் பல ரசாயனங்களைச் சேர்க்கிறார்கள்.

மாமிசத்தை சீக்கிரம் வேக வைப்பதற்கு, சுவையாக இருப்பதற்கு, கெட்டுப்போகாமல் இருப்பதற்கு என பல்வேறு செயற்கை நிறமூட்டிகள், குக்கிரீம், டேஸ்டி மேக்கர் போன்ற செயற்கை மூலக்கூறுகள் சேர்க்கப்படுகின்றன.

இதனால் உடனடியாகவோ அல்லது 72 மணிநேரம் கழித்தோ வாந்தி, வயிறு உப்புசம், பேதி, கல்லீரல் பாதிப்பு போன்ற வயிறு சம்பந்தமான பல பிரச்னைகளுக்கு அசைவ உணவுகள் காரணமாக ஆகிவிடுகிறது.

அதனால் தவிர்க்க முடியாத பட்சத்தில் நம்பகத்தன்மை வாய்ந்த ஓட்டல்களில் அசைவ உணவு சாப்பிடுவதே சிறந்தது. அடிக்கடி அசைவ உணவு உண்ணும் பழக்கமுடையவர்கள் வீட்டிலேயே சமைத்து சாப்பிட முயற்சிக்க வேண்டும். முக்கியமாக, வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னை உள்ளவர்கள், குழந்தைகள், வயதானவர்கள் ஓட்டல்களில் அசைவ உணவுகளைத் தவிர்த்துவிட வேண்டும்’’

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad