தனி நாடு பிரகடனம் செய்த கேட்டலோனிய அரசை கலைத்தது ஸ்பெயின்



ஸ்பெயினில் இருந்து பிரிந்து தனி நாடாவதாக அறிவித்த தன்னாட்சி பிரதேசமான கேட்டலோனியாவின் பிராந்திய நாடாளுமன்றத்தை கலைப்பதாக ஸ்பெயின் பிரதமர் மரியனோ ரஜாய் அறிவித்துள்ளார்.



ஸ்பெயினின் நேரடி ஆட்சியின் கீழ் கேட்டலோனியா வருவதாகவும், விரைவில் தேர்தல் நடத்தப்பட்டு கேட்டலோனியாவுக்கு புதிய அரசு தேர்வு செய்யப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

கேட்டலன் அதிபர் கார்லஸ் பூஜ்டிமோன் தலைமையிலான அமைச்சரவையையும் பதவி நீக்கம் செய்து அவர் உத்தரவிட்டுள்ளார்.
ஸ்பெயினில் இருந்து கேட்டலோனியா தனி நாடாக பிரிந்ததாக கேட்டலன் நாடாளுமன்றத்தில் பிரகடனம் செய்யப்பட்டது. கேட்டலோனிய நாடாளுமன்றத்தில் தனி நாடு பிரகடனம் குறித்த வாக்கெடுப்பு இன்று (வெள்ளியன்று) நடந்தது.

இதனிடையே கேட்டலோனியாவின் நேரடி ஆட்சியை அமல்படுத்த ஸ்பெயின் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. ஸ்பெயின் நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் நேரடி ஆட்சியை அமல்படுத்துவதற்கு ஆதரவாக 214 வாக்குகளும், எதிராக 47 வாக்குகளும் பதிவாகின.

கேட்டலோனிய நாடாளுமன்றத்தில் தனி நாடு பிரகடனம் குறித்த வாக்கெடுப்பு இன்று (வெள்ளியன்று) நடந்தது.
இதில் சுதந்திரத்துக்கு ஆதரவாக 70 வாக்குகளும், எதிராக 10 வாக்குகளும் பதிவாயின. எதிர்க்கட்சிகள் இந்த வாக்கெடுப்பை புறக்கணித்தன.

முன்னதாக, கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி ஸ்பெனிலிருந்து கேட்டலோனியா தன்னாட்சி பிரதேசம் பிரிந்து தனிநாடாக அறிவிப்பது குறித்து நடத்தப்பட்ட பொது மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் 43% கேட்டலோனிய மக்கள் வாக்களித்தனர் என்றும், அவர்களில் 90% கேட்டலோனியா தனி நாடாகப் பிரிவதற்கு ஆதரவு தெரிவித்தனர் என்றும் கேட்டலன் அரசு கூறியிருந்தது.
அந்த வாக்கெடுப்பு செல்லாது என்று ஸ்பெயின் அரசியலமைப்பு நீதிமன்றம் அறிவித்தது.

கடந்த அக்டோபர் 11 அன்று ஸ்பெயினில் இருந்து கேட்டலோனியா விடுதலை பெற்று தனி நாடாகிவிட்டதாக ஒரு பிரகடனத்தை கேட்டலோனிய அதிபர் கார்லஸ் பூஜ்டிமோன் மற்றும் பிற பிராந்தியத் தலைவர்கள் கையெழுத்திட்டு வெளியிட்டனர்.
எனினும், ஸ்பெயினுடன் பேச்சுவார்த்தை நடத்தும் பொருட்டு, அந்தப் பிரகடனத்தை செயல்படுத்துவதை சில வாரங்களுக்கு நிறுத்திவைப்பதாக அப்போது அறிவிக்கப்பட்டது.

நெருக்கடி நிலையில் தனது நேரடி ஆட்சியை தன்னாட்சி பிரதேசங்களில் அமல்படுத்த ஸ்பெயின் அரசுக்கு அந்நாட்டு அரசியலமைப்பின் 155-வது பிரிவு வழிவகை செய்கிறது. இதுகுறித்து ஸ்பெயின் நாடாளுமன்றம் இன்னும் வாக்களிக்கவில்லை.

அந்த வாக்கெடுப்பில் கேட்டலோனியாவில் நேரடி அதிகாரத்தை அமல்படுத்த அனுமதி வழங்கப்பட்டால், கேட்டலன் தலைவர்களை பதவிநீக்கம் செய்து, ஸ்பெயின் அரசு கேட்டலோனியாவை தனது முழு நிர்வாகக் கட்டுப்பாட்டில் கொண்டுவர முடியும்.



பிராந்திய தலைநகர் பார்சிலோனாவில் பிராந்திய நாடாளுமன்றம் உள்ளது. தனிக் கொடி, தனி தேசிய கீதம், அதிபர், அமைச்சரவை, காவல் துறை ஆகியவற்றைக் கொண்ட கேட்டலோனியாவின் வெளியுறவு, பாதுகாப்பு, நிதி ஆகியவை ஸ்பெயின் அரசின் கீழும், கல்வி, சுகாதாரம், பொருளாதாரம், உள்நாட்டு பாதுகாப்பு ஆகியவை பிராந்திய அரசின் கீழும் உள்ளன.

கேட்டலோனியா தனி நாடானால், பொருளாதார மற்றும் அரசியல் ரீதியாகவும் ஸ்பெயின் பாதிக்கப்படுவதுடன் ஐரோப்பாவில் உள்ள பிற தனி நாடு கோரிக்கைகள் வலுப்பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்பெயின் மக்கள் தொகையில் சுமார் 16% பேர் கேட்டலோனியாவில் வசிக்கின்றனர்.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url