துண்டுப்பிரசுரம் விவகாரம்: டிடிவி தினகரன், புகழேந்தியை கைதுசெய்ய தனிப்படை தீவிரம்




சேலம் தாதகாப்பட்டி உழவர் சந்தை எதிரே உள்ள சண்முகா நகரில் தினகரன் ஆதரவாளர்கள் மத்திய - மாநில அரசுகளை கண்டித்து துண்டு பிரசுரம் கொடுத்தனர். அந்த துண்டு பிரசுரத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான கருத்துக்கள் இடம் பெற்றிருந்தன. முதல்- அமைச்சரை  குறிப்பிட்டு அவதூறான வாசகங்களும் இடம் பெற்றிருந்தன.

நீட் தேர்வு தொடர்பான சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை யாரும் விமர்சிக்கக்கூடாது என்று நீதிபதிகள் கூறி இருந்தனர். இதற்கு எதிரான வாசகங்களும் இந்த துண்டு பிரசுரத்தில் இடம் பெற்றிருந்தது. இது குறித்து சேலம் அஸ்தம்பட்டி  பகுதி செயலாளர் சரவணன், சேலம் அன்னதானப்பட்டி போலீசில் புகார் செய்தார்.

இந்த புகார் தொடர்பாக அன்னதானப்பட்டி போலீசார் அ.தி.மு.க. அம்மா அணி துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் எஸ்.சி. வெங்கடாசலம், எஸ்.கே. செல்வம், பெங்களூரு வெற்றிவேல், கலைவாணி உள்ளிட்ட 36 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதில் உடனடியாக தினகரன் ஆதரவு சேலம் மாநகர் மாவட்ட செயலாளரும்,  முன்னாள் எம்.எல்.ஏ.வுமான எஸ்.சி. வெங்கடாசலம்,  சூர்யா, சந்திரன், கலைவாணி ஆகியோரை கைது செய்தனர்.

நேற்று இரவு சித்த வைத்தியர் சசிகுமார் கைது செய்யப்பட்டார். கைதான 5 பேரில் கலைவாணி சேலம்  பெண்கள் சிறையிலும் மற்ற 4 பேர் சேலம் மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டனர்.

கைதானவர்கள் மீது 143 (அதிக நபர்கள் கூடுதல்), 120-பி, (கூட்டு சதி), 124-ஏ (மத்திய - மாநில அரசின் முடிவுகளுக்கு எதிராக செயல் படுதல்), 153 (வன்முறையை தூண்டும் வகையில் நடந்து கொள்ளுதல்) 504 (பொது அமைதிக்கு பங்கம் விளை வித்தல்), 506(2)-(கொலை மிரட்டல் விடுத்தல்) 449 (அத்துமீறி நுழைதல்) ஆகிய 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினகரன், புகழேந்தி உள்ளிட்ட 31 பேரை போலீசார் தேடிவருகிறார்கள். தினகரனையும், புகழேந்தியையும்  கைது செய்ய தனிப்படை போலீசார் சென்னை மற்றும் பெங்களூருவில் முகாமிட்டுள்ளனர். இந்த  நிலையில் சென்னை ஐகோர்ட்டில் முன் ஜாமீன் பெற தினகரன், புகழேந்தி,  பெங்களூரு வெற்றிவேல் உள்ளிட்ட 31 பேர் சார்பில் இன்று மனு தாக்கல் செய்யப்பட உள்ளது.

தற்போதைய சூழ்நிலையில் தினகரன் மீது முதல்-அமைச்சருக்கு எதிராகவும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும் துண்டு பிரசுரம் வினியோகிக்க உத்தர விட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்பட தூண்டியதாக மாறுவதற்கு  வாய்ப்பு உள்ளது. தற்போதைய சூழ்நிலையில்  முதல்கட்ட எப்.ஐ.ஆர். கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தினகரனின் செயல் பாட்டை தொடர்ந்து அடுத்த கட்டமாக எப்.ஐ.ஆரில் திருத்தம் செய்ய வாய்ப்பு உள்ளது. அவர் மீது தேச துரோக வழக்கு பாய்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. கணவர் நடராஜனின் உடல் நிலையை காரணம் காட்டி பரோலில் வர உள்ள சசிகலாவை வரவேற்க மிகப்பெரிய கூட்டத்தைக் காட்ட தினகரன் திட்டமிட்டு இருந்ததாகவும்  அதை தடுக்கும்  நோக்கத்தில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும்  தினகரன் ஆதரவாளரும் வக்கீலுமான எம்.ஜே. பாலசுப்பிரமணி கூறினார்.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url