‘எனக்கும், பாபாவிற்கும் தவறான உறவு கிடையாது’ பலாத்கார சாமியார் குர்மீத் சிங்கின் வளர்ப்பு மகள் பேட்டி
புதுடெல்லி,
இருபெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் ‘தேரா சச்சா சவுதா’ மத அமைப்பின் தலைவர் சாமியார் குர்மீத் சிங்கிற்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் ஜெயில் தண்டனை விதித்து சி.பி.ஐ. கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. இதனையடுத்து ரோதக் மாவட்டத்தில் உள்ள ஜெயிலில் அடைக்கப்பட்டார். பாலியல் பலாத்கார சாமியார் குர்மீத் சிங் குற்றவாளி என ஆகஸ்ட் 25-ம் தேதி சிபிஐ நீதிமன்றம் அறிவித்ததும் அரியானா மற்றும் பஞ்சாப்பில் வன்முறை வெடித்தது. அரியானாவில் வன்முறை வெடித்ததில் 30க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
இரு மாநிலங்களிலும் 200-க்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர். வன்முறையை தூண்டிவிட்டதில் பலாத்கார சாமியார் குர்மீத் சிங்கின் வளர்ப்பு மகளுக்கு முக்கிய பங்கு உள்ளது எனவும் அவர் போலீஸ் காவலில் இருந்து சாமியார் குர்மீத் சிங்கை காப்பாற்ற முயற்சி செய்தார் எனவும் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. இச்சம்பவங்களை அடுத்து ஹனி பிரீத் தலைமறைவாகிவிட்டார். அவரை போலீஸ் தேடிவருகிறது.
அவர் நேபாளம் தப்பி ஓடிவிடலாம் என எல்லையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது, முன் ஜாமீன் கோரிய அவருடைய மனுவையும் டெல்லி கோர்ட்டு நிராகரித்தது. இதற்கிடையே குர்மீத் சிங் மற்றும் ஹனி பீர்த்திற்கும் இடையே தவறான உறவு இருந்ததாகும் குற்றச்சாட்டுக்கள் எழுந்து வந்தது.
இந்நிலையில் ‘எனக்கும் பாபாவிற்கும் தவறான உறவு கிடையாது’ என பலாத்கார சாமியார் குர்மீத் சிங்கின் வளர்ப்பு மகள் ஹனி பிரீத் பேட்டியளித்து உள்ளார். 36 நாட்களாகவே தலைமறைவாக இருக்கும் ஹனி பிரீத்திற்கு எதிராக போலீஸ் ‘லுக் அவுட்’ நோட்டீஸ் விடுத்து உள்ளது. இந்நிலையில் இந்தியா டுடேவிற்கு அளித்து உள்ள பேட்டியில் ஹனி பீர்த்; என்னை பற்றி மீடியாக்களில் வரும் செய்திகள் உண்மையானது கிடையாது.
மொத்த சம்பவத்திற்கு பிறகு பயம் கொள்ளும் பெண்ணை போன்று என்னை காட்டுகிறார்கள். என்னுடைய பெற்றோர்களின் மன நிலையை என்னால் வெளிப்படுத்த முடியாது. என்னை துரோகி என அழைக்கிறார்கள், அது முற்றிலும் தவறானது. தந்தையுடன் மகள் அனுமதி பெறாமல் கோர்ட்டிற்கு சென்றார் என்பது சாத்தியமற்றது என்று கூறிஉள்ளார்.
சாமியார் குர்மீத் சிங் உடனான உறவு பற்றிய கேள்விக்கு பதிலளித்து பேசிஉள்ள ஹனி பிரீத், தந்தை மற்றும் மகள் இடையிலான புனிதமான உறவு குறித்து எப்படி கேள்வி எழுப்ப முடியும் என்பது என்னால் புரிந்துக்கொள்ள முடியவில்லை. என்னுடைய மொத்த கவலையும் மீடியாக்கள் என்னை இவ்வளவு முன்னிலை படுத்துவதுதான். அவர்கள் எப்படி தந்தை மற்றும் மகள் இடையிலான உறவு குறித்து அவதூறு பரப்ப முடியும்? ஒரு தந்தையாக மகளின் மீது கைகளை வைத்திருக்க முடியாதா? ஒரு மகள் தன்னுடைய தந்தையின் மீது அன்பு காட்டக்கூடாதா? என பதில் கேள்விகளை எழுப்பி உள்ளார்.
எனக்கும், என்னுடைய தந்தைக்கும் (குர்மீத் சிங்) நீதித்துறையின் மீது நம்பிக்கை உள்ளது, நிச்சயமாக எங்களுக்கு நீதி கிடைக்கும் என குறிப்பிட்டு உள்ளார் ஹனி பிரீத்.