எடைகுறைப்பு பற்றிய தவறான நம்பிக்கைகள்!



‘எடை குறைப்பு விஷயத்தில் எண்ணற்ற தவறான நம்பிக்கைகள் நம் மக்களிடையே இருந்து வருகிறது. குறிப்பாக, டயட் விஷயத்தில் நிறைய தவறுகள் நடக்கின்றன’ என்கிறார் உணவியல் நிபுணர் வர்ஷா. எப்படி?‘‘அரிசி, கோதுமை மற்றும் தானியங்கள் எல்லாம் கார்போஹைட்ரேட் நிறைந்தவை. அவற்றை சாப்பிட்டால் உடல் எடைகூடும் என்ற தவறான எண்ணம் மக்களின் மனதில் முதலில் விதைக்கப்பட்டு விடுகிறது. ஆனால், இது பெரிய தவறு. உணவில் பாதியளவு முழுதானியங்களை சேர்த்துக் கொள்வதுதான் சரியான உணவு முறை.இதேபோல, ‘எதை வேண்டுமானாலும்; எவ்வளவு வேண்டுமானாலும்
சாப்பிடுங்கள். ஆனால், எங்கள் மருந்தை மட்டும் எடுத்துக் கொண்டால் போதும்’ என்ற பாணியில் வரும் விளம்பரங்கள் எல்லாமே மோசடியானவை. ஒரு மருந்தினால் எடையைக் குறைக்க முடியும் என்பது உண்மையே இல்லை.



இந்த பிரச்னைக்கு சரியான வழி, முறையான உணவுப்பழக்கத்தைப் பின்பற்றுவதுதான். காலை உணவைத் தவிர்த்தால் எடையைக் குறைக்கலாம் என்ற தவறான எண்ணம் இருக்கிறது. உண்மையில் காலை உணவை தவிர்த்துவிட்டு நேரடியாக மதிய உணவை எடுத்துக் கொள்ளும்போது, அளவுக்கு அதிகமாக சாப்பிட நேரிடலாம். காலை உணவை தவிர்ப்பவர்கள்தான் அதிக அளவு உடல்பருமன் பிரச்னையை எதிர்கொள்கிறார்கள் என்று ஓர் ஆய்வு சொல்கிறது.
அதேபோல பால் பொருட்கள் கொழுப்பு சத்து மிக்கவை. அவை உடல் எடையை அதிகரிக்கும் என்பதும் தவறான எண்ணம். வலிமையான தசைகள்

மற்றும் உள் உறுப்புகள் இயக்கத்துக்கு பால் பொருட்களில் உள்ள புரதம் அவசியம். மேலும், பாலில் உள்ள வைட்டமின் D மற்றும் கால்சியம் சத்து எலும்புகளுக்கு வலிமை கொடுப்பவை.சைவ உணவு சாப்பிடுவதால் உடல் எடையைக் குறைக்கலாம் என்பதும் தவறான நம்பிக்கைதான். உண்பது அசைவமா? சைவமா? என்பதெல்லாம் பிரச்னை இல்லை. அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதில்தான் பிரச்னை இருக்கிறது. உணவு சத்தானதாக இருக்க வேண்டும் என்பதைப் போலவே, அளவுக்கு அதிகமாக இருக்கக் கூடாது என்பதும் முக்கியம்.மூன்று வேளைகளுக்கு பதில், ஒரு நாள் உணவை 6 சிறு சிறு பகுதிகளாகப் பிரித்துக் கொண்டு உண்ணலாம். சாப்பிடும் தட்டில் பாதியளவு காய்கறிகளும், பழங்களும் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். சரி
விகித உணவைப் பின்பற்றினாலே போதும். வேறு எந்த டயட்டையும் கடைபிடிக்க வேண்டிய அவசியமில்லை’’ என்கிறார்.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url