Type Here to Get Search Results !

சிவில் சர்வீசஸ் தேர்வில் காப்பி அடித்த ஐ.பி.எஸ். அதிகாரியின் மனைவி ஐதராபாத்தில் கைது



சென்னை,

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) சார்பில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ். உள்ளிட்ட 24 சிவில் சர்வீசஸ் பணிகளில் 985 பதவி இடங்களை நிரப்புவதற்கான முதன்மை தேர்வு கடந்த 28–ந்தேதி தொடங்கி 5–ந்தேதி வரை நடக்கிறது. சென்னை உள்பட நாடு முழுவதும் 24 நகரங்களில் இந்த தேர்வு நடைபெறுகிறது.

ஐ.பி.எஸ். அதிகாரியான நாங்குநேரி உதவி போலீஸ் சூப்பிரண்டு சபீர் கரீமும் ஐ.ஏ.எஸ். ஆக வேண்டும் என்பதற்காக இந்த தேர்வை எழுதினார். எழும்பூர் மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் சபீர் கரீம் 28–ந்தேதி முதன்மை தேர்வை எழுதினார். தேர்வாளர்களை போலீசார் கடுமையாக சோதனை செய்தபின்னரே மையத்துக்குள் அனுமதிப்பார்கள். சபீர் கரீம் ஐ.பி.எஸ். அதிகாரி என்பதால் போலீசார் சோதனை செய்யாமல் மரியாதையுடன் அனுமதித்துள்ளனர்.

எனினும் அவரது செய்கைகள் அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து மத்திய உளவுப்பிரிவு அதிகாரிகள் சபீர் கரீமின் நடவடிக்கைகளை ரகசியமாக கண்காணித்தனர்.

சபீர் கரீம் தனது காதில் சிறிய அளவிலான ‘புளுடூத்’ கருவியை மறைத்து வைத்து, யாரிடமோ பேசுவதை கண்டுபிடித்தனர்.  தேர்வு மையத்தில் இருந்து கேள்விகளை அவரது மனைவியிடம் சொல்லி, அதற்கான விடைகளை கேட்டு எழுதியதை உளவுபிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அவரை கையும் களவுமாக பிடிக்க அதிகாரிகள் திட்டமிட்டனர். நேற்று நடந்த பொது அறிவு 2–ம் தாள் தேர்வையும் அதே பாணியில் எழுதியபோது அவர் பிடிபட்டார். உடனடியாக அவர் தேர்வு மையத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். அவர் எழுதிய விடைத்தாளும் பறிமுதல் செய்யப்பட்டது.

அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். இதுபற்றி போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

சபீர் கரீம் நேற்று மாலை கைது செய்யப்பட்டார். அவரை மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்போவதாக போலீசார் தெரிவித்தனர். அவரது மனைவி ஜாய்சியும் கைது செய்யப்படுவார் என்று கூறப்பட்டது.

இந்நிலையில், ஜாய்ஸ் ஜோ இன்று கைது செய்யப்பட்டு உள்ளார்.  அவர் ஐதராபாத்தில் பதுங்கி இருந்த நிலையில் போலீசார் அவரை கைது செய்தனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad