Type Here to Get Search Results !

2.0 செய்தியாளர் சந்திப்பு: ரஜினி, ஷங்கர், ரஹ்மான், அக்‌ஷய் குமார் என்ன பேசினார்கள்?



துபையில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ரஜினி, ஷங்கர், ஏ.ஆர். ரஹ்மான், அக்‌ஷய் குமார், ஏமி ஜாக்சன் ஆகியோர் கலந்துகொண்டார்கள்.



2.O (எந்திரன் படத்தின் 2-ம் பாகம்) படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துவருகிறது. பட்ஜெட் - ரூ. 400 கோடி. ரஜினிக்கு இணையான கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் நடிக்கிறார். கதாநாயகி - ஏமி ஜாக்சன். ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைத்துள்ளார். வசனம் - ஜெயமோகன். ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா-வும் முத்துராஜ் கலை இயக்குநராகவும் படத் தொகுப்பாளராக ஆண்டனியும் ஒலி வடிவமைப்பாளராக ஆஸ்கர் விருது பெற்ற ரசூல் பூக்குட்டியும் பணியாற்றுகிறார்கள். 3டி தொழில்நுட்பத்தில் 2.0 படம் உருவாகிவருவதால் இதன் கிராபிக்ஸ் பணிகள் அமெரிக்காவில் தற்போது நடைபெற்று வருகின்றன. 2.0, ஜனவரி மாதம் 25 அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை துபையில் 2.0 பாடல்கள் வெளியிடப்படவுள்ளன. ரஜினி, ஷங்கர், ஏ.ஆர். ரஹ்மான் உள்ளிட்ட படக்குழுவினர் இந்த விழாவில் கலந்துகொள்ளவுள்ளார்கள்.

இதனையொட்டி, துபையில் இன்று நடைபெற்ற 2.0 படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் ரஜினி, ஷங்கர், ஏ.ஆர். ரஹ்மான், ஏமி ஜாக்சன் ஆகியோர் பங்கேற்றார்கள். அவர்கள் பேசியதன் விவரங்கள்:



ஷங்கர்

2.0 படம் எந்திரன் படத்தின் தொடர்ச்சியல்ல. இது வேறு படம். புதுமையான கதையம்சத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. சர்வதேசத் தரத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு சராசரி இந்திய ஆக்‌ஷன்
படமாக இருக்காது.

3டி படமாக உருவாக்கியதற்குக் காரணம், கதைக்கு அது தேவையாக இருந்ததால்தான். 3டியில் படம் பார்ப்பது மிகவும் அற்புதமாக உள்ளது. தொழில்நுட்ப ஏமாற்றுவேலைகளைக் கொண்டு ரசிகர்களைத்
திரையரங்குக்கு அழைக்கும் விஷயம் கிடையாது. 2.0 படத்தை 3டியில் பார்க்கும் இந்திய ரசிகர்கள், திரையரங்குகளில் 3டி படங்களைப் பார்க்க இன்னும் ஆவலாக இருப்பார்கள். 

2.0 படத்தின் கதைக்காக ஒருவருடம் காத்திருந்தேன். ஹாலிவுட் பாணியில் படமாக்கியிருந்தாலும் எந்தவொரு ஹாலிவுட் படத்தின் தழுவலாக 2.0 இருக்காது. இந்தப் படத்தின் என்னுடன் புதிய குழு பணியாற்றியது. எந்திரன் படத்தினால் எல்லாக் கதாபாத்திரங்கள் குறித்த அறிமுகம் இருந்தது.

சர்வதேச தரத்தில் படமாக்கினாலும் படத்தில் உள்ள கருத்து உள்ளூர்த்தன்மையுடன் இருக்கும். உலகின் எந்தவொருமூலையில் இருப்பவரும் இதன் கதையுடன் பொருந்திப்போகமுடியும். எனவே நாங்கள்
பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டை அணுகினோம். அவர் குழுவினருடன் தீவிரமாக விவாதம் செய்தோம். ஆனால் நாங்கள் எண்ணியபடி நடக்கவில்லை. ஒப்பந்தத்தைக் கையெழுத்திடுவதில் சில தடைகள் இருந்தன. பிறகு அக்‌ஷய் குமாரை அணுகினோம். அவர் இப்படத்தில் நடிக்க ஆர்வமாக இருந்தார்.

அக்‌ஷய் குமார், இந்தப் படத்தின் வில்லன் மட்டும் கிடையாது. அவர் கதாபாத்திரத்தில் பல்வேறு தன்மைகள் உள்ளன. அவர் மிகச்சிறப்பாக நடித்துள்ளார். வித்தியாசமான அக்‌ஷய் குமாரைப் பார்க்கலாம்.

ரஜினி

2.0 படம் மிகவும் மதிப்புமிக்க இந்தியப் படமாக இருக்கும். இந்திய ரசிகர்களை மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் கவனம் ஈர்க்கும். நிஜ வாழ்க்கையில் நான் நடிப்பதில்லை, ஏனென்றால் அதற்கு யாரும்
காசு தருவதில்லை.

அக்‌ஷய் குமார்

ஷங்கர் இயக்குநர் கிடையாது. அவர் ஒரு விஞ்ஞானி. அவர் தன் படம் மூலம் சொல்ல நினைப்பது அபாரம். என்னுடைய ஒப்பந்தம் காரணமாக என்னால் அதிகம் சொல்லமுடியாது. இல்லாவிட்டால் படம் பற்றி இன்னும் அதிகமாகப் பேசுவேன். நான் சொல்லிவிட்டால் என் சம்பளத்தைக் குறைத்துவிடுவார்கள் (சிரிக்கிறார்).

என் கதாபாத்திரத்துக்காக ஷங்கர் நிறைய உழைத்திருந்தார். எனவே அவர் எண்ணியிருந்ததை நான் செய்தாலே போதுமானதாக இருந்தது. என் கதாபாத்திரத்துக்கான ஒப்பனையை மேற்கொள்ள மூன்றரை மணி நேரமும் அதை நீக்க  ஒன்றரை மணி நேரமும் ஆனது. இதுபோன்ற ஒரு கதாபாத்திரத்தில் நான் நடித்ததில்லை. 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad