தேவையில்லாமல் வழக்கு தொடர்ந்தால் அபராதம் : தினகரனுக்கு உச்சநீதிமன்றம் கண்டிப்பு
புதுடெல்லி: அந்நிய செலாவணி மோசடி வழக்கில் டி.டி.வி.தினகரனின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அந்நிய செலாவணி மோசடி வழக்கை 3 மாதத்தில் விசாரித்து முடிக்க சென்னை உயர்நீதிமன்றம் விதித்த உத்தரவை எதிர்த்து டிடிவி. தினகரன் தொடர்ந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பெரா என்னும் அந்நிய செலாவணி மோசடி செய்த வழக்கு விசாரணை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் குற்றச்சாட்டு பதிவுகள் ஒரு தலைபட்சமாக இருப்பதாக டிடிவி. தினகரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரிக்க நீதிமன்றம் குற்றச்சாட்டு பதிவுகளை முதலில் இருந்தே தொடங்க வேண்டும் என்றும் 3 மாதத்தில் வழக்கு விசாரணையை முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால் பெரா வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தினகரன் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், நீதிமன்றங்கள் வழக்கை விரைந்து முடிக்கவே செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. அப்படி இருக்க வழக்கை 3 மாதத்திற்குள் முடிக்கக் கூடாது என்று தடை கோரி வழக்கு தொடர்ந்திருப்பதற்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். இந்த மனு விசாரணைக்கு வந்த போது இது போன்ற கால தாமதம் செய்யும் நோக்கில் மனு தாக்கல் செய்தால் ரூ. 10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் நீதிபதிகள் கண்டிப்புடன் தெரிவித்தனர்.
நீதிபதிகள் டி.டி.வி.தினகரனுக்கு கடும் எச்சரிக்கை
நீதிமன்ற நடவடிக்கையை பாதிக்கும் வகையில் மனுத்தாக்கல் செய்தால் அபராதம் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர். மனுவைத் தள்ளுபடி செய்த நீதிபதிகள் டி.டி.வி.தினகரனுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மனுவை திரும்ப பெறாவிட்டால் ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என நீதிபதிகள் எச்சரித்துள்ளனர். டி.டி.வி.தினகரன் மனுவை திரும்ப பெற்றதால் உச்சநீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்துள்ளது.