காவ்யா மாதவன் முடிவு : திலீப் ரசிகர்கள் கமென்ட்
கேரளாவில் நடந்த நடிகை கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார் மலையாள நடிகர் திலீப். ஜாமீன் கேட்டு அவர் தாக்கல் செய்த மனுவை கேரள உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஆனாலும் குடும்பத்தினர், ரசிகர்கள் மீண்டும் திலீப் நடிக்க வருவார் என்று நம்பிக்கையுடன் உள்ளனர். நடிகை கடத்தல் வழக்கில் திலீப் கைது செய்யப்பட்ட நாள் முதல் இணைய தள ஃபேஸ்புக் பக்கத்தில், ‘திலீப்பை எனக்கு தெரியும், திலீப்பை நம்புகிறோம், திலீப்புக்கு துணை நிற்போம்’ என்ற இணைப்பு வரிகளுடன், ‘திலீப் ஃபேன்ஸ் கிளப்’ என்ற பக்கம் தொடங்கப்பட்டு அதில் அவருக்கு ஆதரவாக ரசிகர்கள் கமென்ட் பகிர்ந்து வருகின்றனர்.
தற்போது அதில் வெளியிடப்பட்ட தகவலில், ‘திலீப், தயவுசெய்து திரும்பி வாருங்கள். சந்தோஷமான வாழ்க்கையை நடத்துங்கள். இந்த போராட்டத்தில் நீங்கள் தோற்கக்கூடாது. உங்கள் அழிவை பார்க்க எண்ணுபவர்கள் முன்னிலையில் நீங்கள் தலைநிமிர வேண்டும். எல்லா தடைகளையும் உங்களால் எதிர்கொள்ள முடியும் என்பது எங்களுக்கு தெரியும். ஏனென்றால் உங்கள் குடும்பம், உங்கள் நல விரும்பிகள் உங்களுக்கு துணையாக இருக்கிறார்கள். உங்கள் மகள் மீனாட்சியுடன் இருக்க காவ்யா மாதவன் எடுத்திருக்கும் முடிவு இந்த இக்கட்டான சூழலை எதிர்கொள்ளும் உங்கள் மகளுக்கு உதவியாக இருக்கிறது’ என குறிப்பிட்டுள்ளனர். முன்னதாக திலீப் ரசிகர் சங்க கூட்டம் நடந்தது. அதிலும் தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர்.