சர்வதேச போட்டிகளில் 100-அரைசதம்: தோனி மற்றுமொரு மைல் கல்லை எட்டினார்
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான தோனி, விக்கெட் கீப்பராகவும் பேட்ஸ்மேனாகவும் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். அண்மையில் சர்வதேச போட்டிகளில் 100 ஸ்டம்பிங் செய்த முதல் விக்கெட் கீப்பர் என்ற சாதனையை நிகழ்த்தினார். இந்த நிலையில், பேட்ஸ்மேனாக மற்றுமொரு மைல்கல்லை தோனி எட்டியுள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நேற்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறிக்கொண்டு இருந்த போது ஆபத்பாந்தவனாக வந்த தோனி, அரைசதம் அடித்து இந்திய அணி 250 ரன்களை கடக்க உதவினர். 88 பந்துகளில் 2 சிக்சர்கள் 4 பவுண்டரிகள் உட்பட 79 ரன்கள் சேர்த்து தோனி ஆட்டமிழந்தார். நேற்றைய அரை சதம், சர்வதேச போட்டிகளில் டெஸ்ட் உட்பட ஒட்டுமொத்தமாக 100 அரைசதம் என்ற மைல் கல்லை எட்டினர்.
சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் இந்த மைல் கல்லை எட்டிய 14வது வீரர் தோனி ஆவார். இந்திய வீரர்களை பொறுத்தவரை தெண்டுல்கர், ராகுல் டிராவிட், சவுரங் கங்குலி அடுத்தபடியாக 4-வது வீரராக இந்த சாதனையை தோனி படைத்துள்ளார். ஒட்டுமொத்தமாக அதிக அரைசதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் தெண்டுல்கர் முதல் இடத்தில் உள்ளார். தெண்டுல்கர் 164 அரைசதம் அடித்துள்ளார். இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் குமார் சங்கக்காரா 153 அரைசதம், தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் ஜாக் கல்லீஸ் 149 அரைசதம் அடித்து முறையே 2,3 ஆகிய இடங்களில் உள்ளனர்.
தோனியின் இந்த சாதனைக்கு, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் வீரரான சச்சின் தெண்டுல்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். தோனியின் ரசிகர்களும் சமூக வலைதளங்களிலும் தோனியின் சாதனையை கொண்டாடி வருகின்றனர்.