Type Here to Get Search Results !

ஆரோக்கிய வாழ்வு R U COLOR BLIND? கலரெல்லாம் உங்களுக்கு கரெக்டா தெரியுதா?







‘பிசாசு’ படத்தில் ஒரு ஆட்டோக்காரர் வருவார். நினைவுள்ளதா? சாலையில் சிவப்பு விளக்கு எரிவதைப் பார்க்க முடியாமல் சிக்னலில் நின்றுகொண்டிருக்கும் வாகனத்தின் மீது இடித்து நிறுத்துவார். அவருடைய பிரச்னைதான் Color Blind எனப்படும் நிறக்குருடு. அந்த கிளைப்பாத்திரத்தின் அந்தப் பிரச்னைதான் படத்தின் கதையையே உருவாக்கும்.

நிஜவாழ்விலும் நிறக்குருடு பிரச்னை உள்ளவர்கள் செய்யும் அலம்பல்கள் நமக்குத்தான் வேடிக்கையாய் இருக்கும். அவர்களுக்கோ அது ஒரு சிக்கலான தடுமாற்றம். நிறக்குருடு பிரச்னையால் போலீஸ், பைலட், ஷிப் கேப்டன் என்ற எதிர்காலக் கனவுகளில் இடி விழுந்து வாழ்க்கையில் தோற்றவர்கள், பெரிய ஓவியர்களாக இருந்து சரிந்துவிழுந்தவர்கள் என்று நம் கண்ணுக்குத் தெரியாத மிகப்பெரிய வேதனை பட்டியல் உள்ளது.

கலர் கலர் கூம்புகள்

நமது விழித்திரை எனும் ரெட்டினாவில் சிவப்பு, பச்சை, நீலம் என மூன்று அடிப்படையான கூம்பு அணுக்கள் உள்ளன. நாம் பார்க்கும் காட்சியில் இருக்கும் வண்ணங்களை இந்தக் கூம்பு அணுக்களின் கூட்டத்தொகையே தீர்மானிக்கின்றன. அது தமன்னாவின் டாலடிக்கும்  அழகோ காக்கைச் சிறகின் கன்னங்கருமையோ உள்ளதை உள்ளபடி நாம் உணர்வதெல்லாம் இந்த கூம்பு அணுக்களின் மேஜிக்தான். இந்த கலர்ஃபுல் அணுக்களில் குறைபாடுகள் ஏதும் இருந்தால் நாம் பொருட்களின் வண்ணமும் பின்னமாகித்தான் தெரியும்.

ஒரு படத்தில் ஸ்நேகா ஆசை ஆசையாய் நாயகன் விக்ரமுக்கு பிடித்த சேலையைக் கட்டிக்கொண்டு வர நாயகனால் அந்த சேலையின் வண்ணத்தை உணர முடியாமலே போகும் இல்லையா? இதுதான் நிறக்குருடு. உண்மையில் நாயகனுக்கு அந்தப் படத்தில் நேர்வது முழுமையான நிறக்குருடு. முழுமையான நிறக்குருடு ஏற்பட்டால் எந்த வண்ணமுமே தெரியாமல் அனைத்தும் அந்தக் கால சினிமா படம் போல் பிளாக் அண்ட் வொயிட்டில் மாறிவிடும்.

சிவப்பு - பச்சை நிறக்குருடு

விழியில் மூன்று வண்ண அணுக்கள் உள்ளன என்றோம் இல்லையா? இதில் சிவப்பு கூம்பும் பச்சை கூம்பும் முக்கியமானவை. இந்த லட்சக்கணக்கான இரண்டு வகை அணுக்களின் கூட்டுச்செயல்பாட்டால் நாம் பெரும்பாலான வண்ணங்களை அறிகிறோம். சராசரியாக ஓர் ஆரோக்கியமான மனிதனால் லட்சக்கணக்கான வண்ணங்களை கண்டறிய முடியும் என்கிறார்கள்.

முக்கியமான இந்த இரு அணுக்களில் பிரச்னை இருந்தால் 10,000 வண்ணங்கள் மட்டுமே உணர முடியும். முக்கியமாக சிவப்பு பச்சை நிறங்கள்தான் டிராபிக் சிக்னல் முதல் பல இடங்களில் அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன என்பதால் இந்தப் பிரச்னை உள்ளவர்கள் அதிக பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். மேலும், நிறக்குருடு பிரச்னை உள்ளவர்களின் பெரும்பகுதியினர் சிவப்பு பச்சை நிறக்குருடு உள்ளவர்களாகவே உள்ளார்கள்.

நீல நிறக்குருடு

விழியில் உள்ள நீலக்கூம்பு அணுக்களில் பிரச்னைகள் இருந்தால் நீல வண்ணப் பொருட்கள் அதுசார்ந்த பல நூறு வண்ணங்கள் தெரியாமல் போகும். அதாவது அந்தப் பொருள் சாம்பல் அல்லது வெள்ளை வண்ணத்தில் தெரியும். இந்தப் பிரச்னைதான் நீல நிறக்குருடு. பொதுவாக, இந்தப் பிரச்னை மிகவும் அரிதானது. நீல நிறக் குருடு உள்ளவர்களால் நீலம் சார்ந்த நிறங்களை மட்டுமே பார்க்க முடியாது. மற்ற வண்ணங்களைப் பார்க்க முடியும் என்பதால் ஒப்பிட்டளவில் மற்ற நிறக்குருடு ஏற்பட்டிருப்பவர்களைவிடவும் இவர்கள் ஓரளவு அதிர்ஷ்டசாலிகளே.

முழுமையான நிறக்குருடு

இதுவும் மிகவும் அரிதான பிரச்னை. மிகச் சிலருக்கே இந்தப் பிரச்னை உருவாகிறது. ரெட்டினா பாதிப்பு, விழித்திரைப் பிரச்னைகள், ரூமட்டாய்டு ஆர்த்ரைடிஸ், டி.பி எனும் காசநோய், கண் புற்றுநோய் போன்ற பிரச்னை உள்ளவர்களுக்கு முழுமையான நிறக்குருடுப் பிரச்னை உருவாக வாய்ப்பு உள்ளது. முழுமையான நிறக்குருடு பிரச்னை இருப்பவர்களுக்கு உலகமே கறுப்பு-வெள்ளையாகத்தான் தெரியும்.

எவ்வாறு உருவாகிறது? 

அடிப்படையில் இது ஒரு பரம்பரை பிரச்னை. நாம் பிறப்பதற்கு முன்பு இருந்தே நம் முன்னோர்களின் உடலில் நம் வரவுக்காகக் காத்திருப்பது. பெண்களைவிடவும் ஆண்களுக்கே நிறக்குருடு பிரச்னை அதிகமாக ஏற்படுகிறது. X குரோமோசோம்கள்தான் இந்த நிறக்கூம்புகள் உருவாகக் காரணம். ஆண்களின் உடலில் ஒரு X குரோமோசோமும் ஒரு Y குரோமோசோமும் இருக்கும். ஆனால், பெண்களின் உடலில் இரண்டு X குரோமோசோம்கள் இருக்கும். ஏதேனும் ஒரு குரோமோசோமில் பிரச்னை இருந்தாலும் இன்னொரு குரோமோசோம் ஆரோக்கியமாக இருப்பதால், பெண்களுக்கு இந்த நிறக்குருடுப் பிரச்னை அரிதாகவே ஏற்படுகிறது.

காரணங்கள்

முன்பே சொன்னது போல மரபியல் காரணங்களைத் தவிர உறவுகளுக்குள் திருமணம் முடிப்பவர்களுக்கு வரலாம் என்கிறார்கள். மேலும், ‘கோன் டிஸ்ட்ராபி’ என சொல்லக்கூடிய பிரச்னையும் இதற்கான முக்கிய காரணம். இது தவிர, ருமட்டாயிடு ஆர்த்ரைடிஸ் என சொல்லக்கூடிய மூட்டுவலி பிரச்னைக்காகவும், டி.பி. என்கிற காச நோய்க்காகவும் சில மருந்துகளை அளவுக்கதிகமாக எடுத்துக் கொள்பவர்களையும் அபூர்வமாக இந்த நிறக்குருடு பிரச்னை பாதிப்பது உண்டு.

கர்ப்பிணிகள் கர்ப்ப காலத்தில் எக்ஸ்ரே எடுப்பதைத் தவிர்ப்பதும் இந்த பாதிப்பிலிருந்து தப்பிக்க வைக்கும் என்று சமீபத்திய ஆய்வுகள் சொல்கின்றன. பொதுவாக இந்தப் பிரச்னைக்கு வயது வித்தியாசம் கிடையாது. பிறந்த குழந்தை முதல் முதியவர்கள் வரை யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம். பிறவியிலேயே இருக்கலாம். இடையிலும் ஏற்படலாம். குழந்தைக்கு மூன்று வயதுக்குப் பிறகு நிறங்களைப் பிரித்துப்பார்க்கத் தெரியவில்லை என்றால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. நிறக்குருடு பிரச்னையைக் கண்டறிவதற்கு என்று சில பிரத்யேகப் பயிற்சிகள் உள்ளன. இவற்றைப் பரிசோதிப்பதன் மூலம் இந்த பாதிப்பைக் கண்டறியலாம்.

தீர்வு

இது மரபார்ந்த நோய் என்பதால் தீர்வு என்பது சாத்தியம் இல்லை. நிறக்குருடு பிரச்னை உள்ளவர்கள் தங்களின் பிரச்னையை உணர்ந்து சமயோஜிதமாக நடந்துகொள்வது மட்டுமே சாத்தியமானது. தற்போதைய நவீன மருத்துவ ஆய்வுகளில் இதற்கான தீர்வுக்காக தீவிரமாக முயன்றுகொண்டிருக்கிறார்கள். பொதுவாக, கண்களைக் காக்கும் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்வது, போதுமான ஓய்வு, கண்களை அளவுக்கு அதிகமாக வருத்தாமல் இருப்பது போன்றவற்றின் மூலம் கண்களைப் பாதுகாக்க முயற்சி எடுத்தால் பிற நோய்களின் பக்கவிளைவாக நிறக்குருடு ஏற்படுவதை ஓரளவுக் கட்டுப்படுத்த முடியும். நிறக்குருடு பிரச்னை உள்ளவர்கள் இயன்றவரை வாகனங்கள் ஓட்டாமல் இருப்பது, இரவு நேரப் பயணங்களைத் தவிர்ப்பது, யாராவது ஒருவருடன் வெளியில் செல்வது என வாழ்க்கைமுறையை மாற்றிக்கொள்வதுதான் நல்லது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad