இங்கிலாந்துடனான டெஸ்ட்: ஹோப் சதத்தால் வெஸ்ட் இண்டீஸ் அணி வரலாற்று வெற்றி
லீட்ஸ்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் ஷாய் ஹோப் சதத்தால் வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றியை பதிவு செய்தது. இங்கிலாந்து சென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து வென்றது. இரண்டாவது டெஸ்ட் லீட்சில் நடந்தது. இதன் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 258, வெஸ்ட் இண்டீஸ் 427 ரன்கள் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து 490/8 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. நான்காவது நாள் ஆட்ட முடிவில், வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 5 ரன்கள் எடுத்து, 317 ரன்கள் பின்தங்கியிருந்தது.
நேற்று கடைசி நாள் ஆட்டம் நடந்தது. இதில் கைரன் பாவெல் (23), கைல் ஹோப் (0) ஏமாற்றினர். பின் இணைந்த பிராத்வைட், ஷாய் ஹோப் ஜோடி 3வது விக்கெட்டுக்கு 143 ரன்கள் எடுத்தது. பிராத்வைட் (95) சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். எனினும் ஷாய் ஹோப் இந்த டெஸ்டில் இரண்டாவது சதம் அடித்து கைகொடுக்க வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றியை நெருங்கியது. பிளாக்வுட் 41 ரன் எடுத்தார். முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 322 ரன்கள் எடுத்து, 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஷாய் ஹோப் (118), டவ்ரிச் (0) அவுட்டாகாமல் இருந்தனர். இதையடுத்து டெஸ்ட் தொடர் 1:1 என, சமன் ஆனது. இரு அணிகள் மோதும் கடைசி டெஸ்ட் வரும் செப்., 7ல் லார்ட்சில் நடக்கிறது.