Type Here to Get Search Results !

சீரகம்..






உணவுப் பொருட்களில் இணைபிரியாமல் இருக்கும் சகோதரிகளைப் போல சிலவற்றை நாம் பார்க்கிறோம். வெற்றிலை-பாக்கு,  கறிவேப்பிலை-கொத்தமல்லி, இஞ்சி-பூண்டு போன்றவை அதற்கு சிறந்த உதாரணமாகும். அந்த வரிசையில் மிளகோடு இணைத்துப்  பயன்படுத்தப்படுவது சீரகம் ஆகும். கடந்த இதழில் மிளகின் பெருமைகள் பற்றிப் பார்த்ததுபோல், இத்தொடரில் சீரகத்தின் மருத்துவ குணங்கள் மற்றும்  மருத்துவப் பயன்களைப் பற்றி விரிவாகக் காண்போம்.

தமிழ்ப்பெயர்கள் பெரும்பாலும் அப்பெயரைத் தாங்கி நிற்கும் பொருளின் தன்மையைக் குறிப்பதாகவே இருக்கும். இது மனதில் நிறுத்திக் கொள்ளவும் மிக  எளிய வழியாகவும் அமையும். அதன் வழியில் சீரகம் என்பது சீர் + அகம் என்கிற இரண்டு பகுதிகளை உடையது. சீர் என்பது சிறப்பானது, ஒழுங்கானது, பெருமையுடையது என பொருள்படும். அகம் என்பது நம் உடலையும் உள்ளத்தையும் குறிப்பதாக அமையும்.  அவ்வகையில் சீரகம் மனதுக்கு மட்டுமின்றி உடலுக்குள் இருக்கிற அனைத்து உறுப்புகளுக்கும் சீரான ஆரோக்கியத்தையும், ஆயுளையும் அளிப்பதால்  அப்பெயர் அமையப் பெற்றது என்று புரிந்துகொள்ளலாம்.

மருத்துவப் பெயர்கள்

நற்சீரகம், காட்டு சீரகம், கருஞ்சீரகம், பெருஞ்சீரகம் அல்லது சோம்பு என சீரகம் பல வகைகளில் உண்டு. நற்சீரகமும் பெருஞ்சீரகமும் உணவுக்கும்  மருந்துக்கும் பயன்படும். மற்றவை மருந்தாக மட்டுமே பயன்படும். இவற்றில் நற்சீரகத்தை Cuminum cyminum என்று தாவரப் பெயராலும், Cumin  என்று ஆங்கிலப் பெயராலும், ஸ்வேத சீரகம், அஜாஜி, போஜன குடோரி என்று வடமொழிப் பெயராலும் அழைக்கிறார்கள். மேலும் இது பித்த நாசினி  என்ற பெயரையும் கொண்டுள்ளது.

சீரக சுத்தி

சீரகத்தை மருந்தாகப் பயன்படுத்தும் முன் அதை நச்சு நீக்கிச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். பொதுவாக, சீரகத்தை சுண்ணாம்பு நீரில் ஒரு இரவு  முழுதும் ஊறவைத்து எடுத்து உலர்த்தி புடைத்து சுத்தப்படுத்தி வைத்துக் கொண்டு மருந்துக்கு உபயோகப்படுத்துவது சிறந்த முறையாகும். சீரகத்தை மென்மையான துகள்களாக அரைக்கும்போது அதிலுள்ள எண்ணெய் பிசுபிசுப்பில், 50% பகுதி காற்றில்  ஆவியாகக்கூடும் என்பதால் அரைத்த ஒரு மணி நேரத்துக்குள் சீரகத்தைப் பயன்படுத்துவதால் அதன் முழுமையான பலன் நமக்குக் கிடைக்கும்.

மருத்துவ குணங்கள்

சீரகம் ஓர் அகட்டு வாய்வகற்றி, வயிற்றுக் கடுப்பகற்றி, உள்ளுறுப்புள் தூண்டி, சிறுநீர்ப்பெருக்கி, கிருமிநாசினி, மாதவிலக்குத் தூண்டி, தாய்ப்பால்  பெருக்கி, பசி தூண்டி, ரத்த அழுத்த சமனி. மேலும் இது ஜீரண வலிவை வளர்க்கும். மலத்தைக் கட்டும். புத்திக்கு பலம் தந்து ஞாபக சக்தியை  பெருக்கும். கருப்பையைத் தூய்மைப்படுத்தும். விந்துவை வளர்க்கும். உடல் வலிவும் வனப்பும் பெறச் செய்யும். உணவுக்குச் சுவையுண்டாக்கும்.  கண்களுக்கு குளிர்ச்சி தரும். வெறி நோய் குணமாகும்.

குருதிக்கழிச்சல் என்னும் ரத்தபேதி குணமாகும். வாய் நோய்கள் அத்தணையும் போக்கும். ஈரலை பலப்படுத்தும். கல்லடைப்பு எங்கிருந்தாலும் அதை  வெளித்தள்ள உதவும். கொத்தமல்லி விதையைப் போல ஜீரணிக்கும் சக்தியைத் தரக் கூடியது சீரகம். வயிற்றுவலி, கெட்டிப்பட்ட சளி, காசம்  (என்புறுக்கி நோய்) ஆகியவற்றை போக்கும் திறன் கொண்டது நற்சீரகம். காட்டு சீரகம் சரும நோய்களை விரட்டும். பெருஞ்சீரகம் எனப்படும் சோம்பு  மூக்கொழுக்கு, அஜீரணம், வயிற்று உப்புசம் ஆகியவற்றை விரட்டும். கருஞ்சீரகம் மண்டை கரப்பான், உட்சூடு, தலைநோய் ஆகியவற்றை  குணப்படுத்தும்.

சீரகத்தின் பெருமை சொல்லும் பாடல்கள்

‘வாயுவொடு நாசிநோய் வன்பித்தஞ் சேராது
காயம் நெகிழாது கண்குளிருந் - தூயமலர்க்
காரகைப் பெண்மயிலே! கைகண்ட தித்தனையுஞ்
சீரகத்தை நீ தினமும் தின்’

- அகத்தியர் குணபாடம்.

வாயுவால் ஏற்படுகிற நோய்கள், மூக்கு சம்பந்தப்பட்ட நோய்கள், பித்தம் சம்பந்தப்பட்ட நோய்கள், கண் சூடு, எரிச்சல் ஆகியவை சீரகத்தால்  குணமாவதுடன் உடலும் பலம் பெறும் என்பது மேற்கூறிய பாடலின் பொருளாகும்.

‘வாந்தி யருசிகுன்மம் வாய்நோய்ப் பீலிகமிரைப்
பேற்றிருமல் கல்லடைப்பி லாஞ்சனமும் - சேர்ந்த கம்மல்
ஆசன குடாரியெனும் அந்தக் கிரகணியும்
போசன குடாரியுண்ணப் போம்’

- தேரையர் குணபாடம்.

பித்த வாந்தி, சுவையின்மை, வயிற்று வலி, வாய் நோய்கள், கெட்டிப்பட்ட சளி, ரத்தபேதி, இரைப்பு, இருமல், கல்லடைப்பு, கண் எரிச்சல்  ஆகியவற்றைப் போக்கும் என்பது இப்பாடலின் உட்பொருளாகும்.

மேற்கூறிய பாடலில் ‘குடாரி’ என்ற சொல்லை சீரகத்துக்கு பொருத்தி தேரையர் சொல்லி இருக்கிறார். குடாரி என்ற சொல் மரத்தைப் பிளக்கப்  பயன்படும் ‘கோடாலி’ என்னும் வலிமை பொருந்திய ஆயுதத்தின் பெயரைக் குறிப்பதாகும். இதேபோல இன்னோர் பாடலில், ‘போசன குடாரியைப் புசிக்கில் நோயெலாமறுங் காசமி ராதக் காரத்தி லுண்டிட’ என்றும் சொல்லப்பட்டுள்ளது. எவ்வகையிலேனும் உணவில் சீரகத்தைச் சேர்த்துக் கொள்வதால் காசநோய் உள்ளிட்ட அத்தனை நோயும் குணமாகும் என்பது இப்பாடலின்  பொருளாகும்.

சீரகத்தில் நறுமணமும் காற்றில் ஆவியாகக் கூடியதும், மஞ்சள் நிறம் கொண்டதுமான எண்ணெய் தன்மை 2.5 - 4% வரை உள்ளது. இந்த எண்ணெயில்  Cumic aldehyde என்னும் வேதிப்பொருள் 52% அளவுக்கு செறிந்துள்ளது. இந்த எண்ணெயில் இருந்து செயற்கையாக தைமால்(Thymol)  என்னும் ஓம உப்பு செய்யப்படுகிறது. சீரகத்தின் எண்ணெய் சீழையும் கிருமிகளையும் அழிக்கவல்லது. மேலும் சீரகத்தில் அடல் எண்ணெய் 10%  வரையிலும் பென்டோசான் 6.7% வரையிலும் அடங்கியுள்ளது.

சீரகத்தின் மருத்துவப் பயன்கள்

* சீரகத்தையும் மிளகையும் சம பங்கு எடுத்து பாலோடு சேர்த்து அரைத்து தலைக்குத் தேய்த்து வைத்திருந்து அரை மணி நேரம் கழித்து குளிக்க தலை  அரிப்பு, பொடுகு, பேன் முதலியன ஒழியும்.

* ஒரு லிட்டர் நல்லெண்ணெயில் சுமார் 30 கிராம் சீரகத்தைப் பொடித்துப் போட்டு நன்றாகக் காய்ச்சி வடித்து வைத்துக் கொண்டு தலைக்குத் தேய்த்து  வைத்திருந்து சிறிது நேரங்கழித்து குளித்து வர தலை உஷ்ணம் (கபாலச்சூடு), உடற்சூடு (உள் அனல்), மேகத் தழும்பு(சரும நோய்கள்) ஆகியன  குணமாகும்.

* மிளகு, சீரகம் இரண்டையும் சம அளவு சேர்த்து பொடித்து வைத்துக் கொண்டு வெருகடி அளவு தேனில் குழைத்தோ அல்லது வெந்நீருடனோ சேர்த்து  சாப்பிட அஜீரணத்தால் ஏற்பட்ட கடுமையான வயிற்றுவலி, பித்த மயக்கம், உணவின் மீது வெறுப்பு ஆகியவை போகும்.

* சீரகத்தை அரைத்துக் களியாகக் கிண்டி கட்டிகளின் மேல் வைத்துக் கட்ட கட்டியினால் ஏற்படும் உஷ்ணத்தையும், வலியையும் போக்குவதோடு  வீக்கமும் வற்றும்.

* சீரகத்தைச் சூரணித்து வெருகடி அளவு எடுத்து எலுமிச்சை ரசத்தில் சர்க்கரை சேர்த்துக் கொடுக்க கர்ப்பிணிகளுக்குத் துன்பந்தரும் வாந்தி குணமாகும்.

* ஒரு ஸ்பூன் அளவு சீரகத்தைப் பொடித்து ஒரு வாழைப்பழத்தோடு சேர்த்து உறங்கப் போகும்முன் சாப்பிட நல்ல தூக்கம் வரும்.

* வயிற்றில் அமிலச் சுரப்பு அதிகமானதால் ஏற்பட்ட வயிற்றுவலிக்கு ஒரு ஸ்பூன் சீரகத்தை வாயிலிட்டு மென்று அதன் சாற்றை விழுங்க உடனே  பலன் கிடைக்கும்.

* சீரகம், இந்துப்பு(நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்) இரண்டையும் சேர்த்து மைய அரைத்து அத்துடன் சிறிது நெய் விட்டுச் சூடாக்கித் தேள்  கொட்டிய இடத்தில் பூசி வைக்க நஞ்சு இறங்கி வலி மறையும்.

* வெருகடி அளவு சீரகத்தைப் பொடித்து அதனோடு சிறிது வெல்லம் அல்லது தேன் சேர்த்து சாப்பிட்டு உடன் துணை மருந்தாக மோரை உட்கொள்ளச்  செய்து உடல் வியர்க்கும் வரை வெயிலில் இருக்கச் செய்ய காய்ச்சல் தணியும்.

* சீரகப்பொடியோடு கற்கண்டுத் தூள் சேர்த்து தினமும் இருவேளை சாப்பிட்டு வர குத்திருமல், வறட்டு இருமல் தணியும்.

* சீரகத்தைப் பொடித்து வெண்ணெயில் குழைத்துக் கொடுக்க எரிகுன்மம் என்னும் அல்சர் குணமாகும்.

* 35 கிராம் சீரகம் மற்றும் போதிய அளவு உப்பு சேர்த்து அரைத்து நெய் விட்டு தாளித்து தேன் அல்லது சர்க்கரையுடன் சேர்த்துக் கொடுக்க வளி(வாயு)  மற்றும் தீக்குற்றத்தால் வந்த நோய்கள் குணமாகும்.

* சீரகத்தை 50 கிராம் அளவு எடுத்து எலுமிச்சம் பழச்சாற்றில் அரைத்து நல்ல வெல்லம் 20 கிராம் அளவுக்கு சேர்த்துப் பிசைந்து ஒரு புதுச்சட்டியின்  மேல் அப்பி வெயிலில் காயவைத்து எடுத்து வைத்துக் கொண்டு 500 மி.கி. அளவுக்கு இரண்டு வேளையும் சாப்பிட்டு வர வெட்டை என்கிற உடற்சூடு,  கை கால் குடைச்சல், எரிச்சல், குலை எரிச்சல் முதலியன குணமாகும்.

* சீரகத்தைப் பொன்னாங்கண்ணிச் சாற்றில் ஊறவைத்து பின் காயவைத்து அரைத்த பொடி 4 கிராம் அளவும், சர்க்கரை 2 கிராமும், சுக்குத்தூள்
2 கிராமும் சேர்த்துக் கலந்து தினம் இருவேளை உட்கொண்டு வர காமாலை, வாயுத் தொல்லைகள், உட்காய்ச்சல் தீரும்.

* சீரகம், ஏலம், பச்சைக் கற்பூரம் மூன்றையும் சம அளவு எடுத்து பொடித்து அதன் எடைக்குச் சரி எடை சர்க்கரை சேர்த்து வைத்துக் கொண்டு அந்தி  சந்தி என இருவேளை வெருகடி அளவு சாப்பிட்டு வர மந்தம், வாயு, ரத்த அழுத்தம் சமனமாகும்.

* 5 கிராம் சீரகத்தோடு 20 கிராம் கறிவேப்பிலை சேர்த்து அரைத்து வாயிலிட்டு வெந்நீர் குடித்து விட வயிற்றுப்போக்கு குணமாகும்.
* சீரகத்தை வெருகடி அளவு திராட்சைப் பழச்சாற்றுடன் சேர்த்து குடிக்க உயர் ரத்த அழுத்தம் குறையும்.

* சீரகத்தோடு இரண்டு வெற்றிலை 5 மிளகு சேர்த்து மென்று சாப்பிட்டு குளிர் நீர் ஒரு டம்ளர் சாப்பிட வயிற்றுப் பொருமல், வயிற்றுவலி குணமாகும்.

* சீரகத்தோடு கீழாநெல்லி சேர்த்து அரைத்து எலுமிச்சை ரசத்தில் சேர்த்து குடித்து வர கல்லீரல் கோளாறுகள் காணாது போகும்.

* மஞ்சள் வாழையோடு 5 கிராம் சீரகம் சேர்த்து சாப்பிட்டு வர உடல் எடை குறையும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad