பாலியல் வழக்கில் சிக்கிய சாமியார் குர்மீத் ரகீம் சிங்கிற்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவு..!
பெண் சாமியார்களை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரகீம் சிங்கிற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் லட்சக் கணக்கான ஆதரவாளர்களை கொண்டுள்ள அமைப்பு தேரா சச்சா சவுதா. இந்த அமைப்பின் தலைவரான குர்மீத் ராம் ரகீம் சிங் மீதான பாலியல் பலாத்கார வழக்கு சிபிஐ யால் விசாரிக்கப்பட்டது. ஹரியானாவில் உள்ள பஞ்ச்குலா சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணைக்கு பிறகு குர்மீத் ராம் ரகீம் சிங் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டது.
இதையடுத்து, பஞ்சாப், அரியானாவில் வெடித்த கலவரத்தில் 38 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். வாகனங்கள், அரசு அலுவலங்கள், பொதுச்சொத்துகள் சூறையாடப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டன.
இந்தநிலையில், ரோத்தக் சிறையில் தற்காலிக நீதிமன்றம் அமைக்கப்பட்டு இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. முன்னதாக இருதரப்பினரும் தங்கள் தரப்பு வாதத்தை முன்வைக்க நீதிபதி அனுமதி வழங்கினார். குர்மீத் ரகீமுக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை வழங்க சிபிஐ தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
தண்டனையை குறைக்க வேண்டும் என்று குர்மீத் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தீர்ப்பினை வாசித்த நீதிபதி ஜெகதீப் சிங் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.