எலும்புகள் பலமாக...
கால்சியம் உணவுகள்
உடலுக்குத் தேவைப்படும் சத்துக்களில் கால்சியம் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. கால்சியம் குறைந்தால் எலும்புகள் பலவீனமடைவதோடு ரத்த செல்கள் உருவாவதிலும் பிரச்னைகள் ஏற்படும். பெரும்பாலும் மாதவிடாய் நிற்கும் காலத்தில் உள்ள பெண்களுக்கே கால்சியம் சத்து குறைபாடு வருகிறது என்ற நிலை மாறி, இன்று ஆண்களும் கால்சியம் குறைபாட்டால் பாதிக்கப்படுவது அதிகரித்து வருவதாக பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இந்தக் குறைபாட்டை நீக்குவதற்கு கால்சியம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதுடன், கால்சியம் சத்தை உடல் கிரகித்துக் கொள்வதற்குத் தேவையான வைட்டமின் டி சத்தும் நமக்கு அவசியம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.சரி... எதிலெல்லாம் கால்சியம் மற்றும் வைட்டமின் டி இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்வோமா...
பாலில் கால்சியம் அதிகம் இருப்பது நாம் அறிந்ததே. அதனால், தினமும் ஒரு டம்ளர் பால் அருந்துவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். மருத்துவ ஆலோசனையின் பேரில் புரோட்டீன் பவுடர் கலந்தும் பால் அருந்தலாம். தயிரிலும் அதே அளவு கால்சியம் இருக்கிறது என்பதால் பால் பிடிக்காதவர்கள் தயிரை சாப்பிடலாம். முட்டை, வெண்ணெய் போன்றவற்றிலும் புரதத்துடன் கால்சியம் நிறைந்திருக்கிறது.
அதேபோல், உலர் அத்திப்பழத்தில் கால்சியம் மற்றும் இரும்புச் சத்துக்கள் உள்ளன. எனவே, நாள் ஒன்றுக்கு இரண்டு அல்லது மூன்று அத்திப்பழத் துண்டுகளை சாப்பிடலாம். முக்கியமாக, அனைத்து கடல் உணவுகளும் கால்சியம் சத்துப்பொருளை உள்ளடக்கியவையே.
பாதாம், பிஸ்தா போன்ற பருப்புகளில் உடலுக்குத் தேவையான தாது உப்புகளுடன் கால்சியம், மெக்னீசியம், மாங்கனீஸ், பாஸ்பரஸ் போன்றவைகளும் காணப்படுகின்றன.
சாதாரணமாகக் கிடைக்கக்கூடிய 100 கிராம் ராகியில் 330 மில்லிகிராம் முதல் 350 மில்லி கிராம் கால்சியம் சத்து உள்ளது. அதேபோல் கருப்பு உளுந்து, சோயாபீன்ஸ், கொள்ளு போன்றவைகளிலும் கால்சியம் உள்ளது.