பாலின் தரம் குறித்துப் பேச அமைச்சர் பாலாஜிக்குத் தடை: தனியார் பால் நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவு
பாலின் தரம் குறித்துப் பேச அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்குத் தடை விதித்து தனியார் பால் நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஹட்சன், டோட்லா, விஜய் அக்ரோ ஆகிய தனியார் பால் நிறுவனங்கள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மே 24 அன்று தங்கள் மீது ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாகவும், இதனால் அவரின் பேச்சுக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும், இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மே 24ம் தேதியன்று, எங்கள் மீது ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதனால் மக்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டது. அவரின் குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மைக்குப் புறம்பானவை. இவற்றால் மக்களிடையே பீதி ஏற்பட்டது. எங்களில் பால் விற்பனை கடுமையான சரிவு ஏற்பட்டது.
பரபரப்பைக் கிளப்பும் வகையில், சமூகப் பொறுப்புள்ள ஒரு அமைச்சர் இவ்வாறு ஆதாரமில்லாத குற்றசாட்டை முன்வைத்தது தவறானது. இனிமேலும் அவர் இதுபோலப் பேசத் தடை விதிக்க வேண்டும்.. தனியார் பால் நிறுவனங்கள் பற்றிய ஆதாரமில்லாமல் குற்றச்சாட்டை முன்வைத்தற்காக ஒவ்வொரு நிறுவனத்துக்கும் தலா ரூ.1 கோடி அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தன.
இந்த வழக்கு இன்று (திங்கட்கிழமை) காலை நீதிபதி கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மனு தொடர்பாக நான்கு வாரத்துக்குள் பதிலளிக்க வேண்டும். அதுவரை அவர் தனியார் நிறுவனங்கள் குறித்துப் பேசக்கூடாது என்று பதிலளித்து உத்தரவிட்டார்.