தனக்கு மூளை அறுவை சிகிச்சை நடக்கும்போது கிடார் வாசித்த கலைஞர்



அறுவை சிகிச்சை மேசையில் இயல்பாகவும், விழிப்போடும் இருந்தேன் - பிரசாத்
தனது மூளையில் அறுவை சிகிச்சை நடக்கும்போதே கிடார் வாசித்தார் இந்திய இசைக்கலைஞர் ஒருவர்.
அபிஷேக் பிரசாத் என்ற அந்தக் கலைஞருக்கு கிடார் வாசிக்கும்போது கையில் ஏற்படும் அனிச்சையான தசைப் பிடிப்பை சரி செய்வதற்காக இந்த அறுவை சிகிச்சை நடந்தது.

'மியூசிஷியன்ஸ் டிஸ்டோனியா' என்று அறியப்படும் நிலையை சரி செய்வதற்காக மூளையின் சில மின் சுற்றுகள் இந்த அறுவை சிகிச்சையின் போது எரிக்கப்பட்டன. இந்நிலையால் வலி மிகுந்த பிடிப்புகள், விரல்கள் முறுக்கிக்கொள்வது, மீண்டும் மீண்டும் அசைவு போன்றவை ஏற்படும்.
ஒவ்வொரு சுற்றினை எரிக்கும்போதும் டாக்டர்கள் அபிஷேக் பிரசாத்தை கிடார் வாசிக்கச் சொன்னார்கள்.

"ஆறாவது முறை எரிக்கும்போதே விரல்கள் திறந்துவிட்டன. அறுவை சிகிச்சை மேசையிலேயே நான் இயல்பு நிலைக்கு வந்துவிட்டேன்," என்று வியாழக்கிழமை தையல் பிரிக்கப்பட்டவுடன் பெங்களூர் மருத்துவமனையில் தெரிவித்தார் பிரசாத்.

இவரது இடதுகை நடுவிரல், மோதிரவிரல், சுண்டுவிரல் ஆகியவைகளை கிடார் வாசிக்கும்போது செயல்படாமல் தடுத்தது இந்த டிஸ்டோனியா.
"அதிகம் பயிற்சி செய்ததால்தான் விரல்கள் இறுக்கமாக இருந்ததாக நினைத்தேன். ஓய்வு எடுத்தபின் வாசித்தபோதும் வலி போகவில்லை. தசைச் சோர்வு என்று கூறிய சில மருத்துவர்கள் வலி நிவாரணிகள், ஊட்டச்சத்து மருந்துகள், ஆன்டிபயாட்டிக், பிசியோதெரபி சிகிகிச்சை ஆகியவை தந்தார்கள்," என்றார் அவர்.

கிடார் வாசிக்கும்போது மட்டும்தான் அந்த பிடிப்பு வந்தது என்று கூறிய பிரசாத் ஒன்பது மாதங்கள் முன்பாக ஒரு நரம்பியல் வல்லுநர் தாம் டிஸ்டோனியாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சரியாகக் கண்டுபிடித்தார் என்றார்.

"அறுவை சிகிச்சை செய்துகொள்ளும்படி டாக்டர் கூறியபோது எனக்கு அச்சம் ஏற்பட்டது. ஆனால் மருத்துவர் ஷரண் சீனிவாசன் அறுவை சிகிச்சை செய்துகொள்ள நம்பிக்கை தந்தார்," என்கிறார் பிரசாத்.

ஜெனரேட்டர் போல...

சிகிச்சை நடந்தபோது நடந்த ஒவ்வொன்றையும் தெளிவாக நினைவுகூர்கிறார் இந்த இசைக் கலைஞர்.
தமது மண்டை ஓட்டை வெட்டித் திறந்து எம்.ஆர்.ஐ. ஸ்கேன் செய்யும் முன்பாக, தலையில் நான்கு ஸ்குருக்களுடன் சட்டம் ஒன்றை டாக்டர்கள் பொருத்தியதாகச் சொல்கிறார் இவர்.

"மின் முனைகளைச் செருகுவதற்கான சரியான மின் சுற்றுகள் மூளையின் எவ்வளவு ஆழத்தில் உள்ளன என்பதைக் கணிக்க எம்.ஆர்.ஐ. ஸ்கேன் பயன்பட்டது. அறுவை சிகிச்சை நடக்கும்போது ஜெனரேட்டர் ஒன்று ஓடிக்கொண்டிருந்தது போல உணர்ந்தேன். ஆனால் வலி இல்லை," என்று கூறினார் பிரசாத்.


அறுவை சிகிச்சைக்கு பிறகு தன்னால் கிட்டார் வாசிக்க முடிந்தது என்று இந்த இசைக்கலைஞர் தெரிவித்திருக்கிறார்.

"அறுவை சிகிச்சை நடக்கும் இடத்தை மட்டும் மரத்துப்போகச் செய்யும் லோக்கல் அனஸ்தீஷியா தரப்பட்டதால் நோயாளிக்கு வலி தெரியவில்லை. மண்டையில் 14 மில்லிமீட்டர் துளையிட்டு இதற்கென தனியாக வடிவமைக்கப்பட்ட மின் முனை ஒன்று மூளையில் 8-9 சென்டிமீட்டர் ஆழத்துக்கு செருகப்பட்டது," என்றார் டாக்டர் சீனிவாசன்.

"சிகிச்சை நடக்கும்போது நோயாளி சுய நினைவிலேயே இருந்தார். சிகிச்சை மேசையிலேயே பலன் தெரிந்துவிட்டது. நோயாளியின் விரல்கள் சகஜமாக கிடாரில் அசையத் தொடங்கின," என்றும் அவர் கூறினார்.

தமத இடது காலும் இடது கையும் சிறிது பலவீனமாக இருப்பதாகவும் ஒரு மாதத்தில் பூரண குணம் பெற்று தீவிர கிடார் பயிற்சியைத் தொடக்க முடியும் என்றும் தெரிவித்தார் பிரசாத்.

இது மாதிரியான மூளை மின்சுற்று அறுவை சிகிச்சை இந்தியாவிலேயே செய்யப்படுவது ஒரு முக்கியமான மைல்கல் என்று கூறிய டாக்டர் சீனிவாசன், இவ்வகை நரம்புமண்டலப் பிரச்சினையால் பாதிக்கப்படுவோர் மன அழுத்தத்துக்கு ஆளாவதாகவும், தனிமை நிலைக்குள் சென்றுவிடுவதாகவும், இதுபோன்ற நோயாளிகளுக்கு சிகிச்சையைக் கொண்டு செல்லவே தாங்கள் விரும்புவதாகவும் தெரிவித்தார்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url