இந்திய ரயிலில் வழங்கப்படும் உணவு "மனிதர் உண்பதற்கு பொருத்தமற்றது"
இந்தியாவில் இயங்கிவரும் ரயில்களிலும், ரயில் நிலையங்களிலும் பரிமாறப்படும் உணவு, மனிதர்கள் உண்பதற்கு ஏற்றவையல்ல என்று அதிகாரபூர்வ அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
74 ரயில் நிலையங்களில் 80 ரயில்களில் நடத்தப்பட்ட ஆய்வுகளில், சில உணவுகள். அசுத்தமானவை. அதேவேளையில், பொதியப்பட்ட மற்றும் பாட்டிலில் அடைத்து விற்கப்படுகின்ற உணவுகள் காலாவதியானவை என்று ஆண்டு தணிக்கை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஈக்கள், எலிகள் மற்றும் கரப்பான்பூச்சிகளை ஈர்க்கும் வகையில் உணவு திறந்தவெளியில் வைக்கப்படுகின்றன என்றும் அது தெரிவித்துள்ளது.
உலகிலேயே மிக நீளமான ரயில்வே வலையமைப்புகளில் ஒன்றை கொண்டிருக்கும் இந்தியாவில் அன்றாடம் ஏறக்குறைய 23 மில்லியன் பேர் பயணிக்கின்றனர்.
பிரிட்டிஷ் காலனியாதிக்க ஆட்சியின்கீழ் இருந்தபோது கட்டியமைக்கப்பட்ட பெரும்பாலான ரயில்வே வலையமைப்புதான் இந்தியாவின் பொது போக்குவரத்தின் முதுகெலும்பாக திகழ்கிறது.
ஆனால், இதனுடைய உணவு சேவைகள் பயணிகளால் அடிக்கடி விமர்சனங்களுக்கு உள்ளாகுகின்றன. பிப்ரவரி மாதம் இந்திய ரயில்வே புதிய உணவு சேவை கொள்கை ஒன்றை அறிவித்தது.
இந்திய தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் வழங்கியுள்ள இந்த ஆண்டறிக்கையில் சுத்தமும், சுகாதாரமும் ரயில் நிலையங்களிலும், ரயிலிலும் பராமரிக்கப்படுவதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தணிக்கையில் கண்டுபிடிக்கப்பட்டவை:
பானங்களில் அசுத்தமான நீர் பயன்பாடு
குப்பைத் தொட்டிகள் மூடப்படுவதில்லை, குப்பைகள் அதிலிருந்து ஒழுங்காக அகற்றப்படுவதில்லை, கழுவப்படுவதில்லை.
ஈக்கள், பூச்சிகள் மற்றும் தூசிகளில் இருந்து உணவுப் பொருட்கள் பாதுகாக்கப்படுவதில்லை.
எலிகள் மற்றும் கரப்பான்பூச்சிகளை ரயிலில் காண முடிகிறது.
அடிக்கடி கொள்கை மாற்றங்கள், மற்றும் சமயலறை ரயில் பெட்டி வசதி, நிலையான உணவு சேவை தொகுதிகள், தானியங்கி விற்பனை எந்திரங்கள் ஆகியவற்றை ரயில்வே துறை வழங்காமல் இருப்பது இந்த அறிக்கையில் விமர்சிக்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை ரயில்வே அமைச்சகம் வெளியிட்ட தொடர் டிவிட்டர் செய்திகளில், பிப்ரவரி 27 ஆம் தேதி அறிவிக்கப்பட்ட புதிய உணவு சேவை கொள்கை மூலம் ரயில் பயணிகளுக்கு தரமான உணவு வழங்க முடியும் என்று தெரிவித்திருக்கிறது.
புதிதாக சமையலறையுடைய ரயில் பெட்டிகள் மற்றும் ஏற்கெனவே இருக்கின்ற ரயில்களில் மேம்பாடுகளை வழங்கப் போவதாக அது வாக்குறுதி அளித்துள்ளது.