போதைப்பொருள் கும்பலுடன் வடநாட்டு நடிகைகளுக்கு தொடர்பு
தெலுங்கு திரையுலகை சேர்ந்த ரவிதேஜா, நவ்தீப், சார்மி, முமைத்கான், இயக்குனர் பூரி ஜெகந்தாத் உள்ளிட்ட 12 பேருக்கு போதை மருந்து பயன்படுத்தியதாக விளக்கம் கேட்டு அமலாக்க துறை நோட்டீஸ் அனுப்பியது. இது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. இவர்களில் நவ்தீப் உள்ளிட்ட நடிகர்கள் போதை மருந்து பயன்படுத்தவில்லை என்று விளக்கம் அளித்திருக்கின்றனர். ரவிதேஜா தரப்பில் கூறும்போது, போதை மருந்து விவகாரத்தில் ரவிதேஜா பெயரை சம்பந்தப்படுத்தியிருப்பது தவறு என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
நடிகரும், தயாரிப்பாளருமான அசோக்குமார் கூறும்போது, ‘நடிகர், நடிகைகளிடம் போதை மருந்து இல்லை. வடநாட்டிலிருந்து வந்த ஹீரோயின்கள் தான் இங்கு அதுபோல் மேற்கத்திய கலாச்சாரத்தை புகுத்தி விட்டனர். அவர்கள்தான் போதை மருந்து பயன்படுத்துகின்றனர். சினிமா கவர்ச்சி நல்லதையும், கெட்டதையும் வெளிச்சம் போட்டு காட்டுகிறது. திரைப்பட துறையை சேர்ந்த 12 பேர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கலாம். ஆனால் போதை மருந்து உபயோகிப்பவர்கள் குறைவாகத்தான் இருப்பார்கள்.
ஆயிரக்கணக்கான பள்ளி, கல்லூரி மாணவர்கள் போதை மருந்து பயன்படுத்துகின்றனர். அதை மறுக்கவே திரையுலகினர் பக்கம் மீது இந்த விவகாரம் திசை திருப்பப்பட்டிருக்கிறது’ என்றார். கவர்ச்சி நடிகை முமைத்கான் பெயரும் போதை மருந்து விவகாரத்தில் சம்பந்தப்படுத்தப் பட்டிருக்கிறது. இதுகுறித்து அவர் கூறும்போது, ‘எனது பெயர் மீடியாக்களில் வெளிவந்திருப்பதை கண்டு அப்செட் ஆனேன். இது எனது கேரக்டரை சீரழிப்பதாக உள்ளது. இந்த விவகாரத்தில் எனக்கு எந்த சம்பந்தமும் இல்லை. எனக்கு நோட்டீஸும் வரவில்லை’ என குறிப்பிட்டிருக்கிறார்.