மேட்ச் பிக்சிங்: தென்னாப்பிரிக்க வீரருக்கு 8 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடத் தடை!




தென்னாப்பிரிக்க அணிக்காக விளையாடிய வீரர் லோன்வாபோ ட்சோட்சொபே. இடது கை வேகப்பந்து வீச்சாளரான இவர் ஒருகாலத்தில் உலகின் நம்பர் ஒன் பவுலராகவும் திகழ்ந்தவர். கடந்த 2015-ம் ஆண்டு தென்னாப்பிரிக்கா நாட்டில் நடந்த உள்ளூர் கிரிக்கெட் தொடரான ராம்ஸ்லாம் டி20 சேலஞ்சில் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட முயன்றதாக இவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

ஆரம்பத்தில் தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்த ட்சோட்சொபே பின்னர், தனது தவறை ஒப்புக்கொண்டார். தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வாரியத்தின் ஊழல் ஒழிப்பு அமைப்பின் நீதிபதி பெர்னார்ட் 20 மாத விசாரணைக்குப் பிறகு, தீர்ப்பு வழங்கியிருக்கிறார்.

ட்சோட்சொபே மீது பத்து வழக்குகள் உள்ளன. ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட முயன்றது, ஸ்பாட் பிக்சிங்குக்கு அணுகியவர்கள் குறித்த விவரங்களைத் தராதது, விசாரணைக்கு மறுத்தது, விசாரணையை இழுத்தடித்து தாமதப்படுத்தியது உள்ளிட்டவற்றுக்காக சுமார் எட்டு ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

தென் ஆப்ரிக்க பவுலர்  ட்சோட்சொபே

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தின் சி.இ.ஓ ஹரூன் லோர்கட், இதுகுறித்து பேசுகையில், "மேட்ச் பிக்சிங் நடைபெறவில்லை. ஆனால், ட்சோட்சொபே அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டது, தரகர்களிடம் ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது. அதை அவர் ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து, நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது" என்றார்.

"நான் கிரிக்கெட் காதலர்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். அப்போது எனக்கு பொருளாதார நெருக்கடி இருந்ததால் ஏதோ ஒரு கணத்தில் தவறு செய்துவிட்டேன். அந்தச் சமயத்தில் மிக எளிதாகத் தவறு செய்யத் தூண்டப்பட்டுவிட்டேன். இதைப் பற்றி மேலும் பேசுவதற்கு எதுவும் இல்லை. நான் எல்லோரிடமும் மீண்டும் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். எனது உணர்வுகளைப் புரிந்துகொண்டு என்னை மன்னிக்க வேண்டும்" எனக் கோரிக்கை விடுத்திருக்கிறார் ட்சோட்சொபே. 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url