Type Here to Get Search Results !

இந்திய அணியின் படுதோல்விக்கு 5 முக்கிய காரணங்கள்...




லண்டன் ஓவல் மைதானத்தில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் இறுதியாட்டத்தில், 180 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வென்ற பாகிஸ்தான், முதல் முறையாக சாம்பியன்ஸ் கோப்பையை கைப்பற்றியது.

வெற்றி களிப்பில் பாகிஸ்தான் கேப்டன் சர்ஃபிரஸ் அகமது

மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட இந்த போட்டியில், இந்தியா படுதோல்வியடைந்ததற்கான முக்கிய காரணங்களை இங்கே காணலாம்.

மட்டைவீச்சில் பாகிஸ்தானின் ஆரம்ப அதிரடி



ஞாயிற்றுக்கிழமை நடந்த இறுதிப்போட்டியின் தொடக்கத்தில் இருந்தே பாகிஸ்தான் மட்டை வீச்சாளர்கள், இந்திய பந்துவீச்சாளர்களை நன்கு அடித்தாடினர்.
தொடக்க ஆட்டக்காரர்கள் அஸார் அலி மற்றும் ஃபகார் ஜமான் ஆகிய இருவரும் விரைவாக அரைச்சதம் எடுத்தனர். இவர்கள் இருவரையும் பிரிக்க இந்திய பந்துவீச்சாளர்கள் எடுத்த முயற்சிகள் எதுவும் பலன் தரவில்லை.

106 பந்துகளில், 3 சிக்ஸர்கள் மற்றும் 12 பவுண்டரிகள் விளாசி, தனது முதலாவது ஒருநாள் சதத்தை பாகிஸ்தான் தொடக்க வீரர் ஜமான் பெற்றார். இவரது அதிரடி ஆட்டத்தால் பாகிஸ்தானின் ரன் விகிதம் மளமளவென்று உயர்ந்தது.

இதே போன்று, பாகிஸ்தான் இன்னிங்ஸின் இறுதி கட்டத்தில், தனது அதிரடி ஆட்டத்தால் முகமது ஹஃபிஸ் 37 பந்துகளில் 57 ரன்கள் எடுத்தார்.
இதனால், 339 ரன்கள் என்ற இமாலய இலக்கை வெற்றி இலக்காக பாகிஸ்தானால் நிர்ணயிக்க முடிந்தது.


நோபாலால் பிழைத்து சதமடித்த ஜமான்

இந்த போட்டியில் இந்திய பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சு நேர்த்தியாக அமையவில்லை. தங்களது பந்துவீச்சில், வைட் மற்றும் நோபால் போன்ற 16 உதிரி ரன்களை இந்திய பந்துவீச்சாளர்கள் விட்டுக்கொடுத்தனர்.
3 ரன்கள் எடுத்த நிலையில், பூம்ரா பந்துவீச்சில் பாகிஸ்தான் தொடக்க வீரர் ஃபகார் ஜமான் ஆட்டமிழந்த போதும், அந்த பந்து 'நோபால்' என்பதால் அவர் ஆட்டமிழக்காமல் தப்பினார்.
இதன் பின்னர் அதிரடியாக விளையாடிய அவர், 114 ரன்கள் பெற்றார்.


சதமடித்த பாகிஸ்தான் தொடக்க வீரர் ஜமான்
துல்லியம் தவறிய பந்துவீச்சு, சோபிக்காத பீஃல்டிங்

போட்டி நடந்த ஓவல் மைதானம் மட்டைவீச்சுக்கு சாதகமாக கருதப்பட்டாலும், இந்திய பந்துவீச்சாளர்கள் நேர்த்தியாக பந்துவீசாததுதான் பாகிஸ்தான் அணி மிகப்பெரிய அளவில் ரன்கள் குவிக்க காரணமாக அமைந்தது.

சுழல் பந்துவீச்சாளர்கள் அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகிய இருவரும் அதிக அளவில் ரன்களை வாரிக் கொடுத்தனர்.
அஸ்வின் தான் வீசிய 10 ஓவர்களில் 70 ரன்களையும், ஜடேஜா தான்வீசிய 8 ஓவர்களில் 67 ரன்களையும் வழங்கியது இந்திய அணிக்கு பாதிப்பாக அமைந்தது. இதே போல், ஜஸ்பீர்த் பூம்ராவும் தனது பந்துவீச்சில் அதிக அளவில் ரன்களை விட்டுக்கொடுத்தார்.

அச்சுறுத்திய முகமது அமீர்

339 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், களமிறங்கிய இந்தியாவுக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. முதல் ஓவரிலேயே பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் முகமது அமீர் பந்துவீச்சில் இந்திய தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணித்தலைவர் விராத் கோலி 5 ரன்கள் எடுத்த நிலையில் முகமது அமீர் வீசிய அடுத்த ஓவரில் ஆட்டமிழந்தார்.
5 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 10 ரன்கள் எடுத்த இந்திய அணி, அமீரின் பந்துவீச்சில் தொடர்ந்து தடுமாறியது குறிப்பிடத்தக்கது.



சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த முன்னணி வீரர்கள்



பாகிஸ்தானுக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை இறுதியாட்டத்தில் இந்திய மட்டைவீச்சாளர்கள் யாருமே களத்தில் நிலைத்து நிற்காதது தோல்விக்கு ஒரு முக்கிய காரணமாகும்.

யுவராஜ்சிங் மற்றும் தவான் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்த நிலையில், தோனி மற்றும் ஜாதவ் ஆகிய இருவரும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர்.
முன்னணி வீரர்கள் பலரும் ஆட்டமிழந்த நிலையில், இந்திய அணிக்கு நம்பிக்கையூட்டும் வகையில், ஹர்திக் பாண்ட்யா மட்டுமே அதிரடி ஆட்டம் மேற்கொண்டு 70 ரன்கள் எடுத்தார்.

இந்திய வீரர்களில் நான்கு பேரை தவிர மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad