Type Here to Get Search Results !

அழிவின் விளிம்பில் பனைமரங்கள்
மண் அரிப்பினை தடுத்து, நீர்வழித்தடத்தை பாதுகாக்கும், மருத்துவ குணம் கொண்ட பனை மரங்களை அழிவில் இருந்து மீட்ககப்பட வேண்டும் என தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தியாவின் தேசிய மரமாக பனைமரங்கள் உள்ளன. கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு ஏறக்குறைய அனைத்து கிராமங்களிலும் மருத்துவகுணமிக்க இந்த மரங்களைக் காணமுடிந்தது. பொதுவாக கொள்ளிட ஆற்றுப்படுகைகள், கிராம குளங்கள், ஒத்தையடி பாதைகள் இவைகளை ஒட்டி இம்மரங்கள் அதிகம் வளர்ந்தது. வெகு தொலைவில் உள்ள நிலத்தடி நீரை ஈர்க்கக்கூடிய சக்தி இதற்கு உண்டு. இதன் வேர்கள் மண் அரிப்பைத்தடுத்து நீர்வழித்தடத்தை பாதுகாப்பதால்தான் இம்மரங்களை பெரும்பாலும் ஆற்றுப்படுகையை ஒட்டி அதிகளவில் நட்டு வைத்தனர்.

கிராமபுறத்தில் வீடுகளில் கூட இந்த மரங்கள் வளர்க்கப்பட்டன. கிராமமக்கள் இதனை வாதமடக்கி என்றழைப்பர். காயங்கள், புண்கள், வாய்வுப்பிடிகள் என பல்வேறு வகையான உடல் உபாதைகளுக்கு மருந்தாக பயன்படுத்தப்பட்டது. நிலத்தடி நீரை பாதுகாப்பதில் இம்மரங்கள் அரணாக விளங்கியது என்றாலும், மருத்துவக்குணத்தையும் பெற்றுள்ளது. இந்த மரங்களை விறகுக்காக அதிகளவில் வெட்டி எடுக்கப்பட்டதால் தற்போது விரல்விட்டு எண்ணக்கூடிய அளவுக்குகூட இம்மரங்களை பார்க்க முடியவில்லை. உலக அளவில் 108 நாடுகளில் இம்மரங்கள் வளர்க்கப்படுகின்றன. கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் 30 கோடி பனை மரங்கள் இருந்தது. இதில் தற்போது 25 கோடி பணை மரங்கள் அழிக்கப்பட்டு, 5 கோடி பனை மரங்கள் மட்டுமே உள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

தற்போது பனை வீழ்ந்து கருவேல மரங்கள் வாழ்வதே, தமிழகத்தில் சர்க்கரை நோயாளிகள் அதிகரிக்க காரணம் என்றும் ஒரு கருத்தும் நிலவுகிறது. செங்கல் சூளைகளில் பனை மரத்தை வெட்டி அதன் விறகை கொண்டு எரித்தால் செங்கற்களின் நிறம் சிவப்பாக ஜொலிக்கும் என்பதால் அதிகளவில் வெட்டி எடுக்கப்பட்டது. தமிழரின் வாழ்வில் ஓர் அங்கமாக விளங்கிய பனைமரங்கள் தற்போது அழியும் நிலையை எட்டியிருக்கின்றன. பனைமரத்தின் பச்சைக் குருத்து உடலுக்கு சத்தானது. பனைஓலைகள் கடும் வறட்சிக் காலங்களில் கால்நடைகளுக்குத் தீவனமாக வழங்கப்பட்டுள்ளது. பனை ஓலை விசிறிகளில் வீசும் போது குளுமையான காற்று கிடைக்கும். பனங்கிழங்கு மனிதனின் வயிற்றுப் புண்ணுக்கு மிகச்சிறந்த மருந்தாக இருந்தது என பனைமரத்தின் பயன்பாட்டை சித்த மருத்துவர்கள் பட்டியலிட்டுள்ளனர்.

உலகின் மூத்த மொழி தமிழ். தமிழின் எழுத்துக்கள் முதலில் பதியப்பட்டது பனை ஓலையில்தான். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பனைமரத்தின் பயன்பாடு இல்லாமல் உள்ளது. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் தண்ணீர் இல்லாமலேயே வளரும் தன்மையுடைய பனைமரத்தை காடு, தோட்டம் என வித்தியாசம் இல்லாமல் வயல் ஓரங்களிலும், வேலி ஓரங்களிலும் விவசாயிகள் வளர்த்து வந்தனர்.
தற்போது அரசு சார்பில் போதிய பராமரிப்பு பற்றிய விழிப்புணர்வு இல்லாததால், நாளடைவில் பனை மரங்கள் அழிக்கப்பட்டு, அழிவுப்பாதையை நோக்கி செல்கிறது. எனவே தற்போதுள்ள பனை மரங்களை அரசு பாதுகாக்க வேண்டும், வறட்சி நிறைந்த மாவட்டங்களில் பனை மரங்களை அதிகளவில் வளர்க்க தமிழக அரசு முன் வரவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad