Type Here to Get Search Results !

வங்காளதேசத்துக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றி


சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி 240 ரன்கள் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை தோற்கடித்து அபார வெற்றி பெற்றது.


8-வது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நாளை தொடங்குகிறது. இந்த நிலையில் லண்டனில் நேற்று நடந்த பயிற்சி ஆட்டம் ஒன்றில் இந்தியா- வங்காளதேசம் அணிகள் மோதின.

‘டாஸ்’ ஜெயித்த வங்காளதேச அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஆகியோர் களம் இறங்கினார்கள். 21 ரன்களுக்குள் இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து அதிர்ச்சி தொடக்கம் கண்டது. தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா (1 ரன்) இம்ருல் கெய்ஸ் பந்து வீச்சில் போல்டு ஆனார். அடுத்து களம் கண்ட ரஹானே (11 ரன்) முஸ்தாபிகுர் ரஹ்மான் பந்து வீச்சில் போல்டு ஆகி வெளியேறினார்.

தினேஷ் கார்த்திக் 94 ரன்கள்

3-வது விக்கெட்டுக்கு தினேஷ் கார்த்திக், ஷிகர் தவானுடன் இணைந்தார். இந்த இணை நிலைத்து நின்று அடித்து ஆடியது. அணியின் ஸ்கோர் 121 ரன்னாக உயர்ந்த போது ஷிகர் தவான் (60 ரன்கள், 67 பந்துகளில் 7 பவுண்டரியுடன்), சன்ஜாமுல் இஸ்லாம் பந்து வீச்சில் மெஹதி ஹசனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்து களம் இறங்கிய கேதர் ஜாதவ் தன் பங்குக்கு 38 பந்துகளில் 2 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 31 ரன்கள் எடுத்த நிலையில் சன்ஜாமுல் இஸ்லாம் பந்து வீச்சில் போல்டு ஆகி நடையை கட்டினார்.

இதனை அடுத்து ஹர்திக் பாண்ட்யா, தினேஷ் கார்த்திக்குடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடி காட்டி அணியின் ஸ்கோரை வேகமாக உயர்த்தினார்கள். ஸ்கோர் 208 ரன்னாக உயர்ந்த போது அசுர வேக ஆட்டத்தை வெளிப்படுத்திய தினேஷ் கார்த்திக் (94 ரன்கள், 77 பந்துகளில் 8 பவுண்டரி, ஒரு சிக்சருடன்) ஓய்வு பெற்றார்.

இந்திய அணி அபார வெற்றி

அடுத்து களம் கண்ட ரவீந்திர ஜடேஜா 32 ரன்னிலும் (36 பந்துகளில் ஒரு சிக்சருடன்), அஸ்வின் 5 ரன்னிலும் ருபெல் ஹூசைன் பந்து வீச்சில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்கள். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 324 ரன்கள் குவித்தது. அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹர்திக் பாண்ட்யா 54 பந்துகளில் 6 பவுண்டரி, 4 சிக்சருடன் 80 ரன்னும், புவனேஷ்வர்குமார் 1 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் களத்தில் நின்றனர். வங்காளதேச அணி தரப்பில் ருபெல் ஹூசைன் 3 விக்கெட்டும், சன்ஜாமுல் இஸ்லாம் 2 விக்கெட்டும், முஸ்தாபிகுர் ரஹ்மான் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

பின்னர் 325 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய வங்காளதேச அணியின் விக்கெட்டுகள் இந்திய பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் மள, மள வென்று சரிந்தன. 22 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய வங்காளதேச அணி 23.5 ஓவர்களில் 84 ரன்னில் சுருண்டது. இதனால் இந்திய அணி 240 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. வங்காளதேச அணியில் அதிகபட்சமாக மெஹதி ஹசன் 24 ரன்னும், சன்ஜாமுல் இஸ்லாம் 18 ரன்னும், முஷ்பிகுர் ரஹிம் 13 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் அவுட் ஆனார்கள். இந்திய அணி தரப்பில் உமேஷ் யாதவ், புவனேஷ்வர்குமார் தலா 3 விக்கெட்டும், முகமது ஷமி, பும்ரா, ஹர்திக் பாண்ட்யா, அஸ்வின் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

2-வது வெற்றி

நேற்றைய ஆட்டத்தில் கேப்டன் விராட்கோலி, டோனி, யுவராஜ்சிங் ஆகியோர் பேட்டிங் செய்யவில்லை. பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி பெற்ற 2-வது வெற்றி இதுவாகும். முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி இருந்தது. வங்காளதேச அணி சந்தித்த 2-வது தோல்வி இது. அந்த அணி முதல் ஆட்டத்தில் 2 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானிடம் வீழ்ந்தது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad