‘பாகிஸ்தானுடன் கிரிக்கெட் போட்டி தொடர் கிடையாது’; மத்திய விளையாட்டு துறை மந்திரி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் வாரியம் தங்களுக்கு ரூ.387 கோடி இழப்பீடாக தர வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நோட்டீசு அனுப்பி இருக்கிறது.
இந்தியா–பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியங்கள் இடையே செய்யப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் படி இரு நாடுகள் இடையிலான கிரிக்கெட் போட்டி தொடரில் விளையாட இந்திய அணி மறுத்து வருவதால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு பெரும் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து துபாயில் நடைபெறும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) கூட்டத்தில் பங்கேற்றுள்ள இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் நேற்று பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டு இருந்தனர்.
இந்த நிலையில் மத்திய விளையாட்டு துறை மந்திரி விஜய் கோயல் டெல்லியில் நேற்று அளித்த ஒரு பேட்டியில், ‘எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ளாத வரை அந்த நாட்டு அணியுடன், இந்திய அணி கிரிக்கெட் போட்டி தொடரில் விளையாடாது. இது சர்வதேச போட்டிகளுக்கு பொருந்தாது. கிரிக்கெட் உறவு வேண்டுமா?, பயங்கரவாதம் வேண்டுமா? என்பதை பாகிஸ்தான் தான் முடிவு செய்து கொள்ள வேண்டும். பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாடுவது தொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு எடுக்கும் முன்பு மத்திய அரசிடம் அனுமதி கேட்க வேண்டும்’ என்று தெரிவித்தார். 2012–ம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணி, பாகிஸ்தானுடன் நேரடி போட்டி தொடரில் விளையாடியது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.