கேரளாவில் தென்மேற்கு பருவமழை இன்று தொடங்க வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
கேரளாவில் தென்மேற்கு பருவமழை இன்று தொடங்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 1-ந்தேதி தொடங்கும். அதைதொடர்ந்து இந்த மழை தமிழகத்திலும் பெய்ய தொடங்கும்.தற்போது தமிழகத்தில் வறட்சி இதுவரை இல்லாத அளவுக்கு இருப்பதால் விவசாயிகளும், பொது மக்களும் பெரும் தவிப்புக்கு ஆளாகி உள்ளனர். எனவே தென்மேற்கு பருவமழை எப்போது தொடங்கும் என்ற ஆவல் அனைவரிடமும் எழுந்துள்ளது.
ஏற்கனவே இந்திய வானிலை மையம் இந்த ஆண்டு தென்மேற்கு பரு மழை முன்கூட்டியே தொடங்கும் என்று அறிவித்திருந்தது. இதற்கான அறிகுறிகள் அந்தமான் தீவு பகுதிகளில் மழையுடன் தொடங்கி விட்டதாகவும் அறிவித்து இருந்தது.
இந்த நிலையில் கொச்சி வானிலை மையம் இன்று முதல் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் வாய்ப்பு உள்ளது என்று அறிவித்து உள்ளது. திருவனந்தபுரம், பாலக்காடு, கோழிக்கோடு ஆகிய பகுதிகளில் இதன் காரணமாக பலத்த மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கினால் தமிழகத்தில் படிப்படியாக வெப்பம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.