Type Here to Get Search Results !

சிறுநீரகம் : சில குறிப்புகள்

நமது உடலில் சிறு மாங்காய் வடிவில் 2 சிறுநீரகங்கள் உள்ளன. இவற்றின் எடை சுமார் 200 கிராமில் இருந்து 250 கிராம் வரை இருக்கும். 60 கிலோ எடை கொண்ட உடலில் சிறுநீரகத்தின் எடை மட்டும் சராசரியாக 400 கிராம் வரை இருக்கும்.சிறுநீரகம் பாதிப்பு அடையத் தொடங்குவதை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடிக்கலாம். இதற்கு ரத்த பரிசோதனை மற்றும் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், சிறுநீர் பரிசோதனை ஆகிய மூன்று பரிசோதனைகளைக் செய்ய வேண்டும்.ஒரு வீட்டில் வரவேற்பறை, பூஜை அறை, படிக்கும் அறை, சமையலறை, கழிவறை ஆகியவை இடம் பெற்றிருந்தாலும், வீட்டின் ஆரோக்கியம் ‘கழிவறை சுகாதாரம்’ என்பதை மையமாகக் கொண்டு இருக்கும். அதேபோல கண், காது, மூக்கு, இதயம், மூளை என உடலில் பலவிதமான உறுப்புகள் இருந்தாலும் உடல் ஆரோக்கியம் சிறுநீரகத்தை அடிப்படையாகக் கொண்டு அமைகிறது என்று சொன்னால் அது மிகையில்லை.

ஒருவரின் உடல் முழு ஆரோக்கியத்துடன் இருப்பதை அறிவிப்பதில் சிறுநீரகத்துக்கு முக்கிய பங்கு உண்டு. நீரை சேமித்தல், கழிவுகளை வெளியேற்றல், சிவப்பு ரத்த அணுக்களை உருவாக்குதல் என பலவிதமான பணிகளுக்கு பொறுப்பாளர் சிறுநீரகம்.
மார்ச் 9-ம் தேதி உலக சிறுநீரக தினம் அனுசரிக்கப்பட உள்ள நிலையில் சிறுநீரகம் பற்றிய சில முக்கிய தகவல்களை பகிர்ந்து கொள்கிறார் மூத்த சிறுநீரகவியல் மருத்துவப் பேராசிரியரான செளந்தரராஜன்.நமது உடலில் 60% தண்ணீர் உள்ளது. எனவே, தேவையற்ற நீரை வெளியேற்றுவதற்கு மட்டுமில்லாமல் சிவப்பு ரத்த அணுக்களை போதுமான அளவு உற்பத்தி செய்வதற்கும் ஆரோக்கியமான சிறுநீரகங்கள் அவசியம்.

சூரிய ஒளி மூலமாக தோலில் சேர்கிற வைட்டமின்-டி முதலில் கல்லீரலுக்கு சென்று, அங்கிருந்து சிறுநீரகத்தை சென்று அடைகிறது. அதன்பின்னரே வைட்டமின்-டி உயிரூட்டப்படுகிறது. எனவே, எலும்புகள் சீரான வளர்ச்சி பெறுவதற்கு திடகாத்திரமான சிறுநீரகம் அவசியம்.ரத்த அழுத்தத்தை சீராக வைத்தல், கால்சியம், சோடியம், பொட்டாசியம் போன்ற தாதுக்களை சமச்சீராக வைத்தல், உடலின் உள்ளுணர்வுகளை நிமிடத்துக்கு நிமிடம் கண்காணித்து ஓய்வு இல்லாமல் செயல்படுதல், தண்ணீரை சேமித்தல், அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதால் உண்டாகிற கழிவுகளை வெளியேற்றுதல், எலும்பு வளர்ச்சிக்கு உதவுதல் என பல பணிகளை சிறுநீரகம் செய்து வருவதால், கம்ப்யூட்டரில் உள்ள மதர் போர்டுக்கு இணையாக சிறுநீரகத்தைக் கருதலாம்.

*மூளை பாதிப்பு, கல்லீரல் கெடுதல், இதய பாதிப்புகள் போன்றவை உடனடியாக வெளியே தெரிய ஆரம்பிக்கும். ஆனால் சிறுநீரகம் மட்டும் ஏறத்தாழ 60% மேலே நோய் முற்றிய நிலையில்தான் வெளியே தெரியும்.

*மனித உடலில் உள்ள 5 லிட்டர் ரத்தத்தில் ஒவ்வொரு நிமிடத்துக்கும் 25% அளவு ரத்தம் சிறுநீரகத்துக்குச் செல்கிறது. மூளை, இதயம் போன்ற உறுப்புகளுக்கு செல்லும் ரத்தத்தின் அளவைவிட இது அதிகம்.

ஒரு குடும்பத்தில் முதல்நிலை உறவினர்களான தாத்தா-பாட்டி, பெற்றோர் உடன்பிறந்தவர்களில் யாருக்காவது சிறுநீரக பாதிப்பு இருந்து அதன்மூலம் தங்களுக்கும் அப்பாதிப்பு வர வாய்ப்பு உள்ளது என நினைப்பவர்கள், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோர் ஆண்டுக்கு ஒரு முறை சிறுநீர் மற்றும் ரத்த பரிசோதனை, ஸ்கேன் செய்து கொள்ள வேண்டும்.

சிறுநீரக பாதிப்பினால் ஏற்படும் உயிரிழப்பைத் தடுக்க ஓர் ஆண்டில் 2 அல்லது 3 தடவை டயாலிசிஸ் செய்து கொள்ள வேண்டும் அல்லது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்வது அவசியம். தாத்தா, பாட்டி, பெற்றோர், உடன் பிறந்தவர்கள் சிறுநீரகத்தை தானம் கொடுக்கலாம். தானம் கொடுப்பவர்களுக்கு ஆபத்து ஏற்படாது.

*இந்திய அளவில் உடல் உறுப்புகளைத் தானம் செய்வதில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. இதில் சிறுநீரக தானத்திலும் தமிழகமே முதல் இடம் வகிக்கிறது.

*சிறுநீரகம் மாற்று அறுவைசிகிச்சையின்போது, சட்டத்துக்கு விரோதமாக மருத்துவர் செயல்பட்டது தெரிய வந்தால், அவரது உரிமம், அவர் சார்ந்த மருத்துவமனையின் உரிமம் ஆகியவை நிரந்தரமாக ரத்து செய்யப்படும்.

மருத்துவத்துறையில் கிடைத்த அனுபவத்தில், டயாலிசிஸ் செய்தவர் 25 ஆண்டுகள் வரை உயிர் வாழ்ந்ததை கேள்விப்பட்டு இருக்கிறேன். அதேபோன்று சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்கள் 30 ஆண்டுகள் வரை உயிர் வாழ முடியும் என்பதையும் கண்கூடாக பார்த்து இருக்கிறேன். எனவே, சிறுநீரக நோயைப் பார்த்து பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.இந்த ஆண்டு மார்ச் 2-வது வியாழன் அன்று உலக சிறுநீரக தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. நடப்பாண்டின் மையப்பொருளாக ‘உடல்பருமனும் சிறுநீரக பாதிப்பும்’ என்பதை உலக சிறுநீரக மருத்துவர்களின் மையம் அறிவித்துள்ளது.


மூளைச்சாவு அடைந்தவரின் உடலில் இருந்து சிறுநீரகம் போன்ற உறுப்புகள் தானமாக பெறப்படுவதற்கு முன்னர், மூளைசாவு என்பதை 8 மணிநேர இடைவெளியில் 2 தடவை சோதித்து பார்த்து உறுதி செய்யப்பட வேண்டும்.1984-ம் ஆண்டு இயற்றப்பட்ட மனித உடல் உறுப்பு மாற்று சிகிச்சை முறைபடுத்தப்பட்ட சட்டத்தின் மூலம் சிறுநீரகம் விற்பனை செய்யப்படுவது முழுவதும் தடை செய்யப்பட்டு உள்ளது.சிறுநீரகம் மாற்று அறுவைசிகிச்சை செய்யும்போது, கொடையாளி உடலில் இருந்து சிறுநீரகத்தை எடுப்பதற்காக செய்யப்படும் அறுவைசிகிச்சை, பாதிக்கப்பட்ட நபரின் உடலில் கிட்னியை பொருத்துவதற்காக மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சை ஆகியவை ஒரே சமயத்தில் நடைபெற வேண்டும்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad