ரம்யா, அனுஷ்கா, தமன்னாவிடம் வாய்ப்பை இழந்த மூத்த நடிகைகள்
ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் வெளியான ‘பாகுபலி 2’ படம் ரூ. 1000 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. இப்படத்தில் நடிப்பதற்கான நட்சத்திர தேர்வு விஷயத்தில் பல்வேறு சுவாரஸ்யங்கள் நடந்துள்ளது. பாகுபலி கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷனிடம் கால்ஷீட் கேட்டார் ராஜமவுலி. கால்ஷீட் பிரச்னையால் நடிக்க மறுத்தார். பிறகுதான் அந்த வாய்ப்பு பிரபாஸுக்கு கிடைத்துள்ளது. பல்லாள தேவனாக நடிக்க இந்தி நடிகர் ஜான் ஆபிரகாமிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. முடியாது என்று அவர் மறுக்கவே ராணா தேர்வானார்.
ஹீரோ, வில்லன் கதாபாத்திரத்திற்கு நடந்த இழுபறிபோல் ஹீரோயின் ஒப்பந்த விஷயத்திலும் இழுபறி இருந்தது. அனுஷ்கா நடித்த தேவசேனா வேடத்தில் நடிக்க முதலில் நயன்தாராவிடம் கேட்கப்பட்டது. அவர் மறுக்கவே அனுஷ்கா தேவசேனாவாகிவிட்டார். ராஜமாதா சிவகாமியாக நடிக்க வந்த வாய்ப்பை ஸ்ரீதேவி ஏற்க மறுத்துவிட்டார். அதிகமாக சம்பளம் கேட்டதால் அந்த வாய்ப்பு ரம்யா கிருஷ்ணனுக்கு சென்றதாம். தமன்னாவின் கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் நடிகை சோனம் கபூருக்கு வாய்ப்பு சென்றது. அவர் மறுத்த பிறகே தமன்னாவுக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது.