சென்னை ஐ.ஐ.டி.வளாகம் முன்பு மாணவர் அமைப்பினர் முற்றுகை போராட்டம்
மாணவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து சென்னை ஐ.ஐ.டி.வளாகம் முன்பு மாணவர் அமைப்பினர் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
மாடுகளை இறைச்சிக்காக விற்பதற்கு தடை விதித்து மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டத்துக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. தமிழகத்திலும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது.
கடந்த 28-ந்தேதி இரவு சென்னை கிண்டியில் உள்ள மத்திய அரசு கல்வி நிறுவனமான ஐ.ஐ.டி.யில் மாணவர்கள் சிலர் மாட்டு இறைச்சி உணவு திருவிழாவுக்கு ஏற்பாடு செய்து இருந்தனர்.இது தொடர்பான புகைப்பட காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளி யானது. இந்த நிலையில் நேற்று மதியம் ஐ.ஐ.டி. வளாகத்தில் உணவு சாப்பிட சென்ற கேரளாவை சேர்ந்த மாணவர் சூரஜ்ஜை மாணவர்கள் சிலர் சுற்றி வளைத்து தாக்கினர்.
இந்த தாக்குதலில் சூரஜ்ஜின் வலது கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டது. மாட்டு இறைச்சி உணவு திருவிழாவுக்கு அவர் ஏற்பாடு செய்ததாக இந்த தாக்குதல் நடைபெற்று உள்ளது.
படுகாயம் அடைந்த சூரஜ்ஜுக்கு வானகரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் மாணவர் சூரஜ் தாக்கப் பட்டதை கண்டித்து ஐ.ஐ.டி. வளாகத்தில் முன்புற வாசல் முன்பு மாணவர்கள் அமைப்பினர் இன்று முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், புரட்சிகர மாணவர் அமைப்பு, அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தை சேர்ந்த சுமார் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பெண்களும் இதில் பங்கேற்றனர்.
அவர்கள் மாணவர் சூரஜ் தாக்கப்பட்டதை கண்டித்தும், மத்திய அரசுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பினர். பின்னர் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்தனர். இதனால் போலீசாருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்ய முயன்றனர். அப்போது மாணவர்கள் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து சாலையில் படுத்து உருண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக தூக்கி சென்று கைது செய்து வேனில் ஏற்றினர்.