போராட்டமே இவரது வாழ்க்கை!
ஜெயித்துக் கொண்டே இருப்பவர்கள் மட்டும் ஹீரோக்கள் அல்ல. ஜெயிப்பதற்காக தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறவர்கள் ஹீரோக்கள்தான். சுஜா வாருணி, இரண்டாவது வகையைச் சேர்ந்தவர்.சமீபத்தில் வெற்றி பெற்ற ஒரு திரைப்படத்தில் அவர் வில்லனுடைய மனைவியாக நடித்தார். வில்லனைப் பார்த்து அவர் கேட்கும் ஒரு கேள்விதான் படத்திற்கான ஆதார சுருதி. அப்படிப்பட்ட முக்கியமான கேரக்டர். அந்தக் கேள்வியை நோக்கி கேரக்டர்களை நகர்த்தும் காட்சிகள் நிறைய இருந்தன. ஆனால் - படம் வெளிவந்தபோது சுஜா கேள்வி கேட்ட அந்த ஒரே ஒரு காட்சி மட்டுமே படத்தில் இருந்தது. பெரிய இயக்குநர், பெரிய படம், தனக்கென ஓர் இடத்தைப் பிடித்துத் தரும் கேரக்டர் என்று நம்பிக்கையோடு இருந்த சுஜாவுக்கு இது எத்தனை பெரிய அதிர்ச்சியாக இருந்திருக்கும்.
எனினும், சுஜாவுக்கு இதெல்லாம் புதிது இல்லை. இது போன்ற பல ஏமாற்றங்களைக் கடந்து வந்தவர்தான் அவர். சுஜா ஒரு நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த பத்திரிகையாளரின் மகள். அழகு, திறமை இரண்டும் இணைந்து இருந்ததால் சினிமாவில் பெரிதாக ஜெயிக்கலாம் என்கிற கனவுடன் ‘பிளஸ் 2’ படத்தில் அறிமுகமானார். ஆனால் அதற்குப் பிறகு பெரிய வாய்ப்புகள் இல்லை. அப்பா மறைந்துவிட்ட நிலையில், நோய்வாய்ப்பட்ட அம்மா, தவிக்க விட்டு மறைந்த அக்கா, படிக்கத் துடிக்கும் தங்கை என்கிற மாதிரியான இக்கட்டான குடும்ப சூழ்நிலையில் அவருடைய வருமானம் முக்கியமான ஒன்றாக இருந்தது. அதனால் நன்றாக நடனம் ஆடத் தெரிந்த அவர் ஒரு பாடலுக்கு மட்டும் ஆட ஆரம்பித்தார்.
நடிக்க அழைக்காத சினிமா உலகம் அவரை ஆட அழைத்தது. தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் ஆடித் தீர்த்தார். ஆடிச் சலித்தவர், ஒரு கட்டத்தில் இனி ஒரு பாட்டுக்கு ஆடுவதில்லை என்று முடிவு செய்தார். ஹீரோயினாக நடிப்பதற்கு நமக்கு என்ன குறைச்சல் என்று யோசித்தார். சில மாதங்கள் உடற்பயிற்சி, மனப்பயிற்சி என்று தீவிரமாக முயற்சித்து ஒரு ஹீரோயினுக்குரிய தோற்றத்தோடு மீண்டும் வந்தார். சுஜா என்ற தனது பெயரை சுஜா வாருணி என்று மாற்றினார். ஹீரோயினாக அவர் தயாரானார். ஆனால் சினிமா தயாராகவில்லையே? வாய்ப்புகள் எதிர்பார்த்த மாதிரி இல்லை.
ஆனாலும், தனது முடிவை அவர் மாற்றிக் கொள்வதாகவும் இல்லை. மீண்டும் குடும்ப சூழ்நிலைகள் துரத்த நல்ல கேரக்டர்களை தேர்வு செய்து நடிக்க முடிவு செய்தார். ‘பென்சில்’, ‘சேட்டை’, ‘வா டீல்’, ‘கிடாரி’ ஆகிய படங்கள் அவருக்கு கை கொடுத்தன. இப்போது ஒரு நல்ல குணச்சித்திர நடிகையாக வலம் வரத் தொடங்கிவிட்டார். சுஜாவின் போராட்டம் இன்னும் ஓயவே இல்லை. ஹீரோயினாக ஹீரோவை கட்டிப்பிடித்து ஆடித்தான் சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என்பதில்லை. அதையும் தாண்டி நல்ல கேரக்டர்கள், அதில் நல்ல நடிப்பு, அதன் மூலம் மக்களின் மனதில் இடம்பிடித்தவர்கள் நிறைய இருக்கிறார்கள். அவர்கள் வரிசையில் சுஜாவுக்கும் இடம் உண்டு.