Type Here to Get Search Results !

விபத்தில் பலியான ஜெயலலிதா கார் டிரைவர் தன்னை செல்போனில் அழைத்தது ஏன்?.. ஆறுக்குட்டி எம்.எல்.ஏ விளக்கம்!

விபத்தில் பலியாவதற்கு முன் ஜெயலலிதா கார் டிரைவர் தன்னை செல்போனில் அழைத்தது ஏன்?என்பது குறித்து ஆறுக்குட்டி எம்.எல்.ஏ விளக்கம் அளித்து உள்ளார்.

கோவை,


மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு பங்களாவில் கடந்த மாதம் 24-ந் தேதி காவலாளியை கொன்ற கும்பல் ஜெயலலிதா அறையில் இருந்த பொருட்களை கொள்ளையடித்து சென்றது.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இவ்வழக்கில் இது வரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீசாரால் தேடப்பட்ட ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே சாலை விபத்தில் பலியானார்.

கனகராஜின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சந்தேகம் எழுப்பி உள்ளனர். இதுதொடர்பாக கனகராஜின் அண்ணன் தனபாலை விசாரணைக்கு வருமாறு சம்மன் அனுப்பினர். அதன்படி கோத்தகிரி போலீஸ் நிலையத்தில் வைத்து நேற்று 4 மணி நேரம்  விசாரணை நடத்தப்பட்டது.

இதற்கிடையே பங்களாவில் இருந்து என்னென்ன பொருட்கள் கொள்ளை போனது? இந்த கொள்ளை சம்பவத்தின் பின்னணியில் வேறு யாருக் கும் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கனகராஜ், சயன் மற்றும் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுடன் செல்போனில் தொடர்பில் இருந்தவர்கள் யார்-யார்? அவர்களுக்கும் கொள்ளை கும்பலுக்கு எந்த வகையில் தொடர்பு இருந்தது? என்று விசாரித்து வருகின்றனர்.

இதில் கனகராஜ் அடிக்கடி கோவை மாவட்டம் கவுண் டம்பாளையம் தொகுதி அ.தி.மு.க.எம்.எல்.ஏ. ஆறுக்குட்டியுடன் செல்போனில் தொடர்பில் இருந்தது போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து எம்.எல்.ஏ. ஆறுக்குட்டியை நாளை விசார ணைக்கு ஆஜராகுமாறு ஆத்தூர் போலீசார் நேரில் சம்மன் கொடுத்தனர். அதை பெற்றுக் கொண்ட அவர் இன்றே விசாரணைக்கு வருவதாக கூறினார். அதன் படி இன்று காலை அவர் ஆத்தூருக்கு புறப்பட்டு சென்றார்.

இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

கனகராஜ் கடந்த ஒன்றரை  வருடங்களுக்கு முன்பு எனக்கு அறிமுகமானார். சென்னையில் உள்ள எனது நண்பர் ஒருவரது நிறுவனத்தில் கனகராஜ் டிரைவராக வேலை பார்த்து வந்தார். நான் சென்னை சென்ற போது எனது காரின் மாற்று டிரைவராக அவர் வந்தார். அப்போது கனகராஜ் என்னிடம் நான் ஏற்கனவே போயஸ் தோட்டத்தில் வேலை பார்த்திருக்கிறேன் என்று கூறி பழகினார். நான் சென்னை சென்ற போதெல்லாம் எனது காருக்கு மாற்று டிரைவராக அவர் வேலை பார்த்தார்.

அ.தி.மு.க. இரு அணியாக பிரிந்து எம்.எல்.ஏ.க்களை இழுக்க பேரம் நடந்த நேரததில் நான் இருக்கும் இடத்தை கனகராஜ் மாற்று அணியினருக்கு தெரிவித்தார். இதில் எனக்கு அவர் மீது வருத்தம் ஏற்பட்டது. எனவே உடனே அவரை நிறுத்தி விட்டு வேறு டிரைவரை நியமித்தேன். அதோடு கனகராஜூடனான பேச்சையும் நிறுத்தி 2 மாதங்களுக்கு மேலாகி விட்டது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நேரத்தில் நான் சென்னையில் இருந்த போது கனகராஜ் எனது டிரைவரிடம் பேசி கார் பழுதாகி விட்டதாக கூறி உதவி கேட்டிருக்கிறார். அதனடிப்படையில் எனது டிரைவர் உதவி செய்துள்ளார். மற்றபடி கனகராஜை பற்றி வேறு எதுவும் எனக்கு தெரியாது.

போலீசார் நேற்று இரவு தான் என்னிடம் நாளை நேரில் விசாரணைக்கு வருமாறு சம்மன் கொடுத்தனர். ஆனால் நாளை(17-ந் தேதி) பெரியகுளத்தில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க வேண்டியதிருப்பதால் இன்றே விசாரணைக்கு வருகிறேன் என போலீஸ் அதிகாரிகளிடம் கூறினேன். அவர்களும் வாருங்கள் என கூறியதன் அடிப்படையில் சேலத்துக்கு செல்கிறேன். எனது மடியில் கனம் இல்லை. எனவே எனக்கு எந்த பயமும் இல்லை. போலீசார் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad