Type Here to Get Search Results !

' சிறையிலிருந்து பிணமாகத்தான் வருவேன்!' -விவேக்கிடம் கதறிய இளவரசி





பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு 100 நாள்களை நிறைவு செய்துவிட்டார் சசிகலா. ' சசிகலா அளவுக்கு இளவரசி தைரியமாக இல்லை. தன்னைப் பார்க்க வருகின்றவர்களிடம் எல்லாம் வேதனையை வெளிப்படுத்தி வருகிறார். அவருக்கு ஆறுதல் சொல்ல முடியாமல் அவருடைய குடும்பத்தினர் தவிக்கின்றனர்' என்கின்றனர் போயஸ் கார்டன் ஊழியர்கள்.

சொத்துக் குவிப்பு வழக்கில் நான்காண்டு சிறைத் தண்டனை பெற்ற சசிகலாவை, தொடக்க காலத்தில் அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, காமராஜ் உள்ளிட்டவர்கள் சந்தித்துப் பேசினர். குற்ற வழக்கில் சிறைபட்டுள்ள ஒருவரை அமைச்சர்கள் சென்று சந்திப்பது அரசியல்ரீதியாக சர்ச்சையை எழுப்பியதால், அவர்கள் அமைதியாகிவிட்டனர். தற்போது எம்.எல்.ஏக்கள் வெற்றிவேல் மற்றும் தங்க.தமிழ்ச்செல்வன் ஆகியோர் மட்டுமே அவரை அடிக்கடி சென்று சந்திக்கின்றனர். கடந்த வாரம் கால்நடைத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி சசிகலாவை சந்தித்துப் பேசினார். இதுகுறித்து விளக்கமளித்த அமைச்சர் ஜெயக்குமார், ' சிறையில் சென்று சசிகலாவை சந்திப்பது என்பது அவர்களுடைய தனிப்பட்ட விருப்பம். அவர்கள் ஏன் சந்திக்கிறார்கள் என்றெல்லாம் கேள்வி கேட்க முடியாது' எனத் தெளிவுபடுத்தினார். நேற்று பேட்டியளித்த நடிகர் கருணாஸும், ' சிறையில் மிகுந்த தைரியத்துடன் இருக்கிறார் சசிகலா. சோதனையான காலகட்டத்தில்தான் உண்மையான தொண்டர்களை அடையாளம் காண முடியும். தொண்டர்களிடமிருந்து வரும் கடிதங்களால் உற்சாகமாக இருக்கிறார். ' உயிரைக் கொடுத்தாவது கட்சியைக் காப்பாற்றுவேன்' என என்னிடம் கூறினார் சசிகலா' என்றார்.

" சிறை சந்திப்புகளுக்குப் பிறகு அ.தி.மு.க நிர்வாகிகள் இவ்வாறெல்லாம் பேட்டி அளித்தாலும், மனதளவில் உடைந்து போய் இருக்கிறார் சசிகலா. '15 நாள்களுக்கு ஒருமுறைதான் அவரைச் சந்திக்க முடியும். அதுவும் ஆறு பேர்தான் வர வேண்டும்' என்றெல்லாம் சிறை நிர்வாகம் கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டியின் உதவியால் அவருக்குச் சில உதவிகள் கிடைக்கின்றன. ரிவியூ மனு தொடர்பாகத்தான் அடிக்கடி சட்ட நிபுணர்களிடம் விவாதிக்கிறார். சசிகலாவைவிட இளவரசியின் நிலைதான் மிக மோசமாக இருக்கிறது" என விவரித்த கார்டன் நிர்வாகி ஒருவர்,

இளவரசி" அ.தி.மு.க நிர்வாகிகளும் எம்.எல்.ஏக்களும் கட்சி நிர்வாகம் தொடர்பாகவும் ஆட்சி தொடர்பாகவும் சசிகலாவை நேரில் சந்தித்துப் பேசுகின்றனர். இளவரசி மற்றும் சுதாகரனைப் பார்க்க அவர்களது உறவினர்கள் மட்டுமே வருகின்றனர். சிறையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு இளவரசிக்கு ரத்தக் கொதிப்பு நோய் இருந்ததில்லை. சிறை சென்றதிலிருந்து இரண்டு முறை மயங்கி விழுந்துவிட்டார். அவருக்குத் தேவையான மருந்து, மாத்திரைகளை விவேக் கொண்டு போய்க் கொடுத்து வருகிறார். 'அவருக்கு, சிறைக்கு வெளியே மருத்துவம் பார்க்க வேண்டும்' என விவேக் தரப்பினர் முன்வைத்த கோரிக்கையை சிறை நிர்வாகம் நிராகரித்துவிட்டது. கடந்த சில நாள்களுக்கு முன்பு இளவரசியின் மூத்த மகள் கிருஷ்ணபிரியா, இளைய மகள் ஷகிலா ஆகியோர் சந்திக்கச் சென்றனர். கிருஷ்ணபிரியாவுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். ஷகிலாவுக்கு இரண்டு பெண் பிள்ளைகள். அந்தக் குழந்தைகளைப் பார்த்ததும் கதறி அழுதுவிட்டார் இளவரசி. அவர்களிடம், ' சாமிகிட்ட கும்பிட்டா பாட்டி வெளிய வந்துவிடுவேன்' எனக் கலங்கியிருக்கிறார்.

விவேக்தொடர்ந்து பேசியவர், ' ஜெயில்ல இருந்து வரும்போது நான் பொணமாகத்தான் வருவேன். இங்க ஒவ்வொரு நாளும் நரகமா இருக்கு. நான் என்ன தப்பு பண்ணினேன்? எவ்வளவு சொத்து வாங்கிக் குவிச்சேன். இத்தனை வருஷ காலம், அவங்களுக்கு சமைச்சுப் போட்டதுக்கும் அவங்க சொன்ன இடத்துல கையெழுத்து போட்டதுக்கும்தான் இப்ப நான் அனுபவிச்சுட்டிருக்கேன். என்ன குற்றச்சாட்டின்கீழ் என்னைக் கைது பண்ணியிருக்காங்கன்னுகூட எனக்குத் தெரியாது. உடம்பு முன்ன மாதிரி சரியில்லை. எவ்வளவு நாள் உயிரோட இருப்பேன்னு தெரியலை' என அழுதவரிடம், ' கவலைப்படாதீங்க. இப்பவே போய் பிரே பண்றேன்' என கிருஷ்ணபிரியா மகன் ஆறுதல் கூறினார். இதேபோல், விவேக்கிடமும் கூறி அழுதிருக்கிறார் இளவரசி. இவர்கள் பார்த்துவிட்டுச் சென்ற பிறகு, இளவரசியின் அண்ணன் கண்ணதாசன் சந்திக்க வந்திருந்தார். அவரிடமும், ' எப்படியாவது வெளிய வரனும். என்ன நடக்குதுன்னே தெரியலை' எனக் கூறியிருக்கிறார். அவரை யாராலும் தேற்ற முடியவில்லை" என்றார் விரிவாக.


"ஆட்சி நிர்வாகத்துக்குள் நடக்கும் விவகாரங்கள் அனைத்தும் சசிகலாவின் கவனத்துக்கு உடனுக்குடன் அனுப்பப்படுகிறது. அதைக் கவனமாகக் கேட்டுக் கொள்கிறார். எந்த ஆலோசனைகளையும் அவர் தெரிவிப்பதில்லை. ' சீக்கிரம் வெளியே வந்துவிடுவோம்' என்று மட்டும் உறுதியாக நம்புகிறார் சசிகலா. 'எம்.எல்.ஏக்களின் அதிருப்திகளை எல்லாம் கொங்கு கேபினட் சமாளித்துவிடும்' எனவும் உறுதியாக இருக்கிறார். ரிவியூ மனு மீதான தீர்ப்பு தள்ளிப்போவதைப் பற்றித்தான் அதிகம் விவாதிக்கிறார். ' குடியரசுத் தலைவர் தேர்தலுக்குப் பிறகு விடுதலை ஆக வாய்ப்பு இருக்கிறது' எனவும் சிலர் உறுதிமொழி கொடுத்துள்ளனர். 'மத்திய அரசுக்கு எதிராக தேவையற்ற செயல்களில் ஈடுபட வேண்டாம்' என குடும்ப உறவுகளுக்குக் கட்டுப்பாடு விதித்திருக்கிறார். நேற்று திவாகரன் பவுண்டேஷன் என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றைத் தொடங்கத் திட்டமிட்டார் ஜெயானந்த். அதையும் சில நாள்களுக்குத் தள்ளி வைக்குமாறு உறவினர்கள் கூறியுள்ளனர். ஒவ்வொரு நடவடிக்கைகளையும் தீவிரமாக ஆலோசித்தே முடிவு செய்கிறார் சசிகலா" என்றார் விரிவாக.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad