Type Here to Get Search Results !

சர்க்கரைக்கு மாற்று பனங்கற்கண்டு... ஆனால், ஒரு விஷயத்தில் கவனம்..!


பனங்கற்கண்டு அல்லது கல்லாக்காரம். சித்த வைத்தியத்தில் முக்கிய பங்கு வகிக்கும் இது பனைநீர் அல்லது பதநீரைக் காய்ச்சிப் பெறப்படும் ஒரு பொருள். சர்க்கரைக்கு மாற்றாக பயன்படுத்தப்படும் இதில் கால்சியம், இரும்பு, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. மொத்தம் 24 வகையான இயற்கைச் சத்துகள் நிறைந்துள்ளதால் இது சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லதொரு வரப்பிரசாதமே. ஆனாலும் அதை அளவுடன் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும். இயற்கையான இனிப்புப்பொருளான பனங்கற்கண்டு, ரத்த அழுத்தத்தையும் குறைக்கக்கூடியது.


பனங்கற்கண்டு


அன்றாடம் நாம் காலையில் கண் விழிக்கும் கணம் முதல் இரவு கண்ணுறங்கும் வரை (உண்ணும்/அருந்தும்) காபி, டீ அல்லது ஜூஸ், பிஸ்கட், சாக்லேட் மற்றும் தின்பண்டங்கள் என இனிப்பு சார்ந்த எல்லாவகை உணவுப்பண்டங்களிலும் நீக்கமற நிறைந்திருப்பது சர்க்கரையே. இன்றைக்கு பெருவாரியான மக்கள் பல்வேறு நோய்களின் பிடியில் சிக்கித் தவித்து வருவதற்குக் காரணம் இந்தச் சர்க்கரையே. ஆகவே சர்க்கரைக்கு மாற்றாக பனங்கற்கண்டைப் பயன்படுத்துவோம். இதன் விலை அதிகமாக இருந்தாலும்கூட நோயின் பிடியிலிருந்து நம்மை நாமே காப்பாற்றிக்கொள்ள இதைப் பயன்படுத்துவோம். அதேநேரத்தில் பனைவெல்லம், நாட்டுச்சர்க்கரை போன்றவற்றையும் பயன்படுத்தலாம். நமது முன்னோர் பாலுடன் பனங்கற்கண்டு சேர்த்துக் காய்ச்சியே பயன்படுத்தி வந்தார்கள். இதனால் அவர்கள் தம் குரல்வளம் மாறாமல் இருந்ததோடு சிறுநீர் கழிக்கும்போது ஏற்படக்கூடிய எரிச்சல், காய்ச்சலின்போது வரக்கூடிய உடல் சூடு போன்றவற்றைத் தணிக்கும். குறிப்பாக இதில் உள்ள குளுக்கோஸ் மெலிந்து, தேய்ந்து வாடி ஒட்டிப்போன குழிவிழுந்த கன்னத்துடன் காட்சியளிக்கும் குழந்தைகளின் உடல்நிலையைச் சீராக்கி நல்ல சக்தியைத் தரும்.


இதன் பலனை அறிந்துகொண்டு குழந்தைப்பருவம் முதலே பாலுடன் பனங்கற்கண்டு சேர்த்துக் குடிக்கக் கொடுத்து வர வேண்டியது தாய்மாரின் இன்றைய தலையாய கடமைகளில் ஒன்றாக இருக்கிறது. இப்படி பாலுடன் சேர்த்துக் கொடுப்பதால் வெப்பத்தைத் தணிக்கும். சின்னம்மை, பெரியம்மை மற்றும் வெப்பத்தினால் ஏற்படக்கூடிய நோய்களில் அவதிப்படுவோருக்கும் இதை அடிக்கடி கொடுத்து வந்தால் எந்தவித பக்கவிளைவுகளும் இல்லாமல் வெப்பம் தணியும். மேலும் ஏதாவது ஒருவகையில் இதை அடிக்கடி பயன்படுத்தி வந்தால் உடல் வெப்பம் நீங்குவதோடு தாகம் தணியும். அதேநேரத்தில், சூட்டைத் தணித்து சளித்தொல்லையை ஏற்படுத்திவிடுமோ? என்று பயப்படத்தேவையில்லை.


பதநீர்


கர்ப்பிணிகள் சிறுநீர் பிரியாமல் மிகவும் அவதிப்படுவார்கள். அத்தகைய சூழலில் வெந்நீருடன் பனங்கற்கண்டு சேர்த்துக் குடிக்கக் கொடுத்து வந்தால் விரைவில் நிவாரணம் கிடைக்கும். சுக்கு, மிளகு, திப்பிலியுடன் சேர்த்துக் கொடுப்பதால் இருமல் குணமாகும். பாடகர்கள் மற்றும் செய்தி வாசிப்பாளர்கள், நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் போன்ற குரல் வழி பணி ஆற்றக்கூடியவர்களுக்கும் இது பெரிதும் நிவாரணம் அளிக்கிறது. சங்கீத வித்வான்கள் பனங்கற்கண்டைப் பாலுடன் சேர்த்து அருந்துவார்கள். இது அவர்களது குரல்வளத்தை குறையாமல் பாதுகாக்கும்.


பனங்கற்கண்டு


பனங்கற்கண்டு பால் என்பது மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் பிரசித்திப்பெற்றது. பாலுடன் மிளகு, பனங்கற்கண்டு சேர்த்துக் கொடுப்பார்கள். இந்தக் கலவையுடன் பூண்டு, மஞ்சள்தூள் சேர்த்துக் கடைந்து தருவதை பூண்டுப்பால் என்பார்கள். கைப்பிடி அளவு உரித்த பூண்டுப்பற்கள், 50 மி.லி பால், அதே அளவு தண்ணீர் விட்டுக் கொதிக்க வைத்து அடுப்பிலிருந்து கீழே இறக்குவதற்குமுன் மஞ்சள்தூள், மிளகுத்தூள் சேர்க்க வேண்டும். அதன்பிறகு அடுப்பிலிருந்து கீழே இறக்கி அவற்றை நன்றாகக் கடைந்து பனங்கற்கண்டு சேர்த்துக்குடித்தால் சளித்தொல்லை, இருமல் விலகுவதோடு மலச்சிக்கலும் விலகும். பால் கொடுக்கும் தாய்மார்களுக்கும் சத்தான ஓர் உணவாகப் பயன்படுகிறது.


பசியின்மை, செரிமானக்கோளாறு, வாய்வுத்தொல்லையால் அவதிப்படுபவர்கள் ஓமம், சுக்குப்பொடி, மிளகுப்பொடி, ஏலக்காய், திப்பிலியுடன் பனங்கற்கண்டு சேர்த்து நீர் விட்டு கொதிக்க வைத்து அருந்தினால் நல்ல நிவாரணம் கிடைக்கும். இந்தக் குடிநீர் உடல் வலியைப் போக்குவதோடு உணவுக்குழாயில் ஏற்படும் பிரச்னைகளையும் சரிசெய்யும். ஆஸ்துமா நோயாளிகள் ஓமம், ஆடாதொடை அல்லது அதன் இலைப்பொடி, கசகசாவுடன் பனங்கற்கண்டு சேர்த்து கஷாயம் தயாரித்துக் குடித்து வந்தால் நிவாரணம் கிடைக்கும்.


மேலும் பனங்கற்கண்டானது வாதம், பித்தம், கபம் போன்றவற்றை நீக்குவதுடன் இதை உண்பவர்களை திடகாத்திரத்துடன் இருக்கச்செய்யும். பாலில் சேர்த்துக் காய்ச்சிக் குடித்து வந்தால் மார்புச்சளியை நீக்குவதோடு தொண்டைப்புண், தொண்டை வலி போன்றவற்றையும் குணப்படுத்தும். டைபாய்டு, காய்ச்சல் போன்றவற்றை குறைக்கும்.


பனங்கற்கண்டில் உள்ள கால்சியம் பற்களை உறுதிப்படுத்தி ஈறுகளில் உள்ள ரத்தக்கசிவை தடுக்கும். மேலும், பற்களின் பழுப்பு நிறத்தைப் போக்கக்கூடியது. சொறி, சிரங்கு உள்ளிட்ட தோல் நோய்களில் இருந்து நிவாரணம் தருவதுடன் கண் நோய், ஜலதோஷம், டி.பி உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு அருமருந்தாக அமைகிறது.


சுக்கு காபி


பனங்கற்கண்டு பாயசம்

பனங்கற்கண்டில் பாயசம் செய்து சாப்பிடுவதாலும் சில நன்மைகள் நம்மை வந்து சேரும். பாதாம்பருப்பை ஊற வைத்து மிக்ஸியில் போட்டு பொடித்து வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு காய்ச்சிய பாலுடன் பொடித்த பாதாம் சேர்த்துக் கிளற வேண்டும். நெய்யில் பொடித்த முந்திரி, உலர்திராட்சையை வதக்கிச் சேர்ப்பதோடு, பனங்கற்கண்டும் சேர்த்துக் கிளறி இறக்கினால் பனங்கற்கண்டு பாயசம் ரெடி. சத்தான ஓர் உணவாகும். கோதுமைக்குருணையுடன் பாசிப்பருப்பு சேர்த்து வேக வைத்து தேங்காய்த்துருவலைச் சேர்த்துக் கிளற வேண்டும். அத்துடன் ஏலக்காய், முந்திரி, திராட்சை சேர்ப்பதுடன் நெய், பனங்கற்கண்டு சேர்த்து செய்யப்படும் இந்த பனங்கற்கண்டு பாயசமும் சத்தான உணவே.இளநீர் பானம்


லேசான வழுக்கை உள்ள இளநீருடன் பனங்கற்கண்டு, ஏலக்காய் சேர்த்து மிக்ஸியில் ஓட விட்டு எடுத்தால் அருமையான பானம் ரெடி. இது அருந்த அருந்த அருமையாக இருப்பதோடு ஹெல்த்தியான ஒரு பானமும்கூட.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad