எல்லை பேச்சுவார்த்தைக்காக வடகொரியாவுக்குச் செல்ல விருப்பம்: தென் கொரிய அதிபர்
வடகொரியாவுடன் எல்லைப் பிரச்சினை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த அந்நாட்டுக்குச் செல்ல விரும்புவதாக தென் கொரியாவின் புதிய அதிபர் மூன் ஜே இன் கூறியுள்ளார்.
தென் கொரியாவின் அதிபராக இருந்த பார்க் குவென் ஹை ஊழல் குற்றச்சாட்டு மற்றும் பதவியை தவறாக பயன்படுத்திய குற்றத்துக்காக பதவி பறிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து மே 9-ம் தேதி தென் கொரிய அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான 80% வாக்குகளில் கொரியாவின் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த மூன் ஜே இன் 40% வாக்குகள் பெற்று தென் கொரியாவின் புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து புதன்கிழமை திரண்டிருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் மூன் ஜே இன் உரையாற்றும்போது, "தென் கொரியாவில் நிலவும் பாதுகாப்பு நெருக்கடிகளை முதன்மையாக தீர்க்க வேண்டும். அதற்குத் தேவை ஏற்பட்டால் அமெரிக்கா, சீனா ஜப்பான் ஆகிய நாடுகளுடன் உரையாடத் தயாராக இருக்கிறேன்.எல்லை பிரச்சினை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த வடகொரியாவுக்குக் கூட செல்ல விரும்புகிறேன்.
நான் வெறும் கைகளுடன்தான் இந்தப் பதவியை ஏற்றுக் கொண்டிருக்கிறேன். அதே போன்று இப்பதவியிலிருந்து விடைபெறும்போது வெறும் கைகளுடன்தான் செல்வேன்" என்றார்.
முன்னாள் மனித உரிமைகள் வழக்கறிஞராக இருந்த மூன் ஜே இன் வட கொரிய அகதிகளின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.