மே 21ம் தேதி முதல் டெல்லியில் மீண்டும் விவசாயிகள் போராட்டம் : முதல்வரை சந்தித்த பின் அய்யாக்கண்ணு அறிவிப்பு
சென்னை : தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு டெல்லியில் மீண்டும் 21ம் தேதி முதல் போராட்டம் நடத்தப்போ வதாக அறிவித்துள்ளார். கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நேற்று காலை அய்யாக்கண்ணு சந்தித்து பேசினார். 30 நிமிட சந்திப்புக்கு பிறகு, வெளியே வந்த அய்யாக்கண்ணு நிருபர்களிடம் கூறியதாவது: கூட்டுறவு சங்கத்தில் வாங்கிய சிறு, குறு விவசாயிகளின் கடன்களை தமிழக அரசு தள்ளுபடி செய்துள்ளது. எங்களது சார்பில், பெரிய விவசாயிகள் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தோம். அந்த வழக்கில், உயர் நீதிமன்றம் சிறிய மற்றும் பெரிய விவசாயிகள் கடன்களையும் தள்ளுபடி செய்ய உத்தரவிட்டுள்ளது. இதுபற்றியும் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம். இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யக்கூடாது என்றும் வலியுறுத்தினோம். முதல்வரும், அதற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
தேசிய வங்கிகள் சார்பில் எங்களது நகை, நிலங்களை ஏலம் விடப்போவதாக நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். அதனால், அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் மூலம் இதற்கு சரியான தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கையையும் முதல்வரிடம் தெரிவித்தோம். வருகிற 18ம் தேதி தமிழக விவசாயிகள் மீண்டும் டெல்லி செல்கிறோம். அங்கு அனைத்து மாநில விவசாயிகள் சங்க நிர்வாகிகளை சந்தித்து பேசுகிறோம். சுமார் 300 சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளோம். இதைத்தொடர்ந்து வருகிற 21ம் தேதி டெல்லியில் ஆலோசனை கூட்டம் நடத்துவோம். இந்த கூட்டத்தில், விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பாராளுமன்றத்தை முற்றுகையிடுவதா, பிரதமர் அலுவலகத்தை முற்றுகையிடுவதா அல்லது ஏற்கனவே போராட்டம் நடத்தி ஜந்தர்மந்தரில் கோவணத்துடன் மீண்டும் போராட்டம் நடத்துவதா என்பது குறித்து வருகிற 21ம் தேதி முடிவு செய்ய உள்ளோம். டெல்லி செல்வதற்கு முன், தன்னை சந்தித்து விட்டு செல்லும்படி முதல்வர் எடப்பாடி எங்களிடம் கேட்டுக் கொண்டார்.