புரோ கபடி லீக் வீரர்கள் ஏலம் சேலம் வீரர் செல்வமணி 73 லட்சத்துக்கு ஒப்பந்தம்
புதுடெல்லி: புரோ கபடி லீக் தொடரின் 5வது சீசனுக்கான வீரர்கள் ஏலத்தில், சேலம் வீரர் செல்வமணியை 73 லட்சத்துக்கு ஜெய்ப்பூர் அணி வாங்கியுள்ளது. ஐபிஎல் டி20 தொடரைப் போல நகரங்களை அடிப்படையாகக் கொண்ட அணிகள் மோதும் புரோ கபடி லீக் தொடர் கடந்த 2014ம் ஆண்டு தொடங்கி வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை 8 அணிகள் பங்கேற்று வந்த நிலையில், 5வது சீசனில் கூடுதலாக சென்னை உட்பட 4 அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன. சென்னை அணியின் உரிமத்தை கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த தொடருக்கான வீரர்கள் ஏலம் டெல்லியில் நேற்று நடந்தது. உத்தரப்பிரதேச அணி சார்பில், இளம் வீரர் நிதின் தோமர் அதிகபட்சமாக 93 லட்சத்துக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். ரோகித் குமாரை 81 லட்சத்துக்கு பெங்களூரு அணியும், மன்ஜீத் சில்லாரை 75.5 லட்சத்துக்கு ஜெய்ப்பூர் அணியும் வாங்கின. சேலம் வீரர் கே.செல்வமணி 73 லட்சத்துக்கு ஜெய்ப்பூர் அணியால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சென்னை அணிக்காக அமித் ஹூடா 63 லட்சத்துக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.