தினமும் அதிகம் சேர்க்க கூடாத 5 உணவு
நாம் சாப்பிடுவது ஆரோக்கியமானதா, சத்தானதா என யோசிக்க ஆரம்பித்தால், நம் உணவு பட்டியலில் பல உணவுகள் இருக்காது. அப்படி அன்றாட பட்டியலில் அதிகம் சேர்த்துக்கொள்ளக்கூடாத 5 உணவுகள் இருக்கின்றன. அவை இதோ...
1. உங்கள் சாப்பாட்டு மெனுவில் பெரும்பாலும் வெள்ளை அரிசியால் ஆன உணவுகளாக இருந்தால், உங்களுக்கு நுண் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. மூன்று வேளையும் இதைச் சாப்பிட்டால், உடல்பருமன் மற்றும் டைப் 2 சர்க்கரைநோய் உண்டாகும். சாதம் மட்டுமல்ல, வெள்ளை அரிசியால் தயாரிக்கப்பட்ட நூடுல்ஸ், பாஸ்தா, பிரெட் போன்றவற்றையும் தவிர்ப்பதே நல்லது.
2. நமது நாடு வெப்பநாடு. எனவே, நமது ஆரோக்கியத்துக்கு தாவர உணவுகள்தான் சரியான சாய்ஸ். பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளில் உப்பின் அளவு அதிகமாக இருப்பதால், உயர் ரத்தஅழுத்தம் மற்றும் இதய நோய் வருவதற்கான ஆபத்து உள்ளது.
அசைவ உணவுகளில் இருக்கும் புரதம் சரியாக செரிமானம் ஆகாமல் நச்சுக்களாக மாறுகிறது. அவை நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பாதித்து, நம்மை பலவீனமாக மாற்றுகிறது. அசைவ உணவுகளுடன், நார்ச்சத்து நிறைந்த உணவுகளையும் சேர்த்து உண்டால், எளிதாக செரிமானமாகிவிடும்.
3. காபியும், டீயும் நம் மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகின்றன. அதுமட்டுமல்ல, பார்கின்சன் நோய் (Parkinson’’s disease) மற்றும் அதிரோஸ்கிளிரோசிஸ் (Atherosclerosis) போன்றவை வராமல் தடுக்கின்றன. ஆனால், அதிக அளவில் காபி, டீ அருந்துவது நமது இதய துடிப்பையும், ரத்த அழுத்தத்தையும் அதிகரிக்க செய்யும். மனஅழுத்தத்தை உருவாக்கக்கூடிய அட்ரினலின் மற்றும் கார்டிசோல் எனப்படும் ஹார்மோன்களின் உற்பத்தியை தூண்டும். இதனால் மனஅழுத்தம், பதற்றம், சோர்வு, கவனமின்மை ஆகியவை உண்டாகும். உணவுகளில் இருந்து கிரகிக்கப்படும் கால்சியத்தை காபியில் உள்ள `காஃபின்’ தடுப்பதால், `ஆஸ்டியோபொரோசிஸ்’ எனப்படும் எலும்பு சம்பந்தமான நோய்களும் உண்டாகும். அதே நேரத்தில், பால் உணவுகளும் சளி, இருமல், சுவாச பிரச்னைகள், ஆஸ்துமா ஆகியவற்றை அதிகப்படுத்தும். இரவில் பால், தயிர், மோர் போன்றவற்றை தவிர்க்கவேண்டும். அவற்றுக்கு பதில் சுக்கு காபி, மூலிகைச்சாறு, காய்கறி சூப், சத்துமாவு கஞ்சி போன்றவற்றை அருந்தலாம்.
4. வெள்ளை சர்க்கரை சேர்க்காத இனிப்பு உணவுகளே இல்லை என்கிற அளவுக்கு அதன் ஆதிக்கம் இன்றைக்கு அதிகமாகிவிட்டது. பெரும்பாலான பெண்களுக்கு வரும் ஆஸ்டியோபொரோசிஸ் நோய்க்கும், பல புற்றுநோய்கள் வளர்வதற்கும், சர்க்கரைநோய்க்கும் சர்க்கரைதான் காரணம். உற்பத்தியான நாளில் இருந்து ஆறு மாத காலத்துக்கு மேற்பட்ட சர்க்கரையை சாப்பிடக்கூடாது. காரணம், அதில் உள்ள ரசாயனம் நஞ்சாக மாறிவிடும்.பல் வலி, பல் சொத்தை, குடற்புண், சளித்தொல்லை, உடல்பருமன், இதய நோய், ரத்த அழுத்தம், சர்க்கரைநோய் போன்ற பெரிய வியாதிகள் அனைத்துக்கும் இதுதான் முக்கிய காரணம். பேரீச்சை, உலர் திராட்சை, பனைவெல்லம், நாட்டு வெல்லம் ஆகியவற்றை வெள்ளை சர்க்கரைக்கு மாற்றாக பயன்படுத்தலாம்.
5. இன்று 18 வயது இளைஞர்கள் சிலர், 80 கிலோ எடை வரை இருக்க முக்கிய காரணம் நொறுக்குத்தீனிகள்தான். எண்ணெயில் பொரித்த உணவுகளில் அதிகமான கொழுப்பு மற்றும் கலோரிகள் உள்ளன. உதாரணமாக, 10 கிராம் சிப்ஸில் 10 கிராம் கொழுப்பு மற்றும் 154 கலோரி அடங்கியுள்ளது. சிப்ஸ்களில் சேர்க்கப்படும் உப்பு, உடல் உறுதியை கெடுக்கக்கூடியது; ரத்த அழுத்தத்தை அதிகரிக்கச்செய்வது. அடிக்கடி எண்ணெயில் பொரித்த உணவுகளை சாப்பிட்டால், ரத்தத்தில் கொழுப்பின் அளவு அதிகரிக்கும்.