எனக்கும் தோனிக்கும் இடையே எந்த பிரச்சினையும் இல்லை புனே கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் விளக்கம்
இந்தியன் பிரீமியர் லீக் 10-வது போட்டித் தொடர் தொடங்கவுள்ள நிலையில் ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தனக்கும் தோனிக்கும் இடையே எந்த வித பிரச்சினைகளும் இல்லை என்று கூறியுள்ளார். “எனக்கும் தோனிக்கும் இடையே எந்த வித பிரச்சினைகளும் இலை, நாங்கள் செய்திகளைப் பரிமாறிக் கொண்டோம், தோனி மிகவும் ஆதரவாக இருக்கிறார். அவரோடு மட்டுமல்ல எந்த ஒரு வீரரிடமும் எனது தொழில்பூர்வ உறவு மாறப்போவதில்லை” என்றார் ஸ்மித். இவர், அஜிங்கிய ரஹானே, பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் புனே சூப்பர் ஜெயண்ட் அணியின் சீருடை அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த முறை முதல் முதலாக களமிறங்கிய புனே அணி பட்டியலில் 7-ம் இடம் பிடித்து பின்னடைவு கண்டது. “நான் பேசுவதற்கு நிறைய பேர் இருக்கிறார்கள், ஆனால் நான் நிறைய பேரிடம் கலந்தாலோசிக்கப்போவதில்லை. ஏனெனில் அதிகப் பேரிடம் கருத்துக் கேட்கும் போது அது நம் முடிவை மறைத்து விடும். எனவே தெளிவாக இருக்க விரும்புகிறேன். ஆனால் சில வேளைகளில் என்னிடம் சிலதை தெரிவிக்க நினைக்கும் போது அவர்களை வரவேற்கிறேன்” என்றார் ஸ்மித். தோனியை கேப்டன்சியிலிருந்து நீக்கியது பற்றி கோயெங்கா கூறும்போது, “ஏப்ரல் 3-ம் தேதி தோனி அணியுடன் இணைகிறார், அவர் எங்களுடன் தொடர்பில் இருந்து வருகிறார், அனைத்தும் சுமுகமாகவே உள்ளது, கேப்டன்சி பற்றி ஏகப்பட்டது விவாதிக்கப்பட்டது, ஆனால் தோனி மிகவும் கூர்மையான மதியுள்ளவர், நான் அவருடன் முன்னரே பணியாற்றியிருக்கிறேன், அவரது மிகப்பெரிய விசிறி. அணியில் முழுதுமான ஒரு ஒற்றுமை உணர்வு உள்ளது. ஸ்மித் ஆஸ்திரேலியா அணியை வழிநடத்தியது என்னை ஈர்த்தது” என்றார். தோனி குறித்து ரஹானே கூறும்போது, “அவர் கேப்டனோ இல்லையோ தோனி போன்ற ஒருவர் இருப்பதே பெரிய உத்வேகம், அவரிடமிருந்து கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது” என்றார்.