கேரி கர்ஸ்டன் கருத்து நான் பணியாற்றியதில் சிறந்த கேப்டன் தோனி
எம்.எஸ்.தோனி தனது ‘பினிஷிங்;’ திறமைகளை இழந்து விட்டார் என்று சமீபத்தில் எழுந்துள்ள கருத்துகளை முன்னாள் இந்திய அணி பயிற்சியாளர் கேரி கர்ஸ்டன் ஏற்கவில்லை. தோனி விமர்சகர்களுக்கு அவர் கூறும்போது, “தோனியிடம் 3 ஆண்டுகளில் மாற்றம் ஏற்பட்டுவிட்டதாக நான் கருதவில்லை. நான் பணியாற்றியதில் சிறந்த தலைவர் தோனியே. என்னுடைய கருத்தில் இந்தியாவின் சிறந்த கேப்டன்களில் தோனிக்கு இடமுண்டு என்பதில் மாற்றமில்லை. இதில் விவாதிக்க எதுவும் இல்லை. பினிஷராக அவரது பேட்டிங் சாதனைகளை எடுத்துப் பாருங்கள். எனவே அவரது திறமையைச் சந்தேகிப்பவர்கள் பெரும்தவறிழைக்கின்றனர். அவர் ஒரு கிரேட் பிளேயர். அனைத்து கிரேட் பிளேயர்களைப் போலவும் இவரும் தனது கிரிக்கெட் வாழ்வின் இறுதி வரை சிறந்த ஆட்டங்களை வெளிப்படுத்துவார். தோனியை அவரது முடிவுக்கே விட்டுவிடுவதுதான் நல்லது. அவரிடம் இன்னும் உலகக்கோப்பை வெற்றி ஆட்டம் மீதமுள்ளது” என்றார். அனில் கும்ப்ளே பயிற்சி பற்றி கர்ஸ்டன் கூறும்போது, “பயிற்சி பொறுப்பு பற்றி ஒருவர் நன்கு அறிந்திருக்க வேண்டும். அதாவது பயிற்சியாளராக ஒருவர் தனது இடம் என்ன என்பதை புரிந்து கொள்ள வேண்டும். தான் என்ன மதிப்பீடுகளை அணிக்குள் கொண்டு செல்லப் போகிறோம் என்பதையும் அறிந்திருக்க வேண்டும். அனில் கும்ப்ளே ஒரு மிகப்பெரிய மனிதர். அவரிடம் ஒரு அருமையான மதிப்பீட்டு ஒழுங்கு உள்ளது. அவர் ஒரு கிரேட் பிளேயர், சக வீரர்களின் மரியாதையை பெற்றிருப்பவர். இந்திய அணிக்கு ஒரு இந்திய வீரர் பயிற்சியாளராக இருப்பது பெருமைக்குரியது. அவர் உடனடியாக வெற்றிகாணத் தொடங்கியுள்ளார், இதில் ஆச்சரியம் எதுவுமில்லை. ஒரு அணியின் பயிற்சியாளராக செயல்பட அவருக்கு அனைத்துவிதமான தகுதிகளும் உள்ளன” என்றார்.