Type Here to Get Search Results !

ரெய்னா நீக்கம் காரணம் இதுதான்




புதுடில்லி: காய்ச்சல் குணமான போதும், இந்திய அணியில் ரெய்னாவுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதன் காரணம் தற்போது தெரியவந்துள்ளது. புதிதாக சேர்க்கப்பட்ட யோ யோ உடற்தகுதி தேர்வில் இவர் பெயில் ஆகிவிட்டாராம். இந்திய அணி வீரர் ரெய்னா, 29. இதுவரை 223 ஒருநாள் போட்டிகளில் 5568 ரன்கள் குவித்துள்ளார். பார்ட் டைம் பவுலராகவும் செயல்படுவார். இருப்பினும், இந்திய ஒருநாள் அணியில் இவரது இடம் சமீபகாலமாக நிரந்தரமில்லாமல் போய்விட்டது. கடந்த ஒரு ஆண்டுக்குப் பின், ஒருவழியாக நியூசிலாந்து தொடரில் வாய்ப்பு வந்தது. இவரது கெட்ட நேரமோ, என்னவோ தெரியவில்லை, திடீரென காய்ச்சல் வர, முதல் ஒருநாள் போட்டியில் பங்கேற்க முடியவில்லை. கோல்கட்டாவில் நடந்த இரண்டாவது போட்டிக்காக பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டார். இதனால் இவர் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில், ரெய்னா இன்னும் தேறவில்லை என, செய்தி வெளியானது. தொடர்ந்து அடுத்த போட்டியிலும் இதே நிலை நீடித்தது. இந்நிலையில் மீதம் இருந்த இரு ஒருநாள் போட்டிக்கான அணியிலும் ரெய்னாவுக்கு இடமில்லை என அறிவிக்கப்பட்டது. இவருக்குப் பதில் இடம் பிடித்த கேதர் ஜாதவ், அணியின் நம்பிக்கையை பெற்றதால் தான் ரெய்னா, கழற்றி விடப்பட்டார் என கூறப்பட்டது. ஆனால், ரெய்னா காய்ச்சல் குணமான போதும், புதிதாக கொண்டு வரப்பட்ட யோ யோ என்ற உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என, இப்போது தான் தெரிகிறது. ஒரு ஆண்டுக்கு முன் என்றால், இந்நேரம் ரெய்னா அணிக்கு திரும்பி இருப்பார்.

மாறிய நிலைமை:

இப்போது நிலை மாறிவிட்டது. அதாவது பயிற்சியாளர் கும்ளே, கேப்டன்கள் தோனி (ஒருநாள், டுவென்டி20), கோஹ்லி (டெஸ்ட்) மற்றும் தேர்வுக்குழுவினர் இணைந்து வீரர்கள் உடற்தகுதி தேர்வில் கட்டாயம் பாஸ் ஆக வேண்டுமாம். இது கோஹ்லியின் உத்தி என, நம்பப்படுகிறது. இதன்படி, சமீபத்தில் நடந்த தேர்வாளர்கள், அணி நிர்வாகிகள் கூட்டத்தில், உடற்தகுதி இல்லாத வீரர்களை தேர்வு செய்ய வேண்டாம் என, ஒருமனதாக முடிவு எடுத்துள்ளனர்.

காரணம் இதுதான்

இந்த அடிப்படையில் தான், போட்டிகளில் பங்கேற்காத வீரர்களாக இருந்தாலும், அவர்கள் இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) ஒப்பந்தத்தில் இருந்தால், தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சீரான இடைவெளியில் சென்று, உடற்தகுதியை நிரூபித்து வருகின்றனராம். சமீபத்தில் யுவராஜ் சிங்கிற்கு கூட இதுபோல நடந்தது. இதில் எலும்பின் திறமையை சோதிக்கும் டெக்சா ஸ்கேன் உட்பட பல சோதனைகள் நடக்கும். இப்போது புதிதாக யோ யோ டெஸ்ட் சேர்ந்துள்ளது. இதில் தேறவில்லை எனில் இடம் கிடைக்காது. தவிர, வருடாந்திர ஒப்பந்தத்தில் இருந்தும் கழற்றி விடப்படுவராம்

யோ யோ என்றால்..

வீரர்களிடம் உள்ள ஆற்றலைச் சோதிக்கும் டெஸ்ட் யோ யோ என்றழைக்கப்படும். இதில் 20 மீ., துாரத்திற்கு வீரர்கள் ஓட வேண்டும். அவர்கள் ஓடும் வேகத்தை சிறப்பு கருவிகள் பயன்படுத்தி கணக்கிடப்படும். சம்பந்தப்பட்ட வீரர், எந்தளவுக்கு ஆக்சிஜனை எடுத்துக் கொள்கிறார் என, பார்க்கப்படும். இதன் அடிப்படையில் உடற்தகுதி முடிவு செய்யப்படுகிறது



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad