Type Here to Get Search Results !

எதிர்காலத்தை துல்லியமாக அறிய இத்தனை வழியா





எதிர்காலத்தை பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டும் என்றால் ஜோதிடம் பார்ப்பது வழக்கம். நமது ஊர்களில் கைரேகை ஜோதிடம், கிளி ஜோதிடம், குறி சொல்லுதல் போன்றவை பிரபலம். சிலர் இதை மூட நம்பிக்கை என்று கூட கூறுவார்கள்.

வளர்ந்து வரும் அறிவியல் விஞ்ஞான உலகத்தில் இதை எல்லாம் யாராவது நம்புவார்களா என பலர் கூறுவதுண்டு. ஆனால், இந்த ஜோதிடம், குறி சொல்லுதல் போன்றவை எல்லாம் நமது நாட்டில் மட்டும் பின்பற்றப்படும் ஒன்றல்ல.  சீனா, எகிப்து, ஐரோப்பிய, ஆப்ரிக்கா என பல உலக நாடுகளில் பண்டையக் காலத்தில் இருந்தே இவை பின்பற்றப்படுகின்றன. ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு முறையில் எதிர்காலத்தை பற்றி குறி சொல்லுவது நடைமுறையில் இருந்துள்ளன....

1) ஆரக்கிள்

ஆரக்கிள் என்பதன் பொருள் தேவ வாக்கு அல்லது அசரீரி ஆகும். பழங்காலத்தில் ஆரக்கிள் என்பது ஓர் நபர் ஆவார். இவர் புத்திமதி அல்லது ஆலோசனைகளை தருபவராக இருந்தார். இவர் தான் எதிர்காலத்தை பற்றிய தீர்க்கதரிசன கணிப்புகள் பற்றி கூறுவார். இந்த முறை ஒருவிதமான தெய்வீக முறையாக இருந்து வந்தது. லத்தீன் வார்த்தையில் ஆரக்கிள் என்றால் "பேசு" என்று பொருள்.

ஆரக்கிள் பேசுவது கடவுளே நேரில் பேசுவது போன்றும், அவர் கூறும் வார்த்தைகள் கடவுளின் வாக்கு என்றும் கடைப்பிடிக்கப்பட்டது. நாம் கூட நமது ஊர்களில் இதை காண முடியும். ஆனால், இன்று நிறைய போலிகள் தான் இருக்கிறார்கள்.

2) சீட்டுகளைக் கொண்டு குறி சொல்லும் கலை

சீட்டு ஆட பயன்படும் சீட்டு கட்டு கார்டுகளை கொண்டு குறி சொல்லும் முறை ஆகும். 18, 19-ம் நூற்றாண்டுகளில் இது மிகவும் பிரபலமாக இருந்து வந்தது. ஆசியா, எகிப்து, வடக்கு ஆப்ரிக்கா மற்றும் ஐரோப்பிய பகுதிகளில் இவை செயல்பாட்டில் இருந்தன.

3) பகடை முறை

பகடை உருட்டி குறி சொல்லும் முறை இது. வரலாற்றில் மிகவும் பழமையான முறையில் இதுவும் ஒன்றாகும். பண்டைய கிரேக்க முறையில் குறி சொல்வதற்கு இந்த பகடை முறை பின்பற்றப்பட்டுள்ளது. ரோமர்கள் இதை தலி (Tali) என்று கூறிவந்துள்ளனர். நான்கு பகடைகளை ஒரே நேரத்தில் உருட்டி அதில் விழும் எண்களை வைத்து குறி கூறப்படுகிறது.

இதில் 1,3,4,6 என விழுந்தால் மிகவும் நல்லது என்றும், 1,1,1,1 என்று விழுவது மிகவும் மோசமானது என்றும் கூறப்படுகிறது.

4) மேற்கத்திய ஜோதிட முறை

மேற்கத்திய ஜோதிட முறை என்பது ஜாதகம் குறித்தது ஆகும். பிறந்த தேதி, சூரிய அடையாளம் அல்லது குறி போன்றவற்றை வைத்து எதிர்காலத்தை பற்றி கூறும் முறை இதுவாகும். ஓர் வருடத்தை 12-ஆக பிரித்து ஒவ்வொரு காலக்கட்டத்திற்கும் சூரியனின் நிலை ஒவ்வொரு இடத்தில் இருப்பதை குறித்து வெவ்வேறு இராசிகள் மற்றும் இராசி குறித்த குணாதிசயங்கள், திறமைகள் பற்றி விளக்கி கூறப்படுகிறது.

5) சீன முறை ஜோதிடம்

உலகிலேயே பழமையான ஜோதிட முறை சீனர்களுடையது என கூறப்படுகிறது.சீனாவில் ஒவ்வொரு வருடமும் ஓர் விலங்கை அந்த ஆண்டின் குறியாக வைத்துக் கொள்வார்கள். எடுத்துகாட்டாக நீங்கள் 1968 ஜனவரி 30-ல் இருந்து 1969 பிப்ரவரி 16-ம் நாள் வரை பிறந்திருந்தால் உங்களுக்கான சீன விலங்கு குறி குரங்கு, மற்றும் காஸ்மிக் தனிமம் பூமி. இது போன்று பல குறிகள் சீன முறையில் இருக்கிறது.

6) எண் கணிதம்

எண் கணிதம் என்பது நமது பெயரில் இருக்கும் எழுத்துக்களுக்கு எண் மதிப்பு கொடுத்து அதன் கூட்டு தொகையை வைத்து கூறப்படும் குறி சொல்லும் முறையாகும். ஒருவரது பலம், பலவீனம், தேவைகள், தடைகள், உணர்ச்சி வெளிபாடு, அவரது செயல்பாடுகள் என அனைத்தை பற்றியும் அறிந்து கொள்ள இந்த எண் கணித முறை பயன்படுத்தப்படுகிறது.

மேலும் நீங்கள் பிறந்த நாள் மற்றும் நேரத்தை வைத்து உங்கள் அதிர்வெண்கள் பற்றியும் கண்டறிகிறார்கள். பெயர் மற்றும் பிறந்த தேதியை வைத்து ஒரு நபரின் குணாதிசயங்கள் அனைத்தையும் எண் கணித முறையில் கூறப்படுகிறது.

7) கைரேகை ஜோதிடம்

ஏறத்தாழ 3000 ஆண்டுகளுக்கும் பழமையானது இந்த கைரேகை ஜோதிடம். கை ரேகையில் இருக்கும் கோடுகள், குறிகளை வைத்தும், அதன் நீளத்தை வைத்தும் ஒருவரின் இறந்த கால, எதிர் காலத்தை பற்றி கூறுவது தான் இந்த கைரேகை ஜோதிட முறை.

உங்கள் வாழ்க்கை பயணத்தின் பிரதி தான் உங்கள் கைரேகை என ஜோதிடர்கள் கூறுகிறார்கள். உறவுகள், உடல்நலம், வேலை, பொருளாதாரம், பயணம், எப்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும், எப்போது முடிவெடுக்க வேண்டும் என்பது பற்றியும் இதில் கூறப்படுகிறது.

8) நாடி ஜோதிடம்

பல வருடங்களுக்கு முன்னர் இன்று பிறந்த குழந்தையை பற்றி எழுதி வைக்கப்பட்ட ஏடுகளை வைத்து கூறப்படும் ஜோதிடம் தான் நாடி ஜோதிடம். கட்டை விரல் ரேகையை வைத்து ஏடுகள் எடுத்து படிக்கிறார்கள். ஆனால், பல ஏடுகள் அழிந்துவிட்டன என்றும், இன்று பலரும் போலி ஏடுகளை தயாரித்து ஜோதிடம் கூறி வருகிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

9) கிளி ஜோதிடம்

இது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். கடவுள்கள் படம் அச்சடிக்கப்பட்ட கார்டுகளை வைத்து, கூண்டில் இருந்து வரும் கிளி எந்த சீட்டை தேர்வு செய்து தருகிறதோ, அதில் வந்திருக்கும் கடவுளை வைத்து ஒருவருக்கான குறி சொல்லப்படுகிறது.

10) குறி சொல்லுதல்

நமது ஊர்களில் குறி சொல்லும் முறையே ஒன்று தனியாக இருக்கிறது. வெறுமென கையையும், முகத்தையும் பார்த்தே ஒருவரது எதிர்காலத்தை பற்றி இந்த குறி சொல்லும் முறையில் கூறப்படுகிறது.


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad